under review

முக்தா சீனிவாசன்

From Tamil Wiki
Revision as of 14:09, 9 February 2024 by Boobathi (talk | contribs)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
முக்தா வீ. சீனிவாசன்
முக்தா சீனிவாசன்

முக்தா சீனிவாசன் (வீ. சீனிவாசன்; வெங்கடாச்சாரி சீனிவாசன்; முக்தா வீ. சீனிவாசன்; அக்டோபர் 31, 1929-மே 29, 2018) தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்; இயக்குநர்; எழுத்தாளர்; திரைக்கதை வசன ஆசிரியர். பல படங்களை இயக்கினார். சாதனையாளர்கள் பலரது வாழ்க்கையை ஆவணப்படுத்தினார். பொதுவுடைமைக் கட்சி, காங்கிரஸ், தமிழ் மாநில காங்கிரஸ் போன்ற கட்சிகளின் உறுப்பினராகச் செயல்பட்டார்.

பிறப்பு, கல்வி

முக்தா சீனிவாசன், தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகில் உள்ள குவளவல்லி என்னும் சிற்றூரில் ஆர். வெங்கடாச்சாரியார்-செல்லம்மாள் தம்பதியருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தார். தந்தை இளம் வயதிலேயே மறைந்ததால் மிக வறுமையான சூழலில் வளர்ந்தார். உத்தமதானபுரம் தொடக்கப்பள்ளியில் ஆரம்பக் கல்வி கற்றார். பாபநாசத்தில் உள்ள விக்டோரியா போர்டு உயர்நிலைப் பள்ளியில் மேற்கல்வி பயின்றார். பதினொன்றாம் வகுப்பு வரை படித்தார். தட்டச்சு, சுருக்கெழுத்து கற்றார்.

தனி வாழ்க்கை

முக்தா சீனிவாசன், சேலம் கருவூல அலுவலகத்தில் கணக்கராகப் பணிபுரிந்தார். சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் கிளை அலுவலகத்தில் தட்டச்சாளராகப் பணியாற்றினார். பின்னர் திரைத்துறைக்குச் சென்றார். மனைவி பிரேமா. மகன்கள்: முக்தா சுந்தர்; முக்தா ரவி. மகள்: மாயா சீனிவாசன்.

திரை வாழ்க்கை

முக்தா சீனிவாசன் மாடர்ன் தியேட்டர்ஸில் தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்தாளராகப் பணியாற்றினார். பின்னர் க்ளாப் பாய் ஆகப் பணிபுரிந்தார். தொடர்ந்து வசன ஆசிரியர் ஆனார். மாடர்ன் தியேட்டர்ஸ் திரைப்படங்களில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றினார். உதவி இயக்குநர் ஆனார். மாடர்ன் தியேட்டர்ஸிலிருந்து வெளியேறி பல நிறுவனங்களில் பணிபுரிந்தார். ராம்நாத் மற்றும் இயக்குநர் (வீணை) எஸ். பாலசந்தரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றினார்.

முக்தா சீனிவாசன் முதலில் இயக்கிய படம் ‘முதலாளி’. 1961-ல், சகோதரர் ராமசாமியுடன் இணைந்து ‘முக்தா ஃபில்ம்ஸ்’ நிறுவனத்தைத் தொடங்கினார். அதுமுதல் ‘முக்தா’ சீனிவாசன் என்று அழைக்கப்பட்டார். முக்தா தயாரிப்பில் முதல் படம் ’பனித்திரை’. தொடர்ந்து முக்தா ஃபிலிம்ஸ் சார்பில் பல படங்களைத் தயாரித்தார். சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் எஸ்.எஸ். ராஜேந்திரன், ஜெயலலிதா, கமல்ஹாசன் போன்ற பலர் நடித்த படங்களை இயக்கினார். நடிகர் நாகேஷைத் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தினார். 40-க்கும் மேற்பட்ட படங்களை இயக்கினார். 12 திரைப்படங்களை தெலுங்கிலிருந்து தமிழுக்கு மொழிமாற்றம் (டப்பிங்) செய்து வெளியிட்டார். தனது அண்ணன் மற்றும் நடிகர் சிவாஜிகணேசனின் மறைவுக்குப் பின் படங்கள் தயாரிப்பதைக் குறைத்துக் கொண்டார்.

முக்தா சீனிவாசன் இயக்கிய படங்கள்

திரைப்படங்கள் பொறுப்பு
முதலாளி இயக்கம்
நாலுவேலி நிலம் இயக்கம்
தாமரைக்குளம் இயக்கம்
ஓடி விளையாடு பாப்பா இயக்கம்
மகனே கேள் இயக்கம்
ஸ்ரீ ராமஜெயம் இயக்கம்
சினிமா பைத்தியம் இயக்கம்
பனித்திரை (தயாரிப்பு மற்றும் இயக்கம்)
இதயத்தில் நீ (தயாரிப்பு மற்றும் இயக்கம்)
பூஜைக்கு வந்த மலர் இயக்கம்
தேன்மழை இயக்கம்
நினைவில் நின்றவள் இயக்கம்
பொம்மலாட்டம் இயக்கம்
ஆயிரம் பொய் இயக்கம்
நிறைகுடம் (தயாரிப்பு மற்றும் இயக்கம்)
அருணோதயம் (தயாரிப்பு மற்றும் இயக்கம்)
தவப்புதல்வன் (தயாரிப்பு மற்றும் இயக்கம்)
சூரியகாந்தி இயக்கம்
அன்பைத் தேடி (தயாரிப்பு மற்றும் இயக்கம்)
அந்தரங்கம் இயக்கம்
பேரும் புகழும் இயக்கம்
அந்தமான் காதலி (தயாரிப்பு மற்றும் இயக்கம்)
இமயம் (தயாரிப்பு மற்றும் இயக்கம்)
அவன் அவள் அது (தயாரிப்பு மற்றும் இயக்கம்)
பொல்லாதவன் (தயாரிப்பு மற்றும் இயக்கம்)
கீழ்வானம் சிவக்கும் (தயாரிப்பு மற்றும் இயக்கம்)
சிம்லா ஸ்பெஷல் (தயாரிப்பு மற்றும் இயக்கம்)
பரீட்சைக்கு நேரமாச்சு (தயாரிப்பு மற்றும் இயக்கம்)
சிவப்பு சூரியன் (தயாரிப்பு மற்றும் இயக்கம்)
தம்பதிகள் இயக்கம்
பலப் பரீட்சை இயக்கம்
இரு மேதைகள் (தயாரிப்பு மற்றும் இயக்கம்)
ஒரு மலரின் பயணம் (தயாரிப்பு மற்றும் இயக்கம்)
கோடைமழை (தயாரிப்பு மற்றும் இயக்கம்)
கதாநாயகன் (தயாரிப்பு மற்றும் இயக்கம்)
சின்ன சின்ன ஆசைகள் (தயாரிப்பு மற்றும் இயக்கம்)
எதிர்காற்று (தயாரிப்பு மற்றும் இயக்கம்)
பிரம்மச்சாரி (தயாரிப்பு மற்றும் இயக்கம்)
ராஜபாண்டி (1994) (தயாரிப்பு மற்றும் இயக்கம்)
வாய்க்கொழுப்பு (தயாரிப்பு மற்றும் இயக்கம்)
பாஞ்சாலி இயக்கம்
கண்களின் வார்த்தைகள் (தயாரிப்பு மற்றும் இயக்கம்)
பத்தாயிரம் கோடி (தயாரிப்பு மற்றும் இயக்கம்)
சிவப்பு (தயாரிப்பு மற்றும் இயக்கம்)
நாயகன் (தயாரிப்பு மட்டும்;இறுதியில் ஜீவி ஃபிலிம்ஸ் நிறுவனத்திடம் கைமாறியது)

இலக்கிய வாழ்க்கை

முக்தா சீனிவாசன் நூல்கள்

முக்தா சீனிவாசன் 350-க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் மூன்று நாவல்களையும் எழுதினார். திரையுலக வரலாற்றை நூல்களாக எழுதினார். ‘இணையற்ற சாதனையாளர்கள்” என்ற தலைப்பில் சாதனை செய்த ஆளுமைகளின் வாழ்க்கையைப் பல பாகங்களாக எழுதி ஆவணப்படுத்தினார். சாகுந்தலத்தைத் தமிழில் மொழிபெயர்த்தார்.

முக்தா சீனிவாசன் தன் இல்லத்தில் 10000-த்திற்கு மேற்பட்ட நூல்களைக் கொண்ட தனி நபர் நூலகத்தை வைத்திருந்தார்.

முக்தா சீனிவாசன் ஆன்மிக நூல்கள்

பதிப்புலகம்

முக்தா சீனிவாசன், ‘திருக்குடந்தை பதிப்பகம்’ என்ற பதிப்பு நிறுவனத்தைத் தொடங்கி அதன் மூலம் தனது நூல்கள் பலவற்றை வெளியிட்டார்.

முக்தா வி. சீனிவாசன் ஜி. கருப்பையா மூப்பனார் உடன் (படம் நன்றி: விகடன்)
மு. கருணாநிதியுடன் முக்தா சீனிவாசன்
ஜெ. ஜெயலலிதாவுக்கு ஆசி

அரசியல்

முக்தா சீனிவாசன் இளம் வயதிலேயே பொதுவுடைமைக் கட்சியில் இணைந்தார். பொதுவுடைமைக் கட்சி தடைசெய்யப்பட்ட போது கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். காந்தியின் கொள்கைகள் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். பொதுவுடைமைக் கட்சி இரண்டாகப் பிரிந்தபோது முக்தா சீனிவாசன் அக்கட்சியிலிருந்து விலகினார். 1961-, காமராஜர் தலைமையை ஏற்று காங்கிரஸ் இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.

பள்ளி நண்பரான ஜி.கருப்பையா மூப்பனார் தமிழ் மாநில காங்கிரஸ் ஆரம்பித்தபோது முக்தா சீனிவாசன் அதில் இணைந்தார். 1999-ல், தென்சென்னை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியுற்றார். அதன் பிறகு அரசியலிலிருந்து விலகினார். காமராஜர், அண்ணா, எம்.ஜி.ஆர்., மு. கருணாநிதி, ஜெ. ஜெயலலிதா, சோ. போன்றோரின் நண்பராக இருந்தார்.

பொறுப்புகள்

  • மாவட்ட காங்கிரஸ் தலைவர்
  • தமிழ்நாடு காங்கிரஸ் குழு துணைத்தலைவர்
  • தமிழ் மாநில காங்கிரஸ் பொதுச் செயலாளர்
  • தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர்
  • ஃபிலிம் சேம்பர் தலைவர்
  • எம்.ஜி.ஆர் திரைப்படக் கல்லூரித் தலைவர்
  • அரசு திரைப்பட விருதுக்குழுத் தலைவர்

விருதுகள்

  • குடியரசுத் தலைவர் விருது-முதலாளி திரைப்படம்
  • தமிழக அரசின் சிறந்த திரைப்படத்திற்கான விருது-’பலப்பரீட்சை’ திரைப்படம்
  • சிறந்த அறிவியல் புனைகதைத் திரைப்படத்திற்கான விருது-’அவன்-அவள்-அது’ திரைப்படம்
  • தமிழக அரசின் சிறந்த திரைப்படத்திற்கான விருது-’கீழ்வானம் சிவக்கும்’ திரைப்படம்
  • சிறந்த இயக்குநருக்கான விருது-‘பரீட்சைக்கு நேரமாச்சு’ திரைப்படம்
முக்தா சீனிவாசன் வாழ்க்கை வரலாறு

ஆவணம்

முக்தா சீனிவாசன் தனது வாழ்க்கை வரலாற்றை ‘ ஒரு ஏழை ஏறி வந்த ஏணி’ என்ற தலைப்பில் எழுதினார். ‘திருக்குடந்தை பதிப்பகம்’ இந்நூலை வெளியிட்டது.

மறைவு

முக்தா சீனிவாசன், வயது மூப்பால், மே 29, 2018 அன்று காலமானார்.

இலக்கிய இடம்

முக்தா சீனிவாசன், பொது வாசிப்புக்குரிய பல நூல்களை எழுதினார். திரைப்படத் துறை சார்ந்து இவர் எழுதியிருக்கும் ஆய்வு நூல்கள் ஆய்வாளர்களுக்கு உதவுபவை. நூற்றுக்கணக்கான சான்றோர்கள், சாதனையாளர்களின் வாழ்க்கை வரலாற்றை ‘இணையற்ற சாதனையாளர்கள்’ என்ற தலைப்பில் தொகுத்தது முக்தா சீனிவாசனின் முக்கிய சாதனையாக மதிப்பிடப்படுகிறது.

நூல்கள்

சிறுகதைத் தொகுப்புகள்
  • தேஜஸ்வி
  • தலைமுறைக் கதைகள்
  • உத்தமி
  • தண்டனைக்குத் தப்பிய குற்றங்கள்
  • மனு
  • ஆத்மா வென்றது
  • சொல்லாத ரகசியம்
  • திருமணம் புனிதமானது
  • மனச் சந்திப்பு
  • மனுஷ்ய தர்மம்
  • கூத்துக்காரன் தோப்பு
  • மனிதநேயக் கதைகள்
  • இன்னும் சில கதைகள்
  • முக்தாவின் சிறுகதைகள்
  • இது இருபதாம் நூற்றாண்டின் கதைகள், தொகுதி: 1-5
  • உலகின் சிறந்த சின்னஞ்சிறு கதைகள் பாகம்-1, 2
  • உலகில் சிறந்த வழிகாட்டும் கதைகள்
நாவல்கள்
  • எதிர்வீட்டு ஹேமா
  • காலவெள்ளம்
  • பாரம்பரியம்
தமிழ்த் திரைப்படத்துறை நூல்கள்
  • தமிழ்த் திரைப்பட வரலாறு
  • தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் வரலாறு (இரண்டு பாகங்கள்)
  • கலைஞர்களோடு நான்
  • கதாசிரியர்களோடு நான்
  • நான் சந்தித்த கலைஞர்கள்
  • பிலிம் சேம்பர் வரலாறு (தமிழ்)
  • பிலிம் சேம்பர் வரலாறு (ஆங்கிலம்)
கட்டுரை நூல்கள்
  • நினைவு ஏடுகள்
  • கோபமும் சிரிப்பும்
  • நினைவு ஊற்று
  • நன்றிக் கடன்
  • விவேக சிந்தாமணி
  • முக்தாவின் கட்டுரைகள்
  • நமது சங்கீத வித்வான்கள்
  • அறிஞர்களோடு நான்
  • நேரு சொன்ன நூறு
  • மானுடன் கண்ட மகாஞானிகள்
  • ஸ்ரீ மத் வேதாந்த தேசிகர்
  • ராமானுஜர் ஒரு மனிதநேயவாதி
  • இணையற்ற சாதனையாளர்கள் 1-10 பாகங்கள்
  • நூல்கள் தரும் நுண்ணறிவு, பாகம்-1&2
  • இராமாயணத்தில் துணைக் கதாபாத்திரங்கள்
  • இலக்கியத்தில் இணையும் இந்தியா
  • மாணவர்களுக்கான இந்திய சுதந்திரப் போராட்ட வரலாறு (தமிழ்)
  • மாணவர்களுக்கான இந்திய சுதந்திரப் போராட்ட வரலாறு (ஆங்கிலம்)
  • சமூகநீதிப் போராட்ட வரலாறு
  • பாரதி-ஞானச் செம்மல்
  • சதுர்வேதி
  • ஜே. கிருஷ்ணமூர்த்தி வாழ்வும் வாக்கும்
  • மறைந்த தமிழகத் தலைவர்கள்
  • நான் அறிந்த மூப்பனார்
மொழிபெயர்ப்பு நூல்கள்
  • ரகுவம்ச மகா காவியம்
  • ருது சம்ஹாரம், மேகதூதம்
  • வடமொழி இலக்கியம்
சுயசரிதை
  • ஒரு ஏழை ஏறி வந்த ஏணி

உசாத்துணை


✅Finalised Page