மாற்பித்தியார்

From Tamil Wiki
Revision as of 17:09, 19 October 2022 by Siva Angammal (talk | contribs)

மாற்பித்தியார், சங்க காலப் பெண்பாற் புலவர்களில் ஒருவர். இவர் பாடியனவாக சங்கத்தொகை நூல்களில் 2 பாடல்கள் உள்ளன.

வாழ்க்கைக் குறிப்பு

மாற்பித்தியார் என்ற பெயரிலுள்ள மாற் என்பது மால் என்பதன் திரிபு. மாயம் செய்பவன் மால். திருமால். மாற்பித்தியார், வாழ்க்கையை மாயம் என்று காட்டுவதால் மால் என்னும் சிறப்பு அடைமொழியைப் பெற்றிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. பெயரின் பின்னொட்டான பித்தியார் என்பது பித்தன் என்பதின் பெண்பால் எனக் கொண்டு இவரை பெண்பாற் புலவர் எனக் குறிக்கிறார்கள்.

இலக்கிய வாழ்க்கை

மாற்பித்தியார, சங்க இலக்கியத் தொகை நூலான  புறநானூறுவின் 251 மற்றும் 252- வது பாடல்களை இயற்றியுள்ளார். இந்த இரண்டு பாடல்களும் தாபத வாகை என்னும் துறையைச் சேர்ந்தவை. 'நாலிரு வழக்கின் தாபத பக்கம்' என்று தொல்காப்பியம் (1021) இதனைக் குறிப்பிடுகிறது. தவம் செய்பவரைப் பற்றிக் கூறுவது தாபதவாகை. தவம் செய்வோரின் பணி எட்டு வகையில் அமைந்திருக்கும் என்று தொல்காப்பியர் குறிப்பிடுகிறார்.

பாடலால் அறியவரும் செய்திகள்

புறநானூறு 251
  • வாகைத் திணை
  • துறை: தாபத வாகை
  • ஓவியம் போல அழகான அகன்ற இல்லத்தில் கொல்லிப்பாவை போன்று அழகான மகளிர் இவனைப் பெறமுடியவில்லையே என்று ஏங்கி வருந்திக்கொண்டு தங்களுடைய அணிகலன்கள் கூடக் கழல்வது தெரியாமல் நின்று கொண்டிருந்தனர்.
  • அவனேதான் இவன். இன்று, இங்கு, மூங்கில் காட்டில் பாயும் அருவியில் குளித்துவிட்டு, யானைகள் இவனுக்கு கொண்டுவந்து தந்த விறகில் தீ மூட்டி, திரிபட்டுக் கிடக்கும் தன் சடையை (சடாமுடியை)க் காயவைத்துக் கொண்டிருக்கிறான்.
  • அன்று பெண்களை மயங்க வைத்தவன்தான் இன்று இப்படி சடைமுடியுடன் துறவியாய்த் திரிகிறான்.
புறநானூறு 252
  • வாகைத் திணை
  • துறை: தாபத வாகை
  • ஒலித்துக்கொண்டு வீழும் வெள்ளைநிற அருவிநீர் தலையில் தங்கி ஈரம் புலராமல் இருப்பதால் நிறம் மாறித் தில்லைக்காய் போன்ற சடையுடன் காணப்படுகிறான்
  • இன்று செறிந்த இலையினை உடைய தாளி இலையைப் பறித்துகொண்டிருக்கிறான். (இந்த இலைகளைப் போட்டு வழிபடான் போலும்)
  • இவன் முன்னொரு நாளில் தன் இல்லத்தில் இருந்துகொண்டு சொல் என்னும் வலையை வீசி இல்லத்தில் நடமாடும் பெண்மயிலைப் பிடித்தவன் ஆயிற்றே!

பாடல் நடை

புறநானூறு 251

ஓவத் தன்ன இடனுடை வரைப்பிற்,
பாவை அன்ன குறுந்தொடி மகளிர்

இழைநிலை நெகிழ்ந்த மள்ளற் கண்டிக்கும்-

கழைக்கண் நெடுவரை அருவியாடிக்,

கான யானை தந்த விறகின்

கடுந்தெறல் செந்தீ வேட்டுப்,

புறம்தாழ் புரிசடை புலர்த்து வோனே!

புறநானூறு 252

கறங்குவெள் அருவி ஏற்றலின், நிறம் பெயர்ந்து,
தில்லை அன்ன புல்லென் சடையோடு,

அள்இலைத் தாளி கொய்யு மோனே

இல்வழங்கு மடமயில் பிணிக்கும்

சொல்வலை வேட்டுவன் ஆயினன், முன்னே.

உசாத்துணை

மகடூ முன்னிலை, பெண்பாற் புலவர் களஞ்சியம், டாக்டர் தாயம்மாள் அறவாணன், பச்சை பசேல் பதிப்பகம் புறநானூறு 251, தமிழ் சுரங்கம்

புறநானூறு 252, தமிழ் சுரங்கம்