பாணாற்றுப்படை

From Tamil Wiki
Revision as of 19:11, 17 February 2022 by Subhasrees (talk | contribs) (பாணாற்றுப்படை - முதல் வரைவு)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

பாணனை(யாழிசைக் கலைஞன்) வள்ளலிடம் வழி சொல்லி ஆற்றுப்படுத்துவது பாணாற்றுப்படை[1]. தலைவனெருவனிடம் பரிசு பெற்றுவரும் பாணனொருவன் வறுமையில் வாடும் மற்றொரு பாணனை அத்தலைவனிடம் பரிசுபெறுதற்கு வழிச்செலுத்துவதைக் கூறும் புறத்துறை[2].

இவை ஆற்றுப்படை என்னும் சிற்றிலக்கிய வகையை சேர்ந்தவை.

பாடல்கள்

பாண் ஆற்றுப்படை என்னும் துறையில் புறநானூற்றுத் தொகுப்பில் ஏழு  பாடல்கள்[3] இருக்கின்றன.

  1. கோவூர் கிழார் சோழன் நலங்கிள்ளியிடமும்[4],  
  2. ஆலத்தூர் கிழார் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனிடமும்[5],  
  3. சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனிடமும்[6],  
  4. கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார் ஈர்ந்தூர் கிழான் தோயன் மாறனிடமும்[7],  
  5. பரணர் பேகனிடமும்[8],  
  6. மருதன் இளநாகனார் நாஞ்சில் வள்ளுவன் ஆய் அண்டிரனிடமும்[9],  
  7. மோசிகீரனார் கொண்கானங் கிழானிடமும்[10]  

பாணனை ஆற்றுப்படுத்துகின்றன.

மேலும் சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுபடை என்னும் பத்துப்பாட்டுத் தொகுப்பிலுள்ள நூல்களும் இத்துறை சார்ந்தவை.

எடுத்துக்காட்டு

வணர்கோட்டுச் சீறியாழ் வாடுபுடைத் தழீஇ உணர்வோர் யாரென் னிடும்பை தீர்க்கெனக் கிளக்கும் பாண கேளினி நயத்திற் பாழூர் நெருஞ்சிப் பசலை வான்பூ ஏர்தரு சுடரி னெதிர்கொண் டாஅங் கிலம்படு புலவர் மண்டை விளங்குபுகழ்க் கொண்பெருங் கானத்துக் கிழவன் தண்டா ரகல நோக்கின மலர்ந்தே பொருள்: வளைந்த தண்டையுடைய சிறிய யாழைத் உனது வாடிய உடலின் ஒரு பக்கத்தில் தழுவிக்கொண்டு, உன்னுடைய துன்பத்தை உணர்ந்து அதைத் தீர்ப்பவர் யார் என்று கூறும் பாணனே! நான் சொல்வதை நீ நன்றாகக் கேட்பாயாக. பாழூரில் நெருஞ்சிச் செடியின் பொன்னிறமான அழகிய பூ எழுகின்ற கதிரவனை எதிர் நோக்கியிருப்பது போல், வறுமையுற்ற புலவர்களின் கலங்கள் (பாத்திரங்கள்) புகழ் விளங்கும் பெரும் கொண்கானம் கிழானது மார்பை நோக்கித் திறந்திருக்கும்.

பாடியவர்: மோசி கீரனார்.

பாடப்பட்டோன்: கொண்கானங் கிழான்.

பாடலின் பின்னணி: கொண்கானம் கிழானிடம் பரிசில் பெற்று மகிழ்ச்சியுற்ற மோசி கீரனார் ஒரு பாணனை கொண்கானம் கிழானிடம் ஆற்றுப்படுத்துவதாக இப்பாடல் அமைந்துள்ளது.

திணை: பாடாண் திணை - ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.

துறை: பாணாற்றுப்படை

உசாத்துணை

https://www.tamilvu.org/ta/library-l1280-html-l1280542-127079

http://puram400.blogspot.com/2010/03/155.html

புறப்பொருள் வெண்பாமாலை மூலமும் உரையும்

அடிக்குறிப்புகள்

  1. இன்றொடை நல்லிசை யாழ்ப்பாண வெம்மைப்போற் கன்றுடை வேழத்த கான்கடந்து - சென்றடையிற் காமரு சாயலாள் கேள்வன் கய மலராத் தாமரை சென்னி தரும் - புறப்பொருள் வெண்பாமாலை - 31,216
  2. சேண் ஓங்கிய வரை அதரில், பாணனை ஆற்றுப் படுத்தன்று - புறப்பொருள் வெண்பாமாலை - 9,28
  3. புறநானூறு 68, 69, 70, 138, 141, 155, 180
  4. புறநானூறு 68
  5. புறநானூறு 69
  6. புறநானூறு 70
  7. புறநானூறு 180
  8. புறநானூறு 141
  9. புறநானூறு 138
  10. புறநானூறு 155