under review

பி.எம்.மதுரைப் பிள்ளை: Difference between revisions

From Tamil Wiki
(changed single quotes)
(changed template text)
Line 53: Line 53:
*[https://youtu.be/mkq8AaOIchc P.M.Madurai Pillai Paraiyar - youtube.com]
*[https://youtu.be/mkq8AaOIchc P.M.Madurai Pillai Paraiyar - youtube.com]
*[https://mediyaan.com/biography-of-p-m-madurai-pillai/ பெ. மா. மதுரைப் பிள்ளை, சுதந்திரம்75, மீடியான்.காம்]  
*[https://mediyaan.com/biography-of-p-m-madurai-pillai/ பெ. மா. மதுரைப் பிள்ளை, சுதந்திரம்75, மீடியான்.காம்]  
{{finalised}}
{{Finalised}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 13:36, 15 November 2022

மதுரைப் பிள்ளை

பி.எம்.மதுரைப்பிள்ளை (டிசம்பர் 26, 1858 - ஜூலை 15, 1913) பெ.மா.மதுரைப்பிள்ளை. தொடக்ககால தலித் இயக்கத்தின் புரவலராக இருந்த செல்வந்தர். ரங்கூனில் கப்பல் வணிகராக திகழ்ந்தார்.

(பார்க்க:எம்.சி.மதுரைப் பிள்ளை)

பிறப்பு, கல்வி

மதுரைப் பிள்ளையின் முன்னோர் சென்னையைச் சேர்ந்தவர். சென்னை வேப்பேரியில் வாழ்ந்த அவருடைய பாட்டனார் பெரியதம்பி விவசாயத்தையும் வணிகத்தையும் கைக்கொண்டு வாழ்ந்த செல்வந்தர். அவருடைய மகன் மார்க்கண்ட மூர்த்தி 1835-ஆம் ஆண்டு பிறந்தார். அவரும் வணிகராகவும் செல்வந்தராகவும் திகழ்ந்தார். மார்க்கண்ட மூர்த்திக்கும் அம்மணியம்மாளுக்கும் டிசம்பர் 26, 1858-ஆம் ஆண்டு இரண்டாவது மகனாகப் பிறந்தவர் மதுரைப்பிள்ளை.

மதுரைப்பிள்ளை முதலில் ராகவச்செட்டியார் என்பவரிடமும் பிறகு கணபதி அய்யர் என்பவரிடமும் கல்வி பயின்றார். பிறகு வேப்பேரியிலிருந்த எஸ்.பி.ஜி. கிறித்தவப் பள்ளியில் சேர்ந்தார். தமிழுக்கும் ஆங்கிலத்திற்கும் வீட்டிலேயே தனி ஆசிரியர்கள் அமர்த்தப்பட்டனர். மதுரைப் பிள்ளையின் மாமன் வீராச்சாமி 1824-ஆம் ஆண்டில் நடந்த முதல் பர்மா போரில் ராணுவ வீரராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவராக ரங்கூனில் குடியமர்ந்திருந்தார் .மதுரைப் பிள்ளையின் சகோதரர்கள் ஏற்கெனவே அவரிடம் தங்கிப் பயின்றுவந்தனர். மதுரைப் பிள்ளையையும் மேல்நிலைக் கல்விக்காக ரங்கூன் செயிண்ட் பாய்ஸ் மேல்நிலைப்பள்ளியில் சேர்த்தனர். இடையில் பிரெஞ்சு மொழியையும் பர்மிய மொழியையும் மதுரைப் பிள்ளை கற்றுக்கொண்டார்.

ரங்கூனில் படித்த மதுரையின் சகோதரர்களில் ஒருவரான முருகேசன் சோதிடர் ஆகிவிட்டிருந்தார். மற்றொருவரான முத்துச்சாமி படிக்கும்போதே பௌத்த பிக்குவாகி 22-வது வயதில் குடும்பத்தை முற்றிலும் துறந்து வெளியேறியிருந்தார். ஆகவே பர்மாவில் மேல்நிலைப் படிப்பை முடித்ததும் மதுரை சென்னைக்கு வரவழைக்கப்பட்டு. சென்னையில் கிறித்தவக் கல்லூரியில் சேர்ந்து படிப்பை முடித்துக்கொண்டார். அங்கே வில்லியம் மில்லர் அவருக்கு அணுக்கமான ஆசிரியராக இருந்தார்.

தனிவாழ்க்கை

மதுரைப்பிள்ளை 1877-ல் சென்னை மாநில கவர்னர் பக்கிங்ஹாம் பிரபுவின் நேர்முக எழுத்தராக பணியாற்றினார். 1877-ஆம் ஆண்டில் டெல்லி மாநகரத்திலிருந்த வைஸ்ராய் லிட்டன் பிரபு லண்டனில் விக்டோரியா மகாராணியார் 'இந்தியச் சக்ரவர்த்தி’ என்ற பட்டத்தை வகித்துக்கொண்ட நாளையொட்டி ஒரு பெரிய தர்பாரைக் கூட்டியபோது சென்னை கவர்னர் பக்கிங்காம் பிரபு தனது பரிவாரங்களுடன் கலந்துகொண்டார். அச்சமயம் பக்கிங்காம் பிரபுவுடன் ஒரு சாதாரண எழுத்தாளராக மதுரைப்பிள்ளை சென்றுவந்தார் என்று சுதேசமித்திரன் ஏடு குறிப்பிட்டுள்ளது

மதுரைப்பிள்ளையின் தந்தை சென்னையில் அரசு குத்தகைதாரராக பணியாற்றினார். மதுரைப் பிள்ளை 1878-ல் மீண்டும் ரங்கூன் சென்றார்.ரங்கூன் ஸ்ட்ராங் ஸ்டீல் எனும் சுரங்க நிறுவனத்தின் குத்தகைதாரரர் ஆனார். Stevedore and General Merchant & Contractor என்னும் நிறுவனத்தை தொடங்கி வெற்றிகரமாக நடத்தினார்.

1880-ல் ஆதிலட்சுமி அம்மாளை மணம்புரிந்து வைத்தனர். அவ்வாண்டே மதுரைப்பிள்ளையின் தந்தை மார்க்கண்ட மூர்த்தி மறைந்தார். மார்க்கண்ட மூர்த்திக்கு அக்காலத்தில் விரிவான அஞ்சலிச் சடங்குகள் நடந்தன. தசாவதானம் வேலாயுதப்புலவர் என்பவர் 'சரமக் கவிப் புஞ்சரம்’ என்ற கவிதையை இயற்றி இரங்கல் செய்தியாக அச்சிட்டு வெளியிட்டார். மார்க்கண்ட மூர்த்தியின் காரிய நாளன்று புலவர்கள் ஒன்றுகூடி அவரைப் புகழ்ந்து பாடினர். வைரக்கண் வேலாயுதம் புலவர் திருக்குறிப்பு நாயனார் கதையைக் காலட்சேபமாகக் கூறினார். புலவரின் சரம கவிப் புஞ்சரமும் திருக்குறிப்பு நாயனார் கதையை வாக்கியங்களோடு பேசி, பாடி, நடித்துக் காட்டிய தகவல்களும் ரங்கூன் பிரதேசத் திரட்டு நூலிலும் கூறப்பட்டுள்ளதாக மதுரைப்பிள்ளை வாழ்க்கை வரலாற்றை எழுதிய அன்பு பொன்னோவியம் கூறுகிறார்

மதுரைப்பிள்ளை 1885-ஆம் ஆண்டு ரங்கூன் நகரக் கௌரவ நீதிபதியாக ஆனார். அதே ஆண்டில் டவுன் பாடசாலை என்ற மிகுதியும் தமிழ்க் குழந்தைகள் பயில ஒரு பள்ளியைப் பெரும்பொருட் செலவில் தொடங்கினார். 1886-ஆம் ஆண்டு முதல் மாநகர கமிஷனராகவும் ஆனார்.. வணிகத்தேவைக்காக அவர் கப்பல் ஒன்றை வாங்கிய அதற்குத் தன் மகளான மீனாட்சியின் பெயரைச் சூட்டினார் (1912).

மதுரைப் பிள்ளை 1890-ஆம் ஆண்டு வணிக மேம்பாடு தொடர்பாக அயல்நாட்டுப் பயணம் மேற்கொண்டார். இரங்கூனிலிருந்து கல்கத்தா, அலகாபாத், பம்பாய், பரோடாவரை பயணம் செய்தார். இந்த இடங்களில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜூன் 26-ஆம் தேதி பரோடா மன்னர் கெய்க்வாட்டுடன் இணைந்து கப்பலில் பயணமானார். லண்டன் சென்ற அவர் ஏடன், வெனிஸ், பெல்ஜியம், ஜெர்மன், பெர்லின், பாரீஸ், ரோம் போன்ற இடங்களுக்குச் சென்று திரும்பினார். ரோம் நகரத்தில் போப்பாண்டவரைச் சந்தித்தார். இது இரண்டுமாதப் பயணமாக அமைந்தது. இப்பயணம் குறித்து அவர் ஒரு நூல் எழுதி வெளியிட்டார் என்று 'மதுரை பிரபந்தம்’ நூல் மூலம் அறியமுடிகிறது.

மதுரைப்பிள்ளையின் ஒரே மகளான மீனாட்சியை 1900-ஆம் ஆண்டு வி.ஜி. வாசுதேவ பிள்ளைக்கு மணம் முடித்துவைத்தார். 'பகவத் தியாக கீர்த்தனம்’ என்ற இசை நூலையும் 'சக்குபாய் சரித்திரம்’ என்ற நாடக நூலையும் எழுதிய புலவரான வேலூர் கோவிந்தராஜதாசரின் மகன் வாசுதேவப் பிள்ளை. சென்னை கிறித்தவக் கல்லூரியில் பயின்றவர். வாசுதேவபிள்ளை 1919-ஆம் ஆண்டு நகர்மன்ற உறுப்பினரானார். 1931-ஆம் ஆண்டு சென்னை மாகாண சட்டமன்ற உறுப்பினராகவும் ஆனார். இத்தம்பதியரின் மகள் மீனாம்பாள் சிவராஜ். அவர் பின்னாளில் தமிழகத்தில் முக்கியத் தலைவராக ஆனார். அவர் கணவர் என். சிவராஜூம் முக்கியமான அரசியல் தலைவர்.

கல்வி,சமூகப் பணிகள்

மதுரைப் பிள்ளை முதலில் 63 நாயன்மார்கள் வரலாற்றை லட்சம் பிரதிகள் அச்சிட்டு ரங்கூனிலும் தமிழகத்திலும் வழங்கும்படிச் செய்தார். அதற்காக டிசம்பர் 23, 1881-ஆம் ஆண்டு ரங்கூனில் பெரியதொரு வெளியீட்டு விழா நடந்தது. தொடர்ந்து வேறுசில தமிழ் நூல்களையும் வெளிநாட்டுக் கதைகளையும் கவிதைகளையும் மொழியாக்கம் செய்து வெளியிட விரும்பினார். சென்னையில் அச்சிட்டுக் கொணரும் செலவினத்தைக் குறைக்கும் பொருட்டு தந்தையின் பெயரில் 'மார்க்கண்டெய்ல் பிரஸ்’ என்ற அச்சகத்தைத் தொடங்கினார். தமிழில் வெளியிடப்படும் நூல்களுக்கும் பொருளுதவி புரிபவராக மாறினார். இதற்குப் பிறகே 'வள்ளல் மதுரைப்பிள்ளை’ என்று புலவர்களால் அவர் குறிப்பிடப்பட்டார்.

மதுரைப்பிள்ளை ரங்கூனில் இருந்து வெளிவந்த ரஞ்சித்போதினி ,நாகை நீலலோசனி ,சுதேசி பரிபாலினி,பாண்டியன்,ஸைபுல் இஸ்லாம் போன்ற இதழ்களின் புரவலராக இருந்தார். அயோத்திதாச பண்டிதர் நடத்திவந்த தமிழன் இதழுக்கும் பொருளுதவி செய்தார்.

மதுரைப்பிள்ளை தமிழ் நாடகங்களை வளர்க்கவும் உதவினார்.ரங்கூனில் கலை நிகழ்ச்சிகள் நடத்த மதுரைப்பிள்ளை 'அரங்கு’ என்ற பெயரில் ஒரு கலையரங்கு கட்டினார். கலை நிகழ்ச்சிகள் நடக்காத நாட்களின் இரவில் சிறுவர்கள் படிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மதுரைப் பிள்ளை தமிழகத்திலிருந்து ரங்கூனுக்குக் கூலிகளாகச் சென்ற மக்கள் தங்குவதற்காக பார்க் தெருவில் ஒரு சத்திரம் கட்டினார். அதற்கு ரெஸ்ட் ஹவுஸ் என்று பெயரிட்டார். இந்திய அல்லது தமிழக ஏழைகள் எவரும் இலவசமாகத் தங்கிக்கொள்ள வாய்ப்பளிக்கப்பட்டது. மதுரைப் பிள்ளை ரங்கூன் டம்ரின் மருத்துவமனையை விரிவுபடுத்தினார். அந்தக் கட்டடத்தின் பெயர் மதுரைப் பிள்ளை ப்ளாக். ரங்கூன் முக்கிய வீதிகளில் ஒன்றான ஸ்ட்ரான்ட் தெருவில் குடிநீர்க் குழாயை ஏற்படுத்தினார். மதுரைப்பிள்ளை ஒரு பள்ளியைத் தொடங்கி நடத்தினார். அது ராயபகதூர் பா.மா.மதுரைப்பிள்ளை ஹைஸ்கூல் என்றழைக்கப்பட்டதாகத் தமிழன் இதழ் கூறுகிறது (டிசம்பர் 20, 1911). இப்பள்ளி ரங்கூன் மாண்கமரி தெருவிலிருந்ததாக சுதேசமித்திரன் கூறுகிறது. இதை ரங்கூன் கவர்னர் திறந்துவைத்தார். தொடர்ந்து மதுரைப் பிள்ளை பிற பள்ளிகளுக்கும் உதவினார்

பிரிட்டிஷ் வேல்ஸ் இளவரசர் தம்பதிகள் ரங்கூன் சென்றபோதும் (1905) இந்திய வைஸ்ராய் சென்றபோதும் (1908) விரிவான வரவேற்பினை அளித்தார். 1911-ஆம் ஆண்டு இந்தியா வந்த பிரிட்டிஷ் இளவரசர் கலந்துகொண்டபோது அழைப்பு விடுக்கப்பட்டவர்களில் மதுரைப் பிள்ளையும் ஒருவர்.

மதப்பணிகள்

1896-ஆம் ஆண்டு சென்னையிலும் ரங்கூனிலும் 'இந்து வாலிப நாடகக்குழு’ என்ற அமைப்பை ஏற்படுத்தினார். 1907-ஆம் ஆண்டு பூலோக வியாசன் இதழாசிரியர் பூஞ்சோலை முத்து வீரனை ரங்கூனில் தசாவதானம் செய்யவைத்து நாவலர் என்ற பட்டமளித்துப் பரிசும் வழங்கினார். தமிழர்கள் கட்டி, கைவிடப்பட்டுப் பாழடைந்திருந்த காமாட்சியம்மன் கோவிலை 1884-ஆம் ஆண்டு சீரமைத்தார். 1886-ஆம் ஆண்டு சென்னை 'வேப்பேரி ஸத்விஷயதான சங்கம்’ என்ற அமைப்பைத் தொடங்கிவைத்தார். 1892-ஆம் ஆண்டு தூத்துக்குடி கீழவூர் சிவஞான பிரகாச சபையினர் நாயன்மார்கள், ஆழ்வார்கள், சித்தர்கள் போன்றோரின் பாடல்களை அச்சிட்டு இலவசமாக வழங்க உதவினார். 1892-ஆம் ஆண்டு நாகையில் 'இந்து மனிதாபிமானச் சங்கம்’ ஏற்படுத்திக் கட்டடம் கட்டி வாரந்தோறும் சொற்பொழிவு வழங்கச் செய்தார். இரங்கூனில் மதுரைப்பிள்ளை நடத்திவந்த ஸ்ரீமதுரை வீர சுவாமி மகாபூஜை புகழ்பெற்றது. மயிலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலய அறுபத்துமூவர் விழாவை சொந்தச்செலவில் நடத்தினார்.

கோலார் தங்கவயல் மாரிக்குப்பம் சாக்கைய பௌத்த சங்கத்தார் சங்க வளர்ச்சிக்காக மதுரைப் பிள்ளையிடம் உதவி வேண்டி விண்ணப்பம் அளித்தார்கள். சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் ஜான் ரத்தினம் நடத்திய ஆதுலர் தொழில்கல்விச் சங்கம் என்ற அமைப்பிற்கும் மதுரைப்பிள்ளை நிதியுதவி அளித்தார்.

மறைவு

ஜூலை 15, 1913-ல் மதுரைப்பிள்ளை மறைந்தார். ரங்கூனிலுள்ள பிரமுகர்கள் உள்பட சகல ஜாதியாருமாகச் சேர்ந்து பதினைந்தாயிரம் பேர் சவ ஊர்வலத்தில் கலந்துகொண்டனர் என்று சுதேசமித்திரன் செய்தி குறிப்பிடுகிறது. கப்பல் வியாபாரக் கம்பெனிகள் துக்கக் குறியாகக் கப்பல்களில் கொடிகளைப் பாய்மரத்தின் பாதிவரையில் இறக்கியிருந்தன. அலங்கரிக்கப்பட்ட எட்டுக் குதிரைகள் பூட்டிய சிங்காரப் பல்லக்கில் சந்தனப் பேழையில் வைக்கப்பட்டது அவரது சடலம். பின் எடுத்துச்செல்லப்பட்டு ரங்கூன் தாம்வே இடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது.

வாழ்க்கை நூல்கள்

மதுரைப் பிள்ளை பற்றி 24 சிறு நூல்கள், தனிப்பாடல்கள் பல பாடப்பட்டுள்ளன. சுமார் 150 புலவர்களால் பாடப்பட்ட பாடல்களின் தொகுதி 1060 பக்கங்களில் 'மதுரை பிரபந்தம்’ என்ற பெருநூலாக 1896-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இந்நூலில் சென்னை, புதுவை, நாகை, சிதம்பரம், தஞ்சை, இளையாங்குடி, முதுகுளத்தூர், மதுரை, ஈரோடு, திருநெல்வேலி, கோயம்புத்தூர் போன்ற ஊர்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல் ரங்கூன், யாழ்ப்பாணம், மைசூர், பெங்களூர் போன்ற ஊர்களிலிருந்தும் புலவர்கள் பாடியிருந்தனர்.

இப்பெரு நூலிலிருந்து சில நூறு பாடல்கள் தொகுக்கப்பட்டு முந்நூறு பக்கங்களில் ரங்கூன் பிரவேசத்திரட்டு என்ற பெயரில் அதே ஆண்டில் தனி நூலாக வெளியானதுது.

குறிப்பு

(ஸ்டாலின் ராஜாங்கம் எழுதிய கட்டுரையை ஒட்டி எழுதப்பட்டது) அன்பு பொன்னோவியம் எழுதிய 'கப்பலோட்டிய ஆதி தமிழன் ஆதிதிராவிட வள்ளல் பெ.மா.மதுரைப் பிள்ளை (1858-1913)

உசாத்துணை


✅Finalised Page