second review completed

பொன். அ. கனகசபை

From Tamil Wiki
Revision as of 21:21, 22 February 2024 by Tamizhkalai (talk | contribs)

பொன்.அ. கனகசபை (அக்டோபர் 30, 1917 - மார்ச் 15, 1997) யாழ்ப்பாணம், புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஆசிரியர், எழுத்தாளர், பேச்சாளர், கவிஞர்.

வாழ்க்கைக் குறிப்பு

பொன்.அ. கனகசபை அக்டோபர் 30, 1917 அன்று புங்குடுதீவில் பிறந்தார். வைத்தீஸ்வரா கல்லூரியில் ஆசிரியராகப் பணிபுரிந்தார். 1965 -ல் புங்குடுதீவு மத்திய மகா வித்தியாலயத்தில் தமிழ், இலக்கியம், சமயம் போன்ற பாடங்களைக் கற்பித்தார். இறுதிக் காலத்தில் மகாவித்தியாலயத்தின் உபஅதிபராகவும் கடமையாற்றினார்.

இலக்கிய வாழ்க்கை

ஆசிரியர் சேவையிலிருந்து ஓய்வு பெற்ற பின்னரும் பொன்.கனகசபை 1974-ம் ஆண்டு புங்குடுதீவு இளைஞர் கழகத்தில் தனியார் கல்வி நிறுவனத்தை நிறுவி அதன் பணிப்பாளராக இருந்து சேவையாற்றினார். இவர் புங்குடுதீவு நலன்புரிச் சங்கம், புங்குடுதீவு இளைஞர் கழகம், மகா வித்தியாலயப் பெற்றோர் ஆசிரிய சங்கம், இலங்கை இளைஞர் சங்கம் போன்றவற்றில் உறுப்பினராகப் பங்காற்றினார்.

சுத்தானந்த பாரதியார், குன்றக்குடி அடிகளார் போன்றோரைப் புங்குடுதீவுக்கு அழைத்து வந்து உரையாற்ற வைத்தார். பல ஆலயங்களில் சமயச் சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். சைவத் திருமுறை, புராண உரையாளராகவும் விளங்கினார். இலக்கிய விழாக்கள், பட்டிமன்றங்கள், மாநாடுகள், சைவத் தமிழ் விழாக்கள், ஆலய உற்சவங்கள் எனப் பல நிகழ்வுகளில் சொற்பொழிவாற்றினார்.

யாழ்ப்பாணம் சிவயோக சுவாமியின் கட்டளைப்படி 'சிவத்தொண்டன்' இதழின் ஆசிரிய குழுவிலும் பணியாற்றினார்.

இலங்கை அரசின் சாகித்திய மண்டலத்தினால் வெளியிடப்பெற்ற 'ஈழத்துத் தமிழ்க் கவிதைக் களஞ்சியம்' பேராசிரியர் ஆ. சதாசிவத்தால் தொகுக்கப்பட்டபோது கவிதைகளைத் தேடிக் கண்டறிந்து தொகுப்பதில் பெரும் உதவி புரிந்தார்.

பொன்.கனகசபை திருச்செந்தூர் அகவல் என்ற நூலுக்கு விளக்கவுரை எழுதினார். இவர் எழுதிய விளக்கவுரை சைவத் தமிழறிஞர்களின் பாராட்டப்பெற்றது. திருவுந்தியாருக்கும் விளக்கவுரை எழுதினார். பல்வேறு ஆலயங்களுக்குரிய ஊஞ்சல் பாக்களையும் இயற்றியுள்ளார்.

கிராஞ்சியம்பதிக் கீதாஞ்சலி செந்தமிழ்மாலை வள்ளித் திருமணத்தின் தத்துவப் பொருளைப் பாடிய நூல். கிராஞ்சியம்பதியில் கோவில் கொண்ட முருகப்பெருமானைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டது.

இறப்பு

பொன்.அ.கனகசபை மார்ச் 15, 1997 அன்று காலமானார்.

நூல்கள்

  • திருச்செந்தூரகவல் -விளக்கவுரை
  • திருவுந்தியார்-உரைவிளக்கம்
  • கிராஞ்சியம்பதி கீதாஞ்சலி செந்தமிழ்மாலை

உசாத்துணை

பொன்.அ.கனகசபை-நூலகம்.காம்



✔ Second review completed


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.