under review

மாதர் மறுமணம் (இதழ்)

From Tamil Wiki
Revision as of 10:16, 24 February 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Changed incorrect text: **ஆம் ஆண்டு, **இல்)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
மாதர் மறுமணம் இதழ்

மாதர் மறுமணம் (ஆகஸ்ட், 1936) பெண்கள் மாத இதழ். மாதர் மறுமணம் என்பதை மையப் பேசு பொருளாகக் கொண்ட இதழ். கைம்பெண்களின் மறுமணத்தை ஆதரித்துத் தமிழில் வெளியான முதல் மற்றும் ஒரே இதழ்.

பதிப்பு, வெளியீடு

'தன வைசிய ஊழியன்’, 'குமரன்’, 'சண்டமாருதம்’ போன்ற இதழ்களை நடத்தி வந்த சொ.முருகப்பா காரைக்குடியில் 1934-ல் 'மாதர் மறுமண இயக்கம்' என்ற அமைப்பைத் தொடங்கினார். அமைப்பின் முன் மாதிரியாக, முருகப்பா, கைம்பெண்களில் ஒருவரான மு. மரகதவல்லியைத் திருமணம் செய்து கொண்டார். மு. மரகதவல்லியை இதழின் ஆசிரியராகக் கொண்டு 'மாதர் மறுமணம்’ இதழ் வெளிவந்தது.

தனி இதழின் விலை ஒன்றரை அணா. இந்தியா, சிலோன் போன்ற நாடுகளுக்கு ஆண்டு சந்தா - ஒரு ரூபாய். பர்மா, மலாயா, சைகோன், தென்னாப்பிரிக்கா முதலிய நாடுகளுக்கு ஆண்டு சந்தா - ஒரு ரூபாய் எட்டு அணா. பிற வெளிநாடுகளில் உள்ளவர்களுக்கு சந்தா 2 ஷில்லிங், 6 பென்ஸ். கைம்பெண் திருமணத்தை ஆதரிக்கும், ஆசிர்வதிக்கும் காந்தியின் படமே இதழின் முகப்புப் படமாக இடம்பெற்றது. ஒரு கைம் பெண் மண்டியிட்டு காந்தியை வணங்க, காந்தி அவளை ஆசிர்வதிப்பது போன்ற ஓவியம் ஒவ்வொரு இதழின் முகப்பு அட்டையிலும் இடம் பெற்றது.

உள்ளடக்கம்
விதவை மறுமண ஆதரவுப் பாடல்

நோக்கம்

விதவைகளின் கண்ணீர் துடைக்கப்பட வேண்டும் என்னும் நோக்கத்தைக் கொண்டது. விதவை மணமே விடுதலை அளிக்கும் என்று அச்சிடப்பட்ட மஞ்சள் வர்ணப் பென்சில் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்த குறிப்பு இவ்விதழில் உள்ளது.

"கணவனிழந்து வருந்தும் பெண்ணின் தொகை இந்திய நாட்டில் இரண்டரை கோடிப்பேர் என்று சொன்னால் யாரும் திடுக்கிடாதிருக்க முடியாது. இவர்களின் கண்ணீர் துடைக்கப்பட வேண்டும். ஆனால் பொது ஜன வழக்கமானது இச்செயலை ஒரு விளையாட்டாக மதித்து வருகிறது. இப்படியே இப்பெண்களை வதைத்து வயிறெரிந்து கொண்டிருப்பது மத-சமூகக் கடமையென்று கருதுவார் தொகையும் குறைவடையவில்லை. இந்த நிலையில் இப்பெண்களின் கூட்டத்திற்கு விடுதலை நல்க வேண்டுமென்பதை அடிப்படையாகக் கொண்டுதான் நமது பத்திரிகை தோன்றியிருக்கிறது." என இதழின் நோக்கத்தை மரகதவல்லி குறிப்பிட்டுள்ளார்.

இதழின் உள்ளடக்கம்
மாதர் மறுமணப் பாட்டு; மாதர் மறுமண பென்ஸில் விளம்பரங்கள்

உள்ளடக்கம்

இதழின் முதல் பக்கத்தில் தலையங்கக் கட்டுரை அமைந்தது. பெரும்பாலான இதழ்களின் முதல் பக்கத்தில் மாதர் மறுமணம் தொடர்பான கவிதை, பாடல்கள் இடம்பெற்றன. கைம்பெண்கள் பற்றிய காந்தியின் கருத்து, கைம்பெண் மறுமணத்தை ஆதரித்து சுத்தானந்த பாரதியாரின் பாடல், பாரதிதாசன் எழுதியிருக்கும் கைம்பெண் ஒருத்தியின் துயரக் கதைப்பாடல் என முதல் இதழிலேயே முக்கியமான கட்டுரைகள், பாடல்கள் இடம் பெற்றன.

இதழ் முழுவதும் 'மாதர் மறுமணம்’ பற்றிய பல்வேறு செய்திகள் கட்டுரைகளாகவும் கவிதைகளாகவும் கதைகளாகவும் பத்திராதிபர் குறிப்புகளாகவும் நிகழ்ச்சித் துணுக்குகளாகவும் இடம் பெற்றுள்ளன. இளம் வயதுத் திருமணம் பற்றி, அதனால் ஏற்படும் பாதகமான விளைவுகள் பற்றி சிறுகதைகள் பலவும் இடம் பெற்றன. கதை, கட்டுரைகளுடன் பாடல்களும் புகைப்படங்களும் இவ்விதழில் இடம் பெற்றன. இளைஞர்களும், மனைவியை இழந்தவர்களும் கைம்பெண்களை மணக்க முன்வர வேண்டும் என்று வலியுறுத்தியது இவ்விதழ்.

விதவைகளின் அவல நிலை பற்றிய கட்டுரைகள், மாதர் மறுமணம் குறித்த பாடல்கள் வெளியாகின.

மறுமணச் செய்திகளைக் கட்டுரைகளாகவும் கவிதைகளாகவும் துணுக்குகளாகவும், பல்வேறு இலக்கிய வடிவங்களாகவும் கொடுக்கப்பட்டது. மாதர் மறுமண சகாய சங்கம், மதுரை புனர் விவாக

சமாஜம், மூல்தான் விதவா விவாக சகாய சபை, அமராவதி புதூரில் மகளிர் -ல்லம், இந்து விதவா நிலையம் போன்ற மாதர் மறுமணத்திற்கு உதவும் சங்கங்கள் பற்றிய செய்திகளும் பஞ்சாப் விதவா விவாக மாநாடு, ஜலந்தர் விதவா விவாக மாநாடு , முஸ்லிம் மாதர் முற்போக்கு மாநாடு, லாகூர் விதவா விவாக மாநாடு, பர்மா வாழ் மாதவன் கோவில் யாதவ சமூக மாநாடு பற்றிய செய்திகளும் இத்தொகுதியில் இடம் பெற்றன.

பலதார மணத்தடை மசோதா, மாதர் மறுமணத்திற்கு மடாதிபதிகள் ஆதரவு போன்ற செய்திகளும் மாதர் மறுமணம் பற்றிய வேத, புராண, இதிகாசக் கருத்துக்களும் இத்தொகுதியிலுள்ள இதழ் களில் இடம்பெற்றன. மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை கற்பனைக் கதைகள் கவிதைகள் விளம்பரங்கள் மதிப்புரைகள் ஆகியவை இதழ்களில் இடம்பெற்றன.

'மாதர் மறுமணப் பாடல் திரட்டு’ மற்றும் பிற புத்தகங்கள் பற்றிய விளம்பரங்கள் இதழில் இடம் பெற்றன. மாதர் மறுமண சகாய சங்கத்தினரின் 'மணமகன் தேவை’ விளம்பரம் முழுப் பக்க அளவில் வெளியாகியது.

பங்களிப்பாளர்கள்

சிங்கப்பூர், மலேசியா, பர்மா, இலங்கை, சைகோன், தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் மாதர் மறுமணம் இதழுக்கு முகவர்கள் அமைந்தனர்.

தென்னாப்பிரிக்காவில் வசித்து வந்த டர்பன் ச. முனிசாமிப் பிள்ளை, ச.மு. பார்வதிப்பிள்ளை போன்றோர் பல சீர்த்திருத்தக் கட்டுரைகளை எழுதினார். இராமன் மேனன், சுப்பராயன் , டாக்டர் சகுந்தலா தேவி, சொ. முருகப்பா, செ. குருசாமி ஐயர், D.K. கார்வே ஆகியோர் பல்வேறு மாதர் மாநாடுகளிலும் மாதர் மறுமண சகாய சங்க ஆண்டு விழாவிலும் ஆற்றிய சொற்பொழிவுகள் தொகுக்கப்பட்டு இவ்விதழில் கட்டுரைகளாக வெளியாகின.

ஆவணம்

மாதர் மறுமணம் இதழ்கள் சில தமிழ் இணைய நூலகத்தில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.

வரலாற்று இடம்

”மாதர் மறுமணம்” என்னும் ஒரே கருத்தை வலியுறுத்தி பல்வேறு இலக்கிய வடிவங்களில் இவ்விதழில் கட்டுரைகள் அமைந்தன. மாதர் மறுமணம் பற்றிப் பேசத் தயங்கிய காலகட்டத்தில் இவ்விதழ் தன் ஒவ்வொரு பக்கத்திலும் மாதர் மறுமணம் பற்றிய செய்திகளையும் விதவைத் திருமணத்திற்கு உதவும் மகளிர் -ல்லங்கள், தொண்டு நிறுவனங்கள் குறித்தும் குறிப்பிட்டு முழுக்க முழுக்க ஒரு மாதர் மறுமண ஆதரவு இதழாகத் திகழ்ந்தது குறிப்பிடத்தகக்து.

"1936-ல் ஆரம்பிக்கப்பட்ட மாதர் மறுமணம் பெண்கள் பிரச்சினை சம்பந்தப்பட்ட பத்திரிகை என்றாலும், அது பெண்களுக்கான பத்திரிகை மட்டும் அல்ல. அது ஓர் இயக்கத்தின் குரலாக, விழிப்புணர்வூட்டும் கருவியாக உருவான பத்திரிகை. மாதர் மறுமணம் என்ற அச்சு இயக்கத்தின் நோக்கம் பெண்ணுக்கு ஆண் துணை, ஆண் பாதுகாப்பு என்ற அன்றாடத் தேவைகளின் அடிப்படையில் அமைந்திருந்தாலும், தொடர்ந்து நம்பிக்கையுடனும், உறுதியுடனும் செயலாற்றி, அச்சு மூலம் சேதிகளைத் தொடர்ந்து பரப்பி, அறை கூவல் விடுத்து, விடாப்படியாக இயங்கி, அது வெற்றி பெறுகிறது. 1937-ல் நடந்த முதல் விதவை மறுமணம் அதன் வெற்றி எனலாம். அதைத் தொடர்ந்து பல திருமணச் செய்திகள் வருகின்றன. ஓர் இயக்கத்தின் நோக்கம் அச்சு ஊடகத்தின் எல்லாவித உபயோகங்களையும் பயன்படுத்தி வெளிப்பட்டு, இத்தகைய வெற்றிகளை ஈட்டித் தந்தது, மாதர் பத்திரிகையின் நோக்கத்தின் ஈடேறல் என்று உறுதியாகக் கூறலாம்." என அம்பை மதிப்பிடுகிறார்.

உசாத்துணை


✅Finalised Page