second review completed

முருகன் ஓர் உழவன் (நாவல்)

From Tamil Wiki
Revision as of 09:41, 4 February 2022 by AnandSrinivasan (talk | contribs)


✔ Second review completed


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.

முருகன் ஓர் உழவன்

முருகன் ஓர் உழவன் (1927) கா.சி.வேங்கடரமணி எழுதிய காந்திய நாவல். இது ஆங்கிலத்தில் முதலில் எழுதப்பட்டது. தமிழுக்கு 1928-ல் கிருஷ்ணகுமாரி (கி. சாவித்ரி அம்மாள்) மொழியாக்கத்தில் வெளிவந்தது.

எழுத்து, பிரசுரம்

கா.சி.வேங்கடரமணி (காவேரிப்பூம்பட்டினம் சித்தாந்த வெங்கடரமணி) எழுதிய இந்நாவல் ஆங்கிலத்தில் Murugan the Tiller என்ற பேரில் 1927-ல் வெளிவந்தது. அதற்குமுன் வெங்கடரமணி Paper Boats (1921), On the Sand-Dunes (1923) என்னும் இரு நூல்களை எழுதியிருந்தார். முருகன் ஓர் உழவன் அவருடைய முதல் நாவல்.

கதைச்சுருக்கம்

முருகன் ஓர் உழவன் தஞ்சை மாவட்டத்தில் ஆலவந்தி என்னும் சிற்றூரை களமாகக் கொண்டது. கேதாரி, ராமச்சந்திரன், முருகன் என்னும் மூன்று நண்பர்களின் கதை இது. (முருகன் என்பவரின் கதை அல்ல.) ஆலவந்தி என்ற தஞ்சை மாவட்ட கிராமத்தில் ராமு பி.ஏ. பரிட்சையில் தோற்கிறான். தேர்வில் தோற்றுப் போன ராமுவை ஆறுதல் படுத்துகிறான் முருகன். ராமு கிராமத்திலேயே தங்கிவிடலாமென நினைக்கிறான். படிப்புக்கு நிறைய செலவாகிவிட்டது என நினைக்கிறான். ஆனால் மிகச் சிறந்த மாணவனாக இருந்த நண்பன் கேதாரியின் கடிதம் அவனை மீண்டும் பட்டணத்திற்கு செல்லவைக்கிறது. நகரில் கேதாரியுடன் ராமு தங்குகிறான். ஆனால் சட்ட மாணவனாகிய கேதாரி ராமுவை சற்று கீழாக நடத்துகிறான். ராமு கிறித்துவக் கல்லூரியில் சேருகிறான். ஊரிலிருந்து முருகன் அனுப்பி வைக்கும் பணத்தைக் கொண்டு வாழ்கிறான். முருகனும் அவனது மனைவியும் கஷ்டப்பட்டு உழைத்து பண்ணையை காப்பாற்றுகிறார்கள்.

கேதாரியின் அத்தை மகள் ஜானகிக்கு ராமு அறிமுகமாகிறான். அவன் ஜானகியை திருமணம் செய்து கொண்டுவிடுகிறான். கேதாரி சட்டம் பயிலுவதுடன் கோகிலம் என்ற பெண்ணை திருமணம் செய்து கொள்கிறான். ராமு மீண்டும் பரிட்சையில் தோற்றுப் போகிறான். ஆகவே பட்டணத்தில் குடியிருக்க விரும்பாமல் மனைவியை அழைத்துக்கொண்டு ஆலவந்தி கிராமத்திற்கு வருகிறான். முருகன் இதை எதிர்பார்க்கவில்லை. இருவரும் நெருக்கமான நண்பர்களாக மாறுகிறார்கள். ஏழு ஏக்கர் நிலமிருந்தாலும் ஆயிரம் ரூபாய் கடன் இருக்கிறது. ராமு எப்படியாவது நாலு ஆண்டிற்குள் கடனை அடைத்துவிட வேண்டும் என்று திட்டமிடுகிறான். ராமுவின் இயலாமையைப் பற்றி பேசி அவனது மாமியார் குற்றம் சொல்லியபடியே இருக்கிறாள்.

ஒரு நாள் பெருமழை பெய்து ஆற்றில் வெள்ளம் ஏற்படுகிறது. தென்னந்தோப்பு பாதிக்கப்படுகிறது. வயலில் தண்ணீர் நிரம்புகிறது. நஷ்டமடைந்த ராமு தனது மனைவி மாமியாருடன் கடப்பா புறப்பட்டுப் போகிறான். மூன்று ஆண்டுகள் கேம்ப் கிளார்க்காக வேலை செய்கிறான். அங்கே வேலை நன்றாக இருந்தாலும் வாழ்க்கை கடினமாக இருக்கிறது. அந்த வேலையில் நிலை கொள்ள முடியவில்லை. 250 ரூபாய் ஆண்டுக் குத்தகைக்கு நிலத்தை எடுத்துக் கொண்ட முருகன் கடினமாக உழைத்து நிறைய சம்பாதிக்கிறான். கடப்பா வாழ்க்கையினை விட்டு விலகி ஆலவந்தி திரும்பும் ராமு தனது நிலத்தை விற்பனை செய்துவிடுகிறான். தோப்பை முருகனிடம் விற்றுவிட்டு ஊரை விட்டுப் போகிறான். கேதாரி சட்டம் படித்து வழக்கறிஞராகி மார்க்கண்டம் ஐயரின் ஜுனியராக பணியாற்றுகிறான். பெயரும் புகழும் உருவாகிறது. ஆனால் பதவி ஆசை கொண்டு வீழ்ச்சியடைகிறான்.

’எதற்காக இந்த நாவலுக்கு முருகன் ஓர் உழவன் என்று தலைப்பு வைத்தார் என்று தெரியவில்லை. கதையில் விவசாய வாழ்க்கையைப் பற்றி அதிகம் எழுதப்படவில்லை. ஆனால் கிராம வாழ்க்கையிலிருந்து பட்டணத்திற்கு குடியேறியவர்களின் வாழ்க்கைப்பாடுகளையும், சொந்த ஊர் திரும்பி விவசாயம் செய்து பிழைத்துக் கொள்ளலாம் என்ற பொய்க் கனவினையும் அன்றே யதார்த்தமாக எழுதியிருக்கிறார். இன்றைக்கும் அந்த நிலை மாறிவிடவில்லை’ என எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் கூறுகிறார். *

பதிப்புரையில் ‘உழுது பயிரிடுவோர்க்கு குடியினாலும் கெட்ட சேர்க்கையினாலும் வரும் கேடுகளையும் மிராசுதார்கள் சொந்த நிலத்தில் பயிரிட்டு பலனடைந்து சுகித்திராமல் நிலத்தை விற்று படித்து அற்ப சம்பளத்திற்கு வேலை செய்து பொருளீட்டுவதே புருஷார்த்தமெனக் கருதி வஞ்சமும் பொய்யுமே சாதனங்களாக ஒழுகுபவர்கள் இழிவடைவதையும் அரசாங்கத்தார் தேசத்திலுள்ள கொடுந்தொழில்களுக்கு மூலகாரணமாக உள்ள செல்வத் தேக்கத்தால் வரும் செருக்கை நீக்க முயலாததனால் அவை விருத்தியடைவதையும் அத்தேக்கத்தையொழிப்பதனால் கொடுமை நீங்கி சீவர்கள் சாந்தமும் களிப்பும் அடைந்திருப்பார்கள் என்பதையும் ஆசிரியர் முக்கியமாக விளக்கியிருக்கிறார்’ என்று சொல்லப்பட்டுள்ளது.

இலக்கிய இடம்

முருகன் ஓர் உழவன் தமிழ் நாவலாக கருதப்படவில்லை. தமிழ் வாழ்க்கையைச் சொன்ன ஆங்கில நாவல்களில் ஒன்று இது. வேளாண்மையின் அழிவையும் மூலதனத் தேக்கத்தையும் சுட்டிக் காட்டிய நாவல். காந்திய சமூகப் பார்வையுடன் காந்தியப் பொருளியல் பார்வையையும் முன்வைக்கிறது.

உசாத்துணை