under review

புத்தம்வீடு

From Tamil Wiki
Revision as of 00:10, 30 January 2022 by Madhusaml (talk | contribs) (category & stage updated)


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.

புத்தம்வீடு

புத்தம்வீடு (1964) ஹெப்சிபா ஜேசுதாசன் எழுதிய நாவல். தமிழில் முழுக்கமுழுக்க வட்டார மொழியி, வட்டாரப் பண்பாட்டில் நிலைகொள்ளும் படைப்புகளில் முன்னோடியானது. குமரி மாவட்ட நாடார் சாதிப்பின்புலத்தில் எழுதப்பட்டது.

எழுத்து,பிரசுரம்

ஹெப்ஸிபா ஜேசுதாசனின் புத்தம்வீடு 1961-இல் அவரால் எழுதப்பட்டது ஒரு விடுமுறைக் காலத்தில் புலிப்புனம் ஊரிலுள்ளதன் இல்லத்தில் வைத்து எவரும் அறியாமல் இதை எழுதிமுடித்தார். ஹெப்ஸிபாவின் கணவர் ஜேசுதாசன் இதை சுந்தர ராமசாமியிடம் காட்டினார். இது ஒரு முக்கியமான படைப்பு என அவர் சொல்லவே பிரசுர முயற்சிகளில் ஈடுபட்டார். 1964ல் கண. முத்தையா நடத்தி வந்த தமிழ்ப் புத்தகாலயம் இந்நாவலை வெளியிட்டது.

கதைச்சுருக்கம்

இந்ந்நாவல் நிலபுலங்களும் அதிகாரமும் கொண்டிருந்த நாடார் குடும்பம் ஒன்றின் படிப்படியான சரிவையும், அவர்களின் பழம்பெருமைப் போக்கையும், அதிலிருந்து நவீன உலகைப் புரிந்து கொண்டு வெளிவந்து யதார்த்தத்தைச் சந்திக்கும் கதைநாயகியையும் காட்டுகிறது. இது மூன்று தலைமுறையின் கதை. கண்ணப்பச்சி என்னும் முதியவர் பழைய குடும்பப் பெருமையுடன் குடும்பத் தலைவராக இருக்கிறார். அவருக்கு இரண்டு மகன்கள் அடுத்த தலைமுறை. அதற்கு அடுத்த தலைமுறையில் இரண்டு பேத்திகள், லிஸி மற்றும் லில்லி. லிஸிதான் இந்நாவலின் கதைநாயகி.

கதை பனைவிளை என்னும் ஊரில் நடைபெறுகிறது. இவ்வூர் தன்னுடைய சொந்த ஊரான புலிப்புனம்தான் என ஆசிரியை குறிப்பிடுகிறார். அங்கே செல்வந்த நாடார் குடும்பங்களில் கடுமையான இற்செறிப்பு உண்டு. பெண்கள் வெளிவர முடியாது.அவர்களை விட சமூகப்படிநிலையில் மிகக் கீழே இருப்பவர்கள் பனையேறும் நாடார்கள். அவர்களில் ஒருவனாகிய தங்கராஜ் லிஸியை விரும்புகிறான். அவ்விருப்பத்தை அவளும் ஏற்கிறாள். அந்த விருப்பத்தை மேட்டிமை பேசும் அவள் குடும்பமும் குடிகாரரான அவள் தந்தையும் ஏற்பதில்லை.

இந்நிலையில் லில்லியின் தந்தை கொலை செய்யப்படுகிறாள். சந்தர்ப்ப சாட்சிகள் வழியாக தங்கராஜ் கைது செய்யப்படுகிறான். லிஸியின் தந்தைதான் கொலைகாரர் என்பது வெளிப்படுகிறது. தங்கராஜ் விடுதலையடைகிறான். லிஸி எந்நிலையிலும் சீற்றம் அடைவதோ எதிர்ப்பதோ இல்லை. ஆனால் தளரா உறுதியுடன் இருக்கிறாள். இறுதியில் தங்கராஜை மணம் முடிக்கிறாள்

கதைமாந்தர்

லிஸி- கதைநாயகி. அடக்கமான உறுதியான பெண்

லில்லி - லிஸியின் சகோதரி

தங்கராஜ் – பனையேறி. லிஸியின் காதலன்

கண்ணப்பச்சி – குடும்பத்தின் மூத்தவர். லிஸியின் தாத்தா

அன்பையன் - தங்கராஜின் அப்பா

இலக்கிய இடம்

புத்தம்வீடு நாவலை தமிழில் ஒரு முன்னுதாரணமான நாவல் என்று சுந்தர ராமசாமி குறிப்பிட்டு வந்தார். விமர்சகர்கள் இந்நாவலை முக்கியமானதாக கருதியமைக்குக் காரணங்கள் இவை.

  • இது வழக்கமாக எழுதப்படும் உயர்ஜாதிக் குடும்பச் சூழலைச் சார்ந்த படைப்பு அல்ல. எழுதப்படாத ஒரு வாழ்க்கைக் களத்தை முன்வைக்கிறது
  • பெண்கள் எழுத வந்த காலத்தில் அவர்களுக்கு முன்னுதாரணமாக அமைந்த படைப்பு இது. கற்பனாவாதமோ மிகையுணர்ச்சியோ இல்லாமல் வாழ்க்கைச் சித்திரத்தை அளிக்கிறது
  • ஒரு பெண்ணின் வாழ்க்கையை எழுதும்போது இயல்பாக சமூக மாற்றத்தையும் பகைப்புலமாகச் சித்தரிக்கிறது

இந்நாவலில் நடக்கும் சகோதரக் கொலை பைபிளில் ஏபலை காயின் கொலை செய்த நிகழ்வைச் சுட்டுகிறது என சிட்டி- சிவபாதசுந்தரம் அவர்களின் ’தமிழ் நாவல்’ என்னும் நூலில் குறிப்பிடுகிறார்கள்.

’எல்லா விவரங்களும் ஒரு சூசகமாகவே வெளிப்படுகிறது நாவலில். நொடித்துப்போன குடும்பத்தின் நிலை, அதிலுள்ள குடித்துக்கொண்டும், மிரட்டிக்கொண்டும் இருக்கும் உபயோகமில்லாத இரு மகன்கள், குலப்பெருமையை மட்டும் நினைவில் வைத்துக்கொண்டு இன்னமும் அதன் பெருமிதத்தில் இருக்கும் உடல் நலிவுற்ற ஒரு வயோதிகர், இந்தக் காலி பெருங்காய டப்பா குடும்பத்தின் அத்தனை வீட்டு வேலைகளையும் செய்யும் பெண்கள் என்று அனைத்து விவரங்களும் ஒரு பெரிய கித்தானில் அடர்த்தியான வண்ணங்களோ, செதுக்கப்பட்ட உருவ அமைப்போ இல்லாத கீற்றோவியங்களாக உருப்பெறுகின்றன’ என்று விமர்சகர் அம்பை இந்நாவலைப்பற்றிச் சொல்கிறார்*

உசாத்துணை

தமிழ் நாவல் - சிட்டி-சிவபாதசுந்தரம் கிறிஸ்தவ இலக்கிய சங்கம் வெளியீடு