under review

மனுஷி

From Tamil Wiki
மனுஷி
மனுஷி, யுவபுரஸ்காருக்கு பல்கலைக்கழக பாராட்டு

மனுஷி(மனுஷி பாரதி) (பிறப்பு: ஜூன் 21, 1985) தமிழில் எழுதி வரும் கவிஞர். திரைப்படப் பாடலாசிரியர். தொடர்ந்து கவிதைகள், சிறுகதைகள், பயணக்கட்டுரைகள் எழுதி வருகிறார்.

பிறப்பு, கல்வி

மனுஷியின் இயற்பெயர் ஜெயபாரதி. விழுப்புரம், திருநாவலூரில் ஜூன் 21, 1985இல் பிறந்தார். சங்கர் ரெட்டியார் அரசினர் கல்லூரியில் பள்ளிக் கல்வி பயின்றார். புதுச்சேரி, பாரதிதாசன் பெண்கள் கல்லூரியில் தமிழ் இலக்கியம் இளங்கலைப்பட்டம் பெற்றார். புதுச்சேரி மத்தியப் பல்கலைகழகத்தில் தமிழ் இலக்கியம் முதுகலைப் பட்டம் பெற்றார். தற்போது புதுச்சேரி மத்தியப் பல்கலைகழகத்தில் தமிழ் இலக்கியத்தில் "தாக்கக் கோட்பாடு நோக்கில் பாரதியாரும் தாகூரும்" என்ற தலைப்பில் முனைவர்பட்ட ஆய்வில் உள்ளார்.

தனிவாழ்க்கை

மனுஷி புதுச்சேரியில் ஆரோவில் பகுதியில் வசிக்கிறார்.

இலக்கிய வாழ்க்கை

மனுஷி

தொடக்கத்தில் கீற்று.காம், மலைகள்.காம் போன்ற இணைய தளங்களில் மனுஷியின் படைப்புகள் வெளிவந்தன. மனுஷியின் முதல் தொகுப்பு ‘குட்டி இளவரசியின் ஒளிச்சொற்கள்’ 2013-ல் மித்ரா பதிப்பகம் மூலம் வெளியானது. 2017-ல் மூன்றாவது கவிதைத் தொகுப்பான ‘ஆதிக்காதலின் நினைவுக் குறிப்புகள்’ நூலுக்காக சாகித்ய அகாதமியின் யுவபுரஷ்கார் விருது பெற்றார். கவிதை தொடர்பான மாநாடுகளிலும், இலக்கிய விழாக்களிலும் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தி இருக்கிறார்.

மலையாளத்தில் கமலாதாஸ், பஷீர், பாலச்சந்திரன் சுள்ளிக்காடு, பங்களாதேஷின் தஸ்லீமா நஸ்ரின், பாப்லோ நெருடா, ரூமி, மஹ்மூத் தர்வீஷ், சில்வியா ப்ளாத், இளம்பிறை, குட்டி ரேவதி, லீனா மணிமேகலை ஆகியோரை இலக்கிய ஆதர்சங்களாகக் குறிப்பிடுகிறார். ’இரும்பன்’ திரைப்படத்திற்காக பாடல்கள் எழுதினார்.

விருதுகள்

  • முத்தங்களின் கடவுள் நூலுக்காக சென்னை இலக்கியக் கழகத்தின் இளம் படைப்பாளி விருது.
  • 2017 ல்’ஆதிக் காதலின் நினைவுக்குறிப்புகள்’கவிதைத்தொகுப்புக்காக சாகித்ய அகாதமியின் யுவ புரஸ்கார் விருது.
  • 2019-ல் புதிய தலைமுறையின் இளம் எழுத்தாளருக்கான நம்பிக்கை நட்சத்திரம் விருது.
  • தமிழக அரசின் இளம் படைப்பாளர் விருது .
  • ஈரோடு தமிழன்பன் விருது.
  • திருப்பூர் அரிமா சங்கத்தின் சக்தி விருது.
  • பூவரசி இலக்கிய விருது.

இலக்கிய இடம்

"மனுஷியின் கவிதைகள் வெற்று வார்த்தைச் சேர்க்கைகள் அல்ல. சந்தம் பார்த்து, அழகு எனக்கருதப்படும் சொல்லாடல் கொண்டு. அவருடைய கவிதைகள் சோகம், எதிர்பார்ப்பு ஆனந்தம் போன்ற உணர்வுகளோடு அவை காட்சி அனுபவமாகவும் நம்மை வந்தடைகின்றன. ஒளிச் சொற்கள் போன்ற சொற்றொடர்கள் அபூர்வம் தான். ஆனால் என்னைக் கவர்வது, மனுஷியின் கவித்துவத்துக்கு ஒரு தனித்தன்மை கொடுப்பது, அது அவருக்கு இயல்பாக வந்து சேர்ந்துள்ளது என்று சொல்வது அவரது சொற்கள் தாங்கி வரும் உணர்வுகளும் காட்சி அனுபவங்களும் தான். இதை யோசித்து உருவாக்க முடியாது. சொல் விளையாட்டிலும் வருவதல்ல" என விமர்சகர் வெங்கட் சாமிநாதன் மனுஷியின் ’குட்டி இளவரசியின் ஒளிச்சொற்கள்’ கவிதைத்தொகுப்பு பற்றி மதிப்பிடுகிறார்.

நூல்கள்

கவிதைத் தொகுப்பு
  • குட்டி இளவரசியின் ஒளிச்சொற்கள் (மித்ரா பதிப்பகம்: 2013)
  • முத்தங்களின் கடவுள் (உயிர்மை பதிப்பகம்: 2014)
  • ஆதிக் காதலின் நினைவுக்குறிப்புகள் (உயிர்மை பதிப்பகம்: 2015)
  • கருநீல முக்காடிட்ட புகைப்படம் (வாசகசாலை: 2019)
  • யட்சியின் வனப்பாடல்கள் (வாசகசாலை: 2019)

இணைப்புகள்


✅Finalised Page