பிலிப் மெனின்ஸ்கி

From Tamil Wiki
Revision as of 00:14, 22 June 2022 by Jeyamohan (talk | contribs)
மெனின்ஸ்கி

பிலிப் மெனின்ஸ்கி (Philip Meninsky ) (born 1919 - 2007) ஆங்கிலேய ஓவியர். சயாம் மரண ரயில்பாதை பற்றிய ஓவியங்களை வரைந்தவர் பார்க்க சயாம் மரண ரயில்பாதை

பிறப்பு, கல்வி

பிலிப் மெனின்ஸ்கி ஒவியரான பெர்னாட் மெனின்ஸ்கிக்கு னவம்பர் 1919 ல் பிரிட்டனில் புல்ஹாம் (Fulham) என்னும் ஊரில் பிறந்தார். பெர்னாட் மெனின்ஸ்கி புகழ்பெற்ற ஓவியர். 1891ல் கைக்குழந்தையாக உக்ரேனில் இருந்து பிரிட்டனுக்கு குடிபெயர்ந்தவர், யூத இனத்தைச் சேர்ந்தவர்.

இளமைக்கல்விக்குப் பின் கணக்கெழுத்துப் பயிற்சியில் இருக்கையில் ராணுவசேவைக்கு அழைக்கப்பட்டார். ஸ்காட்லாந்தில் சிலகாலம் பணிபுரிந்தார். சிங்கப்பூருக்கு 1942ல் அனுப்பப்பட்டு சிங்கப்பூரை ஜப்பானியர் கைப்பற்றியதும் கைதியாக பிடிக்கப்பட்டார்

தனிவாழ்க்கை

பிலிப் அலக்ஸாண்ட்ரா மக்டொனால்ட்(Alexanderina MacDonald) 1941ல் ஸ்காட்லாந்தில் மணந்தார். 1947ல் பிலிப் விடுதலையாகி வந்த பின் அலக்ஸாண்ட்ரா இரண்டு மகன்களைப் பெற்றார். பிலிப் வாழ்க்கைக்காக ஆயுள் காப்பீட்டு முகவராக வேலைபார்த்தார். 1969ல் அலக்ஸாண்ட்ரா மணமுறிவு பெற்றார். பிலிப் எலைன் வெல்ஸ் (Elaine Wells) ஐ மணந்தார்.1970ல் காப்பீட்டுப் பணியில் இருந்து ஓய்வுபெற்று முழுநேர ஓவியராக ஆனார்.

சயாம் மரண ரயில்பாதை

மெனின்ஸ்கி 1943 முதல் 1945 வரை மூன்றாண்டுக்காலம் சயாம் மரணரயில்பாதை பணியில் இருந்தார். அப்போது அவர் வரைந்த ஓவியங்கள் அங்கே நடந்த கடுமையான அடக்குமுறை மற்றும் சித்திரவதைகளுக்கான ஆவணங்களாக அமைந்தன. பின்னர் சிங்கப்பூரில் நடந்த போர்க்குற்ற விசாரணை மன்றத்தில் அவை சாட்சியங்களாக ஏற்கப்பட்டன

மிக எடையிழப்புக்கு ஆளான மெனின்ஸ்கி எலும்புகள் தரையில் உரசுவதனால் வரும் ஆழமான புண்களுக்கு ஆளானார். பிரிட்டிஷ் மருத்துவர்கள் எட்வர்ட் டன்லப் மற்றும் ஆர்தர் மூன் இருவரும் அவருடைய கால்களை வெட்டி நீக்கி உயிரை காப்பாற்றினர்.

மெனின்ஸ்கியின் பெரும்பாலான ஓவியங்கள் லண்டன் இம்பீரியல் போர் அருங்காட்சியகத்திலும் ஆஸ்திரேலியாவில் ஸ்டேட் லைப்ரரி விக்டோரியாவிலும் வைக்கப்பட்டுள்ளன. ஜாக் சாக்கர், ஆஷ்லி ஜார்ஜ் ஓல்ட், ரொனால் சியர்ல் ஆகியோருடன் அவருடைய ஓவியங்களும் ஜப்பானிய போர்க்குற்ற ஆவணங்களாக கருதப்படுகின்றன

பிற்கால வாழ்க்கை

மெனின்ஸ்கி தன் மற்ற போர்க்கைதிகளுடன் 1995 இல் இம்பீரியல் போர் அருங்காட்சியகத்தில் நடைபெற்ற சந்திப்பில் கலந்துகொண்டார். மெனின்ஸ்கி ஓவியராக வாழ்ந்தார். அவர் பாலே நடனக்கலைஞர்களைப் பற்றி வரைந்த ஓவியங்கள் புகழ்பெற்றவை. 1950 க்குப்பின் அவர் ஓவியராகப் புகழ்பெறலானார். மெனின்ஸ்கி கிங்க்ஸ்டனில் இருந்த தேம்ஸ் வேலி ஆர்ட்ஸ் கிளப் தலைவராகவும் கிங்ஸ்டன் அருங்காட்சியகத்தின் பொறுப்பாளராகவும் இருந்தார்.

உசாத்துணை