standardised

மு.மு. இஸ்மாயில்

From Tamil Wiki
Revision as of 10:39, 24 April 2022 by Tamizhkalai (talk | contribs)
மு. மு. இஸ்மாயில் (பிப்ரவரி 8, 1921 – ஜனவரி 17, 2005)

மு. மு. இஸ்மாயில் (பிப்ரவரி 8, 1921 – ஜனவரி 17, 2005) தமிழறிஞர், எழுத்தாளர், கம்ப இராமாயண ஆய்வாளர், கம்பராமாயணச் சொற்பொழிவாளர், சென்னைக் கம்பன் கழகத்தின் நிறுவனத் தலைவர். நீதியரசர்.

தனிவாழ்க்கை

மு.மு. இஸ்மாயில் நாகபட்டணம் மாவட்டத்தில் உள்ள நாகூரில் பி. முஹம்மது காசிம் மரைக்காயர் -  ருகையா பீவி தம்பதியருக்கு பிப்ரவரி 8, 1921-ல் பிறந்தார். சிறுவயதிலேயே பெற்றோர்களை இழந்தவர். துணைவியார் பல்கீஸ்.  மு.மு. இஸ்மாயிலுக்கு மூன்று ஆண் குழந்தைகள் (காதர் ஹுசைனுத்தீன், ஜஹபர் சுல்தான், காசிம் மரைக்கார்). ஒரு பெண் குழந்தை, பாத்திமா பல்கீஸ். உடன் பிறந்தவர்கள் ஜக்கரியா மரைக்கார், உம்மு ஹனிமா. சகோதரர் ஜக்கரியா மரைக்கார், நாகூர் பிரபல எழுத்தாளர் ஆபிதீனுடைய மாமனார். உடன்பிறந்த சகோதரி உம்மு ஹனிமா என்பவர் லுக்மான் ஆலிம் சாயபுவின் துணைவியார்.

இஸ்மாயில் நாகூரில் பள்ளிப் படிப்பை நிறைவுசெய்தார். சென்னை மாநிலக் கல்லூரியில் கணிதத்தில் இளங்கலை (சிறப்பு) பட்டம் (Bachelor of Arts - Honours) பெற்றார். சென்னை சட்டக் கல்லூரியில் சட்டக்கல்வியை 1945-ல் முடித்தார். சென்னை வழக்குரைஞர் சங்கத்தில் பதிவு செய்துகொண்டு 1946 முதல் 1959 வரை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞராகத் தொழில் புரிந்தார். கல்லூரியில் படிக்கும்போது பேராசிரியர் கே. சுவாமிநாதனிடமிருந்து காந்தியச் சிந்தனைகளை உள்வாங்கி காந்தியத்தின்பால் ஈடுபாடுகொண்டார். ஏ.வி.ரமணனின் தந்தையான ஆராவமுது ஐயங்கார் என்ற தமிழறிஞரிடம் எஸ்.எஸ்.எல்.சி.யில் பாடம் கேட்டார்.

1951 முதல் 1959 வரை சென்னை சட்டக் கல்லூரியில் பகுதிநேர விரிவுரையாளர், தமிழக அரசின் கூடுதல் வழக்கறிஞராக பணியாற்றினார். பிப்ரவரி, 1967 -ல் தில்லி உயர்நீதி மன்றத்தில் கூடுதல் நீதிபதியாக நியமனமானார். 1967 முதல் 1979 வரை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்தார். 1979-ல் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார். 1981 ஜூலை வரை பொறுப்பிலிருந்தார். இடையே கேரள உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் இருந்தார். ஜூலை 8,1981-ல் தலைமை நீதிபதி பதவியைத் துறந்தார்.

1980 அக்டோபர் 27 முதல் நவம்பர் 4 வரை பிரபுதாஸ் பட்வாரிக்கு பதிலாக தற்காலிகத் தமிழக ஆளுநராக இருந்தார். 2005-ல் சட்டக் கமிஷன் தலைவரானார்.

1975ல் "தினமணி" முன்னாள் ஆசிரியர் ஏ. என். சிவராமன், கம்பன் அடிப்பொடி சா. கணேசன், பேராசிரியர் அ. ச. ஞானசம்பந்தன் சி. எம். அழகர்சாமி, பழ. பழனியப்பன் ஆகியோரின் துணையோடு சென்னையில் கம்பன் கழகத்தை உருவாக்கினார்.

1981 ஜூன் முதல் 1986 ஜனவரி வரை தமிழ்நாடு ஹஜ் சர்வீஸ் கமிட்டி (Baithul Hajjaj) தலைவராக இருந்தார்.

இலக்கிய வாழ்க்கை

மு.மு. இஸ்மாயில் எழுதிய முதல் புத்தகம்

வரலாறு, இலக்கியம் என 19 நூல்களை எழுதியுள்ளார். மு. மு. இஸ்மாயில் கம்பராமாயணத்தில் ஈடுபாடும் புலமையும் கொண்டவர். தொடக்க நாள் முதல் தனது மரணம் வரை சென்னை கம்பன் கழகத்தின் தலைவராகப் பொறுப்பு வகித்தார். காரைக்குடியில் நடக்கும் கம்பன் விழாவில் 50 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து கலந்து கொண்டார். மு.மு. இஸ்மாயில் 1945-ல் எழுதிய முதல் புத்தகம் “மௌலானா ஆஜாத்” மௌலானா அபுல்கலாம் ஆசாத்தின் வாழ்க்கை வரலாறு. மூதறிஞர் ராஜாஜி முன்னுரையுடன் வெளியாகியது. கம்ப ராமாயணம், சீறாப்புராணம் இரண்டையும் ஒப்பாய்வு (Comparative Study) செய்து கருத்துக்கள் வெளியிட்டவர். கம்பராமாயண மூல நூலை, மெல்லிய உறுதியான தாளில் முழுமையான கையடக்க ஆராய்ச்சிப் பதிப்பாகப் பதிப்பித்தார். தெ.பொ. மீனாட்சிசுந்தரம், அ.ச. ஞானசம்பந்தன், தெ. ஞானசுந்தரம் முதலிய தமிழ் அறிஞர்கள் அந்தப் பதிப்புக் குழுவில் இடம்பெற்றிருந்தார்கள். 1976-ல் நடைபெற்ற கம்பன் விழாவில் அதன் முதல் பதிப்பு வெளியாயிற்று.

இலக்கிய இடம்

இனிக்கும் இராஜ நாயகம் - சொற்பொழிவு

இன்றைய வாழ்க்கைசார்ந்த ரசனையை பேரிலக்கியம் நோக்கி நீட்டிக்கொண்டு சென்ற டி.கே.சிதம்பரநாத முதலியாரின் வழித்தோன்றலாக மு.மு. இஸ்மாயில் கருதப்படுகிறார். காரைக்குடி சா. கணேசன் அமைத்த கம்பன்கழகம் போன்ற அமைப்புகளாலும் டி. கெ. சிதம்பரநாத முதலியார், நீதிபதி மு.மு. இஸ்மாயில் போன்றவர்களாலும் கம்பராமாயணம் திராவிட இயக்கத்தின் எதிர்பிரச்சார அலையில் இருந்து மீட்கப்பட்டு தமிழர்களின் ரசனையில் அழுத்தமாக நிலைநாட்டப்பட்டது என ஜெயமோகன் கூறுகிறார்.

சென்னை ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் பொது நிகழ்ச்சிகளில் ஸ்ரீராமகிஷ்ணர், சுவாமி விவேகானந்தர் பற்றி சொற்பொழிவு செய்திருக்கிறார். மு.மு. இஸ்மாயில் நினைவைப் போற்றும் வகையில், பழ. பழனியப்பன் எழுதிய "இலக்கியமான நீதிபதி" என்ற தலைப்பில் ஜனவரி 19,2005 அன்று தினமணி நாளிதழில் கட்டுரை வெளியானது. 2000-ஆம் ஆண்டு தினமணி பத்திரிக்கை ‘தலைசிறந்த 100 தமிழர்கள்’ என்ற பட்டியலில் மு.மு. இஸ்மாயில் பெயரையும் வெளியிட்டது.

நூல் பட்டியல்

கவிச்சக்கரவர்த்தியும் கவியரசரும்
  • மெளலானா ஆஜாத் - 1945 - வாழ்க்கை வரலாறு
  • அல்லாவுக்கு ஆயிரம் நாமங்கள்
  • இனிக்கும் இராஜ நாயகம் (உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்) (ஏவி.எம்.ஜாபர்தீன் – நூர்ஜஹான் அறக்கட்டளைச் சொற்பொழிவு)
  • மும்மடங்கு பொலிந்தன - 1978 -  வானதி பதிப்பகம், சென்னை.
  • கம்பன் கண்ட சமரசம் - 1985 - வானதி பதிப்பகம், சென்னை.
  • உந்தும் உவகை - 1987 -  வானதி பதிப்பகம், சென்னை.
  • இலக்கிய மலர்கள் - 1990 - வானதி பதிப்பகம், சென்னை.
  • ஒரு மறக்க முடியாத அனுபவம் - 1992 – வானதி பதிப்பகம், சென்னை (கல்கியில் டிசம்பர் 8, 1985 வெளிவந்த கட்டுரைத் தொகுப்பு)
  • கம்பன் கண்ட ராமன் - 1976, வானதி பதிப்பகம்
  • வள்ளலின் வள்ளல்
இலக்கிய மலர்கள் - 1990
  • பழைய மன்றாடி – 1980, வானதி பதிப்பகம்
  • நினைவுச்சுடர்,
  • தாயினும்…, - வானதி பதிப்பகம்
  • உலகப் போக்கு
  • நயத்தக்க நாகரிகம்
  • அடைக்கலம்
  • கவிச்சக்கரவர்த்தியும் கவியரசரும்
  • செவிநுகர் கனிகள்
  • மூன்று வினாக்கள் - வாலிவதை பற்றிய நூல். வானதி பதிப்பகம்

மறைவு

மு. மு. இஸ்மாயில் ஜனவரி 17, 2005-ல் தனது 84வது வயதில் சென்னையில் காலமானார்.

.

விருதுகள்

  • கம்பராமாயண கலங்கரை விளக்கம் - பாளையங்கோட்டை மற்றும் திருநெல்வேலி கம்பன் கழகம் (1978)
  • கவுரவ டாக்டர் பட்டம் - அண்ணாமலை பல்கலைக் கழகம் (1979)
  • பால் ஹாரிஸ் பெல்லோஷிப்    - மதுரை ரோட்டரி சங்கம் (1989)
  • கலைமாமணி - தமிழ்நாடு அரசு (1992)
  • ராமானுஜர் விருது - ஆழ்வார் ஆய்வு மையம் (1997)

உசாத்துணை



⨮ Standardised


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.