பொன்னியின் செல்வன் (நாவல்)

From Tamil Wiki
Revision as of 06:00, 15 March 2022 by Dr.P.Saravanan (talk | contribs)

பொன்னியின் செல்வன் ( ) பொதுவாசிப்புக்குரிய சரித்திர நாவல். இது ஐந்து பாகங்களைக் கொண்டது. இதனை எழுதியவர் எழுத்தாளர் கல்கி. தமிழர்களின் பெருமையை பல நாடுகளுக்குப் பறைசாற்றிய இராஜராஜ சோழர் என்று அழைக்கப்பட்ட அருள்மொழிவர்மன், தனக்குக் கிடைத்த சோழ பேரரசின் அரியணையைத் தியாகம் செய்தமையை விவரிக்கிறது இந்த நாவல்.

பதிப்பு

பொன்னியின் செல்வன் ஐந்து பகுதிகளை உடையது. 1. புதுவெள்ளம், 2. சுழற்காற்று, 3. கொலைவாள், 4. மணிமகுடம், 5. தியாக சிகரம்.

எழுத்தாளர்

பொன்னியின் செல்வன் நாவலை எழுதியவர் எழுத்தாளர் கல்கி. இவர் சுதந்திரப்போராட்ட தியாகியும் இதழாளருமாவார். பொதுவாசிப்புக்குரிய பல கதைகளை எழுதியுள்ளார்.

கதைச்சுருக்கம்

வாணர் குல வீரரான 'வல்லவரையன் வந்தியதேவன்' , தஞ்சையில் இருக்கும் 'சுந்தர சோழ' சக்கரவர்த்திக்கும், அவரின் மகளான பழையாறையில் இருக்கும் இளவரசி 'குந்தவை' பிராட்டியாருக்கும் சக்ரவர்த்தியின் மூத்த மகனான காஞ்சியிலிருக்கும் இளவல் 'ஆதித்த கரிகால' சோழனிடமிருந்து ஓலை எடுத்து செல்வதாக கதை துவங்குகிறது. அடுத்த சக்ரவர்த்தியாக முடிசூட்டிக் கொண்டுள்ள ஆதித்த கரிகாலனை விடுத்து, சுந்தர சோழனின் பெரியப்பா கண்டராதித்தரின் மகனான 'மதுராந்தக' சோழரை, சோழ பேரரசுக்கு சக்ரவர்த்தியாக்க சதி நடக்கிறது. சுந்தர சோழ சக்ரவர்த்தியின் நண்பனானவரும், சோழர்களுக்கு பல நூற்றாண்டுகளாக போர் தளபதியாக இருந்து வந்த பழுவேட்டரையர் பரம்பரையில் வந்த 'பெரிய பழுவேட்டரையர்' இந்த சதியை முன்னெடுத்து செலுத்துகிறார். சோழ குலத்திற்கு உண்மை விஸ்வாசியானவரும், அனைவராலும் போற்றப்படும் பெரிய பழுவேட்டரையரே, சக்ரவர்த்தி முடிவிற்கு எதிராக சதி செய்வதற்கு ஒரு நியாயமான காரணமும் இருந்ததாக அவர் எண்ணியதே சாம்ராஜ்யத்தில் நடந்த குழப்பத்திற்கும், சம்பவத்திற்கும் காரணமாக அமைகிறது.

சக்ரவர்த்தியான சுந்தர சோழரின் தந்தையான அரிஞ்சய சோழ தேவரின் இரண்டாவது மூத்த சகோதரரான கண்டராதித்தர், தீவிர சிவ பக்தர். போரிலோ, நாட்டை ஆளுவதிலோ பற்றில்லாமல் தெய்வீக தொண்டு செய்வதிலும், ஆன்மீக பணியிலும் நாட்டம் செலுத்தி வந்தவர். கண்டராதித்தரின் மூத்த சகோதரனான இராஜாதித்தர் போரில் உயிர் துறக்கவே, அடுத்த அரியணைக்கு உரியவராக கண்டராதித்தர் ஆகிறார். ஆனால், அரியணையில் நாட்டம் இல்லாததாலும், போரினால் ஏற்பட்ட விளைவுகளை அவர் வெறுக்கவே, போரில் அனுபவ சாலியான தனது இளைய சகோதரரான அரிஞ்சய சோழ தேவரை சக்ரவர்த்தியாக்குகிறார். அரிஞ்சய சோழரும் அடுத்த சில ஆண்டுகளில் போரில் உயிர் துறந்தவுடன், கண்டராதித்தரின் மகனான மதுராந்தகர் ஏற வேண்டிய அரியணை, அரிஞ்சய சோழரின் மகனான சுந்தர சோழருக்கு கிடைக்கிறது. மதுராந்தகர் வயதில் சிறியவராக இருந்ததுடன், கண்டராதித்தரும், அவரது மனைவியுமான செம்பியன் மாதேவி தனது மகனை மிகப்பெரிய சிவ பக்தராக ஆக்கவே விரும்பியதே அதறகு  காரணம். ஆனால், மதுராந்தகர் (போலி மதுராந்தகர்) பெரியவரானதும், தனது தந்தை , தாயின் விருப்பத்திற்கு மாறாக அரியணைக்கு ஆசை கொண்டதும், அதுவே சரி என்றும், அதுவே பாரம்பரியம் என்றும் பெரிய பழுவேட்டரையர் எண்ணி, சாம்ராஜ்ஜியத்திற்கு எதிராக செயல்பட துவங்குகிறார். பெரிய பழுவேட்டரையர் மனதில் மட்டுமின்றி மதுராந்தகரின் மனதிலும் அரியணை ஆசையை தூண்டியதும், அதற்கான சதிக்கு பின்னிருந்து இயக்கியதும் பழுவூர் இளையராணியாக அழைக்கப்படும் அழகில், அறிவில் இணையில்லாத வயோதிகரான பெரிய பழுவேட்டரையரை திருமணம் செய்துக்கொண்ட 'நந்தினி'.

நந்தினி பாண்டிய வம்சத்தில் வந்தவள் என்பதும், ஆதித்த கரிகாலன் தனக்கு பிடித்தமான 'வீர பாண்டியனை' கொலை செய்தததற்காகவும், இளம் வயதில் சோழ அரச குடும்பத்தினரால் ஏற்பட்ட அவமானத்தால் சோழ அரசை பழிவாங்குவதற்காக பெரிய பழுவேட்டரையர் மூலம் தனது எண்ணத்தை ஈடேற்றி கொள்வதற்காக செய்யும் பல சாதூர்யமான சதி வேலைகளை வெட்ட வெளிச்சம் ஆக்குவதுடன், அதை முறியடிக்கிறார் வந்தியத்தேவன்.

தனது புத்தி கூர்மையாலும், நேர்மையாலும், ஒப்பற்ற வீரர்களான, உயர் குலத்தில் பிறந்த ஆண் பிள்ளைகளான சம்புவரைய குல இளவரசன் கந்தமாறன், பல்லவ குல பார்த்திபேந்திரா, ஏன் தனது மூத்த சகோதரர் ஆதித்த கருகாலனே மதியிழந்து மயங்கிய நந்தினியிடம் மயங்காத எத்தகைய வீரன், அப்பழுக்கற்ற ஆண்மகன் என தனது பண்புகளால் ஈர்த்து, சோழ பேரரசின் இளவரசி குந்தவையின் காதலுக்கு பாத்திரமாகிறார் வந்தியத்தேவன். வந்தியத்தேவனும் குந்தவையை விரும்புகிறார். ஏன், அனைவரிடத்திலும் வஞ்சகம், பாசாங்கு என இருக்கும் நந்தினி, வந்தியத்தேவனிடம் விவரிக்க இயலாத நேசம் கொண்டிருந்தது பல இக்கட்டான சூழலில் வந்தியத்தேவனின் உயிரை காப்பாற்ற பிரயாத்தனம் எடுத்துக்கொண்டது மூலம் உணரலாம்.

விதி வசத்தால் மர்மமான முறையில் ஆதித்த கரிகாலன் சதியால் உயிரிழக்கவே, 'மதுராந்தக சோழன்', சக்ரவர்த்தி ஆவதற்கான தடை தானாகவே விலகுகிறது. நந்தினியும் ஆதித்த கரிகாலனின் மரணத்திற்குப் பிறகு தலைமறைவாகிறார். ஆனால், அங்கே தான் கதையில் திருப்பம் எழுகிறது. அந்த திருப்பம் சாம்ராஜ்யத்தையே அதிர வைக்கும் ரகசியமாக இருக்கிறது.

சுந்தர சோழர் இளம் வயதில் இலங்கையில் நடந்த போரில் ஏற்பட்ட தோல்வியால் மனமுடைந்து, யாரையும் சந்திக்கும் எண்ணமில்லாமல் இலங்கையின் ஒரு தீவில் (பூதத்தீவு) தனித்து தஞ்சம் புகுகிறார். அங்கே, மீனவர் குல பெண்ணான ஊமையான மந்தாகினியை சந்தித்து காதல் வசப்படுகிறார். ஓராண்டு கூட ஆகாத நிலையில், மந்தாகினியை விட்டு மீண்டும் சோழ பேரரசுக்கு வந்து சக்ரவர்த்தியாக முடிசூட்டிக் கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகிறார். சில ஆண்டுகள் கழித்து அந்த மந்தாகினியை தஞ்சை நகருக்குள் பார்க்கிறார்; அவளை அரண்மனைக்கு அழைத்து வரும்படி உத்தரவு போடுகிறார் முதன் மந்திரியான அநிருத்த பிர்மராயருக்கு. ஆனால், அவள் தற்கொலை செய்துக்கொண்டதாக அநிருத்தர் திரும்பி வந்து சொன்ன நாள் முதல் குற்ற உணர்ச்சியால் நிலைக்குலைந்து போகிறார் சுந்தர சோழ சக்ரவர்த்தி. சுந்தர சோழருக்கும், மந்தாகினிக்கும் பிறந்தவர்கள் தான், இரட்டையர்களான நந்தினியும், மதுராந்தக சோழரும் என்று சந்தர்ப்ப சூழ்நிலையால் குந்தவை நம்புகிறார். அதனால், முதலில் மதுராந்தக சோழர் அரியணையில் ஏறுவதை தடுத்து, தனது 2வது இளைய சகோதரரான  அருள்மொழிவர்மரான இராஜராஜ சோழனை சக்ரவர்த்தியாக்கும் முடிவை மாற்றி கொள்கிறார் குந்தவை.  ஆனால், நந்தினியும், மதுராந்தகரும் சுந்தர சோழ சக்ரவர்த்திக்கு பிறந்தவர்கள் இல்லை என்பதை ஆதாரத்துடன் முதன் மந்திரியான அநிருத்தர் சொல்லவே, அவர்களிருவரும் பாண்டியன் நாட்டு வாரிசு என்று வந்தியத்தேவன் மூலம் தெரிய வருகிறது. அதனால், அருள்மொழிவர்மனான இராஜராஜ சோழனை சக்ரவர்த்தி ஆக்குவதே சிறந்தது என்ற முடிவு மீண்டும் துளிர் விடுகிறது, சோழ நாட்டு அரச குடும்பத்தில். விதி மீண்டும் அந்த எண்ணத்தில் இஷ்டம் இல்லை என்பது போல், மற்றொரு சம்பவத்தை நிகழ்த்துகிறது. நந்தினி, போலி மதுராந்தகர் ஆகிய இருவரும் பாண்டியன் நாட்டு வம்சத்தில் பிறந்தவர்கள் என்ற இரகசியம் வெளிவரும் அதே நேரத்தில், வெளிச்சத்திற்கு வந்த மற்றொரு ரகசியம் அனைவரையும் மகிழ்ச்சி அடைய வைக்கிறது.

சுந்தர சோழ சக்ரவர்த்தியின் பெரியப்பாவான சிவ பக்தர் கண்டராதித்தர் ஆன்மீக ஈடுபாட்டால் முதலில் திருமணம் செய்ய விருப்பமில்லாமல் இருக்கும் சமயத்தில் அவரை போலவே தீவிர சிவ பக்தையாக இருக்கும் செம்பியன் மாதேவியை பார்த்து, திருமணம் செய்துக்கொள்கிறார். கால தாமதமான திருமணம் என்றாலும் பிள்ளை பேரில் கண்டராதித்தருக்கு இஷ்டம் இல்லையென்றாலும், செம்பியன் மாதேவியாரின் வற்புறுத்தலில் ஒரு பிள்ளையை பெறுகின்றனர். ஆனால், தனக்கு திருமணம் ஆகும் முன்பே, இளைய சகோதரரான அரிஞ்சய சோழர் அரியணையில் ஏறியதால், தனது வாரிசுகளால் பிற்காலத்தில் சோழ சாம்ராஜ்ஜியத்தில் அரியணை போட்டி ஏற்படக்கூடாது என்பதால், தனக்கு பிறந்த மகனை; தன்னையும், தன் மனைவி செம்பியன் மாதேவியையும் போல் தீவிர சிவ பக்தராக ஆன்மீகத்திற்கு தொண்டாற்றவே விரும்புவதாகவும், சக்ரவர்த்தியாக்க கூடாது என்றும் அதன்படி தன் மகனை வளர்க்க தனது மனைவி செம்பியன் மாதேவியிடம் சத்தியம் வாங்கிக்கொண்டு சிவனடி சேர்கிறார் கண்டராதித்தர். ஆனால், கண்டராதித்தருக்கும், செம்பியன் மாதேவிக்கும் பிறந்த குழந்தை இறந்தது என்று எண்ணி, மாற்று பிள்ளையாக தற்கொலை செய்துக்கொண்டதலிருந்து உயிர்ப்பிழைத்த தனது தோட்டத்தில் பராமரிக்கப்பட்டு வந்த ஊமையான மந்தாகினிக்கு பிறக்கும் இரட்டை குழந்தைகளில் ஒன்றான ஆண் குழந்தையை தன் பிள்ளையாக வளர்க்க முடிவெடுத்ததே, மதுராந்தகர் அரியணை ஏற கண்டராதித்தர் மறுத்ததன் காரணம் என பின்னாளில் தெரிய வருகிறது. அங்கேயும் விதி விளையாடுகிறது. கண்டராதித்தருக்கும், செம்பியன் மாதேவிக்கும் பிறந்து, இறந்ததாக எண்ணப்பட்ட ஆண் குழந்தை, உயிரோடிருப்பது பல ஆண்டுகள் கழித்து தெரிய வந்தாலும், இடைப்பட்ட காலத்தில் பெற்ற பிள்ளையாகவே பாவித்த பாசத்தால் வளர்ப்பு மகனான போலி மதுராந்தகரை உதரி விடாமல் அரச குலத்தவர் போலவே வளர்த்து, தான் பெற்ற பிள்ளையை ஊமையான மந்தாகினியின் சகோதரியிடம் கொடுத்து அவர் பிள்ளையாக சேந்தன் அமுதன் என்ற பெயரில் சிவ பக்தராக தனது கண்பார்வையில், பராமரிப்பில் சாதாரண பிள்ளையாக வளர்க்கிறார் செம்பியன் மாதேவி.

பாண்டிய வம்சமான போலி மதுராந்தகர், சந்தர்ப்ப சூழ்நிலையால் தஞ்சையை விட்டு நீங்கவே, செம்பியன் மாதேவியின் உண்மையான மகனான 'சேந்தன் அமுதன்' அரண்மனைக்கு பிரவேசிக்கிறான். இந்த உண்மை அரச குடும்பத்திற்கு தெரிந்தவுடன் மீண்டும் அருள்மொழிவர்மனை தவிர்த்து உண்மையான உத்தம மதுராந்தக சோழர் என்ற பெயரில் பின்னாளில் போற்றப்பட்ட சேந்தன் அமுதன் அரியணைக்கு ஏறும் சூழல் உருவாகிறது.

சுந்தர சோழ சக்ரவர்த்தி, சோழ பேரரசு சாம்ராஜ்ஜியத்தை தனது மகன் விடுத்து, தனது பெரியப்பாவின் மகனான உத்தம மதுராந்தக சோழருக்கு முடிச்சூட்ட காரணக்கர்தவரான பெரிய பழுவேட்டரையர் திடீரென தனது நிலைபாட்டை மாற்றி கொள்கிறார். நந்தினி வஞ்சகி, தன்னை பகடையாக உபயோகப்படுத்திக்கொண்டதை தெரியவந்ததை அடுத்து அருள்மொழிவர்மனான இராஜராஜ சோழனே அரியணைக்கு உரியவன் என்ற முடிவிற்கு வருகிறார்.

ஆனால், இலங்கை போரை பாதி முடித்து முழு வெற்றிக்கு பணியாற்றி கொண்டிருந்தபோது, தஞ்சையில் சோழ பேரரசில் நிலவிய அசாதாரணமான சூழ்நிலையால் வேறு வழியின்றி இலங்கையிலிருந்து தமிழகம் வரும்  அருள்மொழிவர்மனான இராஜராஜ சோழனுக்கு, வழியில் நிகழும் பல இன்னல்களை வந்தியத்தேவன் மற்றும் மந்தானிகினியின் சகோதர மகளும், பின்னாளில் சோழ பேரரசின் சக்ரவர்த்தனியாக ஆகும் ஓடைக்கார பெண்ணான பூங்குழலியின் உதவியால் தப்பிக்கிறார். அரியணை துறந்து பல நாடுகள் சுற்ற வேண்டும் என்ற ஆசைக்கொண்டிருக்கும் தன்னை

அரச குடும்பத்தினர் முதல் மக்கள் வரை  அரியணையில் அமர வைக்க வேண்டும் என்ற அவா அருள்மொழிவர்மனுக்கு பிடிக்காததாக எப்போதும் இருந்த வந்த நிலையில், உத்தம மதுராந்தக சோழர் முடிசூட்டும்  முடிவிற்கு அனைவரும் இசைந்து கொடுத்த நிம்மதி சிறிது நாழிகைகள் கூட இல்லாமல், பெரிய பழுவேட்டரையரின் மன மாற்றம் கசப்பானதாகவே இருந்தது அருள்மொழிவர்மனுக்கு. தனது பெண் மயக்கத்தால் சாம்ராஜ்ஜியத்திற்கு ஏற்பட்ட ஆபத்தால் மனமுடைந்த பெரிய பழுவேட்டரையர் தற்கொலை செய்துக்கொள்கிறார். இறக்கும் தருவாயில் அத்தகைய பராக்கிரசாலியான பெரிய பழுவேட்டரையரின் இறுதி ஆசையை நிறைவேற்ற முடியாது என கூற முடியாததால், தனக்கு சக்ரவர்த்தியாக முடிசூட்ட அருள்மொழிவர்மன் ஒப்புக்கொள்கிறார்.

முடிசூட்டும் நாள் வருகிறது, வந்தியத்தேவன் உதவிக்கொண்டு தன் திட்டப்படி தந்திரத்தால் தனது அரியணையை தியாகம் செய்து உத்தம மதுராந்தகருக்கே முடிசூட்டி சக்ரவர்த்தி ஆக்குகிறார், அருள்மொழிவர்மனான இராஜராஜ சோழன். சேந்தன் அமுதனாக ஏழை வீட்டில் வளர்ந்து சக்ரவர்த்தியான உத்தம மதுராந்தக சோழர், தனது மன விருப்பப்படி ஓடைக்கார பெண்ணான பூங்குழலியை மனம் செய்துக்கொள்கிறார்.

தனது நண்பர்களான கந்தமாறன், பார்த்திபேந்திர ஆகியோருக்கு அரசை பாதுகாக்கும் பொறுப்பை ஒப்படைத்து விட்டு, தன்னையே நினைத்து வாழும் கொடும்பாளூர் இளவரசி வானதியை, அனைவரையும் விட பற்றும், பாசமும் கொண்ட தனது சகோதரி குந்தவை ஆசையின்படி மனம் செய்துக்கொள்கிறார் அருள்மொழிவர்மனான இராஜராஜ சோழன். பின்னர், வந்தியத்தேவனுடன் இணைந்து, தமிழக வணிகர்களின் நலனுக்காக கடற்கொள்ளையர்களை அழிக்க கடலில் செல்ல முடிவு எடுக்கிறார் அருள்மொழிவர்மன்.

சோழ பேரரசுக்கு மிகப்பெரிய உதவியை செய்ததால், வந்தியத்தேவனுக்கு அவன் லட்சியமான வாணர் குலம் பரிசாக வழங்கப்படுகிறது. சிற்றரசன் என்னும் அந்தஸ்தும் பெறுகிறார் வல்லவரையன் வந்தியத்தேவன்.

அருள்மொழிவர்மனுடன் கடலுக்கு சென்று நினைத்த காரியத்தில் வெற்றிப்பெற்று மீண்டும் வரும் போது, தங்களை திருமணம் செய்துக்கொள்வதாக குந்தவை பிராட்டியாரிடம் விடைப்பெற்றுக் கொண்டிருக்கும் போது, தன் மீது காதல் கொண்ட சம்புவரையர் குலத்தின் இளவரசியான கரு நிற பேரழகி 'மணிமேகலை', தன்னால் வந்தியத்தேவன் உயிரிழந்து விட்டதாக தவறாக எண்ணி சித்தபிரம்மை பிடித்து தொலைந்து போனவள் மீட்கப்பட்டதாக வந்தியத்தேவனுக்கு ஓலை வருகிறது.

குந்தவையிடம் அனுமதிப்பெற்று மணிமேகலையை சென்று பார்க்கிறான். அவன் வருகைக்காகவே உயிரை பிடித்திருந்தது போல், அவன் வந்து தன்னை அவனுடைய மடியில் போட்டுக்கொண்ட சில நாழிகையில் உயிர் துறக்கிறாள் அந்த அழகிய மங்கை. தன் இதயத்தில் தெய்வமாக ஆகி விட்ட மணிமேகலை இனி தான் முன்னெடுக்கும் அனைத்து காரியங்களிலுன் எனக்கு துணையாகவே இருப்பாள் என வந்தியத்தேவன் எண்ணி கொண்டிருப்தோடு கதை முடிவடைகிறது.

கதைமாந்தர்கள்

  • அருள்மொழிவர்மன் - இராஜராஜ சோழன்
  • வல்லவரையன் வந்தியதேவன்
  • குந்தவை (இராஜராஜ சோழன்)
  • நந்தினி - பழுவூர் இளையராணி
  • ஆதித்த கரிகாலன் (இராஜராஜ சோழன் சகோதரன்)
  • வானதி (கொடும்பாளூர் இளவரசி) (இராஜராஜ சோழனின் முதல் மனைவி)
  • ஆழ்வார்க்கடியான் (உளவு பார்ப்பவர்)
  • மந்தாகினி (ஊமைராணி என்றழைக்கப்படுபவர்) (இராஜராஜ சோழனின் தந்தையான சுந்தர சோழனின் காதலி)
  • பெரிய பழுவேட்டரையர் (தஞ்சை கோட்டைத்தலைவன்) அரசனுக்கு அடுத்த ஸ்தானத்தில் வலிமையான அதிகாரித்தில் இருப்பவர்
  • செம்பியன் மாதேவி (கண்டராதித்த சோழனின் மனைவி) (உத்தம மதுராந்தக சோழ தேவரின் அன்னை)
  • சின்ன பழுவேட்டரையர் (பெரிய பழுவேட்டரையர் சகோதரன்)
  • அநிருத்த பிரமராயர் (முதன் மந்திரி)
  • பெரிய வேளாளர் பூதி விக்கிரம கேசரி (சேனாதிபதி) கொடும்பாளூர் அரசன்
  • பூங்குழலி (ஓடக்கார பெண்) (உத்தம மதுராந்தக சோழரின் மனைவி)
  • சேந்தன் அமுதன் (உத்தம மதுராந்தக சோழ தேவர்)
  • போலி மதுராந்தகர் (பாண்டிய நாட்டு இளவல்- அமரபுஜங்கன் நெடுஞ்செழியன்)
  • ரவிதாசன் (பாண்டிய நாட்டு ஆபத்துதவிகள் - அதாவது தளபதி)
  • மணிமேகலை (சம்புவரையர் இளவரசி, வந்தியதேவனை விரும்பியவள்)
  • கந்தமாறன் (சம்புவரையர் இளவரசன்)
  • பார்த்திபேந்திர (பல்லவன் குளம், ஆதித்த கரிகாலனின் நண்பன்)