பி.எஸ். ரங்கநாதன்

From Tamil Wiki
Revision as of 22:52, 23 September 2022 by ASN (talk | contribs) (Page created; Para Added; Image Added.)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
பி. எஸ். ரங்கநாதன் (கடுகு, அகஸ்தியன்)

பி.எஸ். ரங்கநாதன் (கடுகு, அகஸ்தியன்; 1932-2020) பொது வாசிப்புக்குரிய பல படைப்புகளை நகைச்சுவை கலந்து எழுதியவர். கட்டுரைகள், நேர்காணல், துணுக்குச் செய்திகள், தொடர்கதைகள் என்று தமிழின் முன்னணி இதழ்கள் பலவற்றிற்குப் பங்களித்துள்ளார். எழுத்தாளர் ‘கல்கி’யை தனது குருவாகக் கொண்டு இதழியல் உலகில் செயல்பட்டார்.

பிறப்பு, கல்வி

பி.எஸ். ரங்கநாதன் செங்கல்பட்டில் மார்ச் 10, 1932-ல் பிறந்தார். செங்கல்பட்டு செயின்ட் ஜோசஃப் பள்ளியில் உயர்நிலைக் கல்வியை முடித்தார்.

தனி வாழ்க்கை

படிப்பை முடித்ததும் செங்கல்பட்டில் இயங்கி வந்த ’சேவா சங்கம்' என்ற அமைப்புடன் இணைந்து பல்வேறு சமூக நற்பணிகளை மேற்கொண்டார். அதன் மூலம் கல்கி, ராஜாஜி போன்றோரது அறிமுகம் கிடைத்தது.

சென்னை ஜி.பி.ஓ.வில் (தபால் துறை) பணி கிடைத்தது. கமலாவுடன் திருமணம் நிகழ்ந்தது. ஒரே மகள் ஆனந்தி.

நாடக வாழ்க்கை

பள்ளியில் படிக்கும்போது சக மாணவர் பாபுவுடன் (பிற்காலத்தில் சித்ராலயா கோபுவாக அறியப்பட்டவர்) இணைந்து பல நகைச்சுவை நிகழ்ச்சிகளை, மிமிக்ரி நிகழ்ச்சிகளை நடத்தினார். உடன் படித்த ஸ்ரீதர் (பின்னாளில் இயக்குநர் ஸ்ரீதர்) எழுதிய நாடகங்களில் நடித்தார். ஆத்தூர் சீனிவாச ஐயர் (சோவின் தந்தை), டி.ஏ. மதுரம் உள்ளிட்ட பலரது பாராட்டு அவற்றுக்குக் கிடைத்தது. அதுவே நாடகங்கள் பல எழுதவும், நடிக்கவும், இயக்கவும் தூண்டுகோலாக அமைந்தது.

சென்னையில் சோ, கே.பாலசந்தர் உள்ளிட்ட பலர் எழுதிய நாடகங்களை அரங்கேற்றினார். நடித்தார். ‘பணம் பேசுகிறது' என்ற தலைப்பில் பி.எஸ். ரங்கநாதன் எழுதிய நாடகத்தை கே.பாலசந்தர் இயக்கினார். வானொலிக்காக நடிகர் சிவாஜி கணேசனை நேர்காணல் செய்த அனுபவமும் இவருக்கு உண்டு.

இலக்கிய வாழ்க்கை

ரங்கநாதனின் நாடகங்களால், நற்பணிகளால் ஈர்க்கப்பட்ட கல்கி, 1952-ல் “பொன் விளையும் பூமி” என்ற கட்டுரையை கல்கி இதழில் எழுத வாய்ப்பளித்தார். அது முதல் தொடர்ந்து பல கட்டுரைகளையும், துணுக்குகளையும் கல்கியில் எழுதினார்.

நாடகங்களோடு பேட்டிகள், கட்டுரைகள், கதைகள் எழுதி வந்த இவருக்கு டெல்லிக்குப் பணிமாற்றம் நிகழ்ந்தது. அங்கு சென்றும் எழுத்துப் பணியைத் தொடர்ந்தார். ”அரே டெல்லிவாலா” என்ற இவரது துணுக்குக் கட்டுரை குமுதத்தில் வெளியானது. அதைத் தொடர்ந்து பல கட்டுரைகள், துணுக்குச் செய்திகள், பேட்டிகள் குமுதத்தில் வெளியாகின.  சாவி, தினமணி கதிருக்கு எழுதும்படி கேட்டுக் கொண்டார். அதற்காக, ’தான் மிகச் சிறியவன்’ என்று பொருள் படும்படி ‘அகஸ்தியன்’ (குறுமுனி) என்ற பெயரை தனக்கான புனை பெயராகச் சூட்டிக் கொண்டு எழுதினார். முதலில் ‘பஞ்சு கதைகள்' என்ற தலைப்பில் நகைச்சுவைக் கட்டுரைகளை எழுதினார். அதற்கு நல்ல வரவேற்புக் கிடைக்கவே தொடர்ந்து நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து சாவியில் நிறைய எழுதினார். கமலா, தொச்சு, பஞ்சு போன்ற  கதாபாத்திரங்களை உருவாக்கி பல நகைச்சுவைத் தொடர் கதைகளை எழுதினார்.

குமுதத்தில் ‘கடுகுச் செய்திகள்' என்ற தலைப்பில் துணுக்குகளை எழுதினார். நாளடைவில், ‘கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பதைக் குறிக்கும் வகையில்  ‘கடுகு’  என்ற பெயரையும் தனக்கான புனை பெயராகச் சூட்டிக் கொண்டார். இவர் கல்கியில் எழுதிய “கடுகு பதில்கள்”, “கேரக்டர்” கட்டுரைகள்  வரவேற்பைப் பெற்ற ஒன்று. தனது வாழ்க்கை அனுபவங்களை 'டில்லி வாழ்க்கை' என்ற தலைப்பில் கணையாழியில் எழுதியிருக்கிறார்.

கலைமகள், மஞ்சரி, அமுதசுரபி எனப் பல இதழ்களில் கதை, கட்டுரை, துணுக்குகள், நேர்காணல், பேட்டிகள் என பல படைப்புளைத் தந்துள்ளார் பி. எஸ். ரங்கநாதன்.