under review

புகையிலை விடு தூது

From Tamil Wiki
Revision as of 20:15, 12 July 2023 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected error in line feed character)
Pukaiyilai vidu thuthu image.jpg

புகையிலை விடு தூது ( பத்தொன்பதாம் நூற்றாண்டு) தமிழில் எழுதப்பட்ட சிற்றிலக்கியங்களில் ஒன்று. தூது என்னும் சிற்றிலக்கிய வகையைச் சேர்ந்தது. புகையிலையை தூது அனுப்புவதாக இது எழுதப்பட்டுள்ளது. தமிழின் தொன்மையான பகடி இலக்கியங்களில் ஒன்று இது

பதிப்பு, வரலாறு

’புகையிலை விடு தூது’ நூலை எழுதியவர் சீனிச்சர்க்கரைப் புலவர். கண்டறிந்து, பதிப்பித்தவர் தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதையர். 1939-ல், இந்நூல் பதிப்பிக்கப்பட்டது. நூலின் விலை: இரண்டனா. சென்னை கபீர் அச்சுக்கூடத்தில் இந்நூல் பதிப்பிக்கப்பட்டது. இது தூது வகைமையைச் சேர்ந்தது

நூலின் முகவுரையில், உ.வே.சா., "பாட்டுடைத் தலைவரான பழனியாண்டவருக்குப் புகையிலைச் சுருட்டு நிவேதனமுண்டென்று சிலர் சொல்லக் கேட்டதுண்டு. விராலிமலையில் அத்தகைய நிவேதன முண்டென்று தெரிகின்றது. இந்தப் புலவருக்கும் புகையிலை போடும் வழக்கம் இருக்கலாம். இந்த இயைபுகளே இந்தப் பிரபந்தத்தைப் பாடுவதற்கு காரணமாக இருந்தன போலும். புகையிலை மிகுதியாகப் பயிரிடப்படுகின்ற இடங்கள் சூழ்ந்த பழனிக்கு அருகில் வசித்த உபகாரி ஒருவர் கேட்டுக்கொள்ள இயற்றியதாகக் கூறுவதும் உண்டு." என்று குறிப்பிட்டுள்ளார்.

நூல் அமைப்பு

பழநி மலையில் குடிகொண்டுள்ள பால சுப்பிரமணியக் கடவுளின் மீது, தலைவி ஒருத்தி புகையிலையைத் தூதாக விடுவதாக இந்த நூல் அமைந்துள்ளது. 59 கண்ணிகளைக் கொண்ட இந்தத் தூது இலக்கியத்தில் 53 கண்ணிகள் புகையிலையைப் போற்றியே எழுதப்பட்டுள்ளன. இறைவனின் மீதான காதலைவிட, புகையிலையின் மீதான காதலே இந்த நூலில் அதிகம் காணப்படுகிறது. தமிழுக்கும் புகையிலைக்கும் சிலேடையாகப் பல பாடல்கள் அமைந்துள்ளன.

நூலின் ஆசிரியர்

இந்த நூலை எழுதியவர் சீனிச்சர்க்கரைப் புலவர். இவர் புலவர் பரம்பரையில் தோன்றியவர். ராமநாதபுரம் சமஸ்தான வித்வானாக இருந்த சர்க்கரைப் புலவரின் மகன். மயூரகிரிக்கோவை இயற்றிய சாந்துப்புலவரின் தம்பி. இவருடைய காலம் 18-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி. 'திருச்செந்தூர்ப் பரணி’ இவர் இயற்றிய மற்றொரு நூல்.

புகையிலை விடு தூது - சிலேடைப் பாடல்கள்

புகையிலை உருவான கதை

தங்களுக்குள் ஏற்பட்ட ஒரு வழக்கைத் தீர்த்துக் கொள்வதற்காக இந்திர சபைக்குச் சென்றனர் மும்மூர்த்திகள். அவர்களில் பிரம்மாவிடம் புகையிலையயும், விஷ்ணுவிடம் துளசியையும், சிவனிடம் வில்வத்தையும் அளிக்கின்றனர் தேவர்கள். மறுநாள் அந்தப் பொருட்களோடு அவைக்கு வரச் சொல்கின்றனர்.

சிவபெருமானிடம் அளிக்கப்பட்ட வில்வத்தை கங்கை கொண்டு சென்று விட்டது. விஷ்ணுவிடம் அளிக்கப்பட்ட துளசியை பாற்கடல் கவர்ந்து சென்றது. பிரம்மா தான் கொண்டு சென்ற புகையிலையைத் தன் நாவில் வீற்றிருக்கும் நாமகளிடம் பாதுகாப்பாக அளித்தார். ஆகவே மறுநாள் அவர்கள் அவைக்குச் சென்ற போது பிரம்மாவால் மட்டுமே தன்னிடம் அளிக்கப்பட்ட பொருளைத் திரும்பக் கொண்டு வர முடிந்தது.

பிரம்மா தனது பொருளைப் பற்றிச் சொல்லும்போது, "மற்றவர்களுக்கு அளிக்கப்பட்ட பொருள்கள் போயின; என்னுடையது போகையிலை" என்றார்.

"பிரம்மா கூறிய 'போகையிலை' என்ற சொல் மருவி, 'புகையிலை ’ ஆயிற்று" என்கிறார், சீனிச்சர்க்கரைப் புலவர். மேலும் அவர், "பிரம்மாவினால் பாதுகாக்கப்பட்ட பெருமை உடையதால் இதற்கு 'பிரம்ம பத்திரம்’ என்ற பெயர் உண்டாயிற்று" என்றும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.

பாடல் சிறப்புகள்

புகையிலையின் பெருமை, அதிலிருந்து உருவாகும் மூக்குப்பொடியின் சிறப்புப் பற்றி பல்வேறு பாடல்களில் குறிப்பிடுகிறார் சீனிச்சர்க்கரைப் புலவர். நன்கு கற்றறிந்த புலவர்கள் கூட புகையிலைக்கு அடிமையாகி விடுவதை,

"கற்றுத் தெளிந்த கனப்பிரபல வான்களுமுன்
சுற்றுக்கு ளாவதென்ன சூழ்ச்சியோ?"

- என்கிறார். புகையிலையால் செய்யப்படும் மூக்குப்பொடியின் மகிமையை,

"வாடைப் பொடிக் கதம்பமான வெல்லா
முன்னுடைய சாடிப் பொடிக்குச் சரியுண்டோ?"

- என்று புகழ்ந்துரைக்கிறார். ஒரு சிட்டிகைப்பொடிக்காகத் தம் நிலையையும் மறந்துp பிறரிடம் கெஞ்சும் மனிதர்களைக் குறித்து,

சொற்காட்டு நல்ல துடிகார ராரை
பற்காட்ட விட்ட பழிகாரா"

- என்று நகைச்சுவையாகக் குறிப்பிடுகிறார். "புகையிலையின் ஒன்று திரண்ட சுருட்டுப் புகைபோல் 'ஆகாயம்’ ஆனது இருப்பதால், இறைவன் ஆகாயத் திருமேனி உடையவனாய் ஆனான்" என்பது சீனிச்சர்க்கரைப் புலவரின் விளக்கம். சிவனும் புகையிலையும் ஒன்று; பிரம்மாவும் புகையிலையும் ஒன்று; விஷ்ணுவும் புகையிலையும் ஒன்று என்றெல்லாம் இவர் சிலேடையாக இந்நூலில் பாடியுள்ளார்.

இலக்கிய இடம்

தமிழின் தொன்மையான பகடி இலக்கியங்களில் ஒன்று புகையிலைவிடு தூது.

உசாத்துணை


✅Finalised Page