second review completed

பரிதிமாற்கலைஞர்: Difference between revisions

From Tamil Wiki
(Second Review)
No edit summary
Line 105: Line 105:
== இணைப்புகள் ==
== இணைப்புகள் ==


{{first review completed}} [[Category:Tamil Content]]
{{second review completed}} [[Category:Tamil Content]]

Revision as of 23:00, 19 February 2022

பரிதிமாற்கலைஞர்

பரிதிமாற்கலைஞர் (பரிதிமால்கலைஞர்) (வி.கோ. சூரியநாராயண சாஸ்திரி) (ஜூலை 6, 1870 - நவம்பர் 2, 1903) தமிழறிஞர், ஆய்வாளர், தனித்தமிழியக்கத்தின் முன்னணி கோட்பாட்டாளர். சென்னை கிறிஸ்தவக் கல்லூரிப் பேராசிரியராக இருந்தவர்.

பிறப்பு, கல்வி

மதுரை மாவட்டத்தில் விளாச்சேரியில் ஜூலை 6, 1870 அன்று கோவிந்த சிவன் சாஸ்திரிக்கும் இலட்சுமி அம்மாளுக்கும் பிறந்தார். தந்தையிடமிருந்து வேதக்கல்வி பெற்றார். மதுரையை அடுத்த பசுமலையில் தொடக்கப் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் போது பாலகிருஷ்ண நாயுடு என்பவரிடம் சிலம்பம், மற்போர் கற்றார். மதுரையில் 1885-ஆம் ஆண்டு உயர்நிலை பள்ளியில் சேர்ந்து மகாவித்துவான் க. சபாபதி முதலியாரிடம் தமிழ்ப் பாடம் பயின்றார். சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் பி.ஏ. தமிழ், பி.ஏ. லாஜிக் இரண்டிலும் முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றார். அங்கேயே ஆசிரியராக பணியாற்றினார்.

தனிவாழ்க்கை

பரிதிமாற்கலைஞர் சிலை

சூரியநாராயண சாஸ்திரி தனது பத்தொன்பதாவது வயதில் 1889-ல் முத்துலட்சுமியை மணந்தார். ஒரு பெண் குழந்தையும், இரு ஆண் குழந்தைகளும் பிறந்தனர்.

இலக்கியவாழ்க்கை

சூரியநாராயண சாஸ்திரி சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் பி.ஏ. படித்தார். அங்கே முதல்வராக இருந்த வில்லியம் மில்லர் சூரியநாராயண சாஸ்திரியில் மிகுந்த செல்வாக்கைச் செலுத்தினார். ஒருமுறை முனைவர் வில்லியம் மில்லர் டென்னிசன் எழுதிய ‘ஆர்தரின் இறுதி நாள்’ என்ற கவிதையிலுள்ள துடுப்புகள் இருபுறமும் நீரைப் பின்னோக்கித் தள்ள நீரில் மிதந்து போகும் படகு பறவை தன் சிறகுகளை விரித்துச் செல்வது போல் உள்ளது என்ற உவமையைக் கூறி இதைப்போல் உவகை எங்குமில்லை என்றபோது சூரியநாராயண சாஸ்திரி கம்பராமாயணத்தில் அயோத்திக் காண்டத்தில் குகப் படலத்தில் வரும்

“விடுநனி கடிது”என்றான் மெய்உயிர் அனையானும்

முடுகினன் நெடுநாவாய்; முரிதிரை நெடுநீர்வாய்;

கடிதினின், மடஅன்னக் கதியது செலநின்றார்

இடருற மறையோரும் எரியுறு மெழுகானார்”

என்ற பாடலை ஆங்கிலத்தில் சொன்னார். அதன் வழியாக மில்லரின் அன்புக்குரியவரானார்.

ஆசிரியப் பணிக்கு வருவதற்கு முன் கலாவதி (1898), ரூபாவதி (1899) என்னும் நாடக நூல்களை எழுதி நடித்தார். முதன்மையாக நாடகவியல் ஆர்வம் கொண்டிருந்தமையால் நாடக இலக்கண நூலான நாடகவியலை எழுதினார்.

பரிதிமாற்கலைஞர் நூல்
தனித்தமிழியக்கம்

தமிழிலுள்ள வடமொழிச் செல்வாக்கை அகற்றும் நோக்குடன் உருவான தனித்தமிழியக்கத்தில் தீவிரமான ஈடுபாடுகொண்டவர் சூரியநாராயண சாஸ்திரி. மே 24, 1901-ல் மதுரையில் பாஸ்கர சேதுபதி தலைமையில் பாண்டித்துரைத் தேவர் மேற்பார்வையில் நான்காம் தமிழ்ச் சங்கம் நிறுவப்பட்டது. இச்சங்கம் ‘செந்தமிழ்’ எனும் மாத இதழை வெளியிட்டது. அதன் முதல் இதழில் பரிதிமாற்கலைஞர் “உயர்தனிச் செம்மொழி தமிழே!” என்று தலைப்பிட்டு கட்டுரை வெளியிட்டார். அதில் தனித்தமிழ் பற்றிய தன் கொள்கைகளை முன்வைத்தார். தமிழ் திராவிடமொழிகளில் முதன்மையானது என்றும், மற்ற மொழிகள் தமிழிலிருந்து தோன்றியவை என்றும், சமஸ்கிருதம் தமிழில் ஊடுருவியது என்றும் அதில் சொன்னார்.

தனித்தமிழ் பெயர்
பரிதிமாற்கலைஞர் நூல் முகப்பு

சூரியநாராயண சாஸ்திரி தனித்தமிழ் பற்றினால் தன் பெயரை தனித்தமிழுக்கு நேரடி மொழிபெயர்த்தார் என்று பொதுவாக கருதப்படுகிறது. பிற்கால தமிழியக்க அறிஞர்கள் அவ்வாறு எழுதி நிறுவினர். ஆனால் அவர் பரிதிமாற்கலைஞர் என்ற பெயரை தன்னுடைய ஒரே ஒரு நூலில் புனைபெயராக மட்டுமே பயன்படுத்தினார். மற்ற அனைத்து நூல்களிலும் சூரியநாராயண சாஸ்திரி என்றே தன் பெயரை எழுதினார். இதைப்பற்றி சாஸ்திரியாரின் மொழிக்கொள்கை என்னும் கட்டுரையில் ஆய்வாளர் ஜே. சுடர்விழி இவ்வாறு கூறுகிறார்:

ஆங்கிலத்தில் ஒரே பொருளைப் பற்றி பதினான்கு அடிகளில் எழுதக்கூடிய ‘சானட்’ என்ற இலக்கிய வகையின் மீது ஈர்ப்பு கொண்ட சாஸ்திரியார், அவ்வப்போது தமக்குத் தோன்றும் கருத்துகளை பதினான்கு அடி கொண்ட நேரிசை ஆசிரியப்பாக்களாக எழுதிவந்தார். கருத்திலும் வடிவத்திலும் புதிய முயற்சியான இந்தத் தனிப்பாசுரங்களை மு.சி. பூர்ணலிங்கம் பிள்ளை ஆசிரியராக இருந்து நடத்திவந்த ‘ஞானபோதினி’ மாத இதழில் 1897 முதல் தொடர்ந்து வெளியிட்டுவந்தார். புதிய முயற்சி என்பதால் மக்கள் மத்தியில் இதற்கு எத்தகைய வரவேற்பு இருக்கும் என்பதை உண்மையாக அறிய விரும்பிய சாஸ்திரியார் தன் உண்மைப் பெயரை மறைத்துக்கொண்டு பரிதிமாற்கலைஞர் என்கிற புனைபெயரால் வெளியிட்டுவந்தார்.

‘இப்பாசுரங்களில் சில புது கருத்துகள் காட்டியிருக்கின்றமை பற்றி அஞ்சுவேம் எமது மெய்ப்பெயரின் வெளியிடாது பரிதிமாற்கலைஞன் என்னும் புனைவு பெயரின் வெளியிடுவேமாயினேம். அன்றியும் நன்னூலொன்று செய்தானது புகழின்மையான் இகழப்பட்டொழிதலும் புன்னூலொன்று செய்தானது உயர்ச்சியால் சாலவும் புகழப்பட்டிலங்கவும் நாடொறுங் காண்டலின் இந்நூலைப் பற்றிய தமிழ் மக்களின் உண்மை மதிப்பு இனைத்து என்றுணர வேண்டியும் அவ்வாறு செய்ய விரும்பினேம்’ என்று தன் பெயர் மாற்றத்துக்கான காரணத்தைத் தெளிவுபடுத்தியிருக்கிறார். அதாவது, சாஸ்திரியார் தன் பெயரைப் பரிதிமாற்கலைஞர் என்று தனித்தமிழ்ப்படுத்திக்கொண்டிருப்பினும் இப்பெயரை ஒரு குறிப்பிட்ட நூலுக்கான புனைபெயராக, இன்னும் சொல்லப்போனால் அந்நூலைத் தான் எழுதியது என்பதைப் பிறர் அறியக் கூடாது என்பதற்கான மறைபெயராகத்தான் பயன்படுத்திக்கொண்டார்.

1897 இதழில் புனைபெயரில் வெளியிட்ட இந்தப் பாசுரங்கள் தொகுக்கப்பட்டு, ‘தனிப்பாசுரத் தொகை’ என்னும் நூலாக 1901-ல் வெளிவந்தது. அப்போது இந்நூலைப் புனைபெயரில் அல்லாமல் சூரியநாராயண சாஸ்திரியார் என்கிற பெயரிலேயே வெளியிட்டுள்ளார். மேலும், இந்த ஒரு நூலைத் தவிர, வேறு எங்கும் இப்பெயரை அவர் பயன்படுத்தியதாக அறிய முடியவில்லை. இன்னும் சொல்லப்போனால் ‘ஞானபோதினி’ இதழில் பரிதிமாற்கலைஞர் என்கிற பெயரில் பாசுரங்கள் வந்துகொண்டிருந்த அதே காலகட்டத்து இதழ்களில் ‘மதிவாணன்’ என்கிற புதினமும் தொடர்ந்து தொடராக வந்துகொண்டிருந்தது. ஒரே இதழில் ‘தனிப்பாசுரத் தொகை’ பரிதிமாற்கலைஞர் பெயரிலும், ‘மதிவாணன்’ சூரியநாராயண சாஸ்திரியார் பெயரிலும் வந்துகொண்டிருந்தன.

தனித்தமிழ் காரணமாகத் தன் பெயரை மாற்றிக்கொண்டவராக இருந்திருப்பின், ஒரே நேரத்தில் இரு பெயரில் இயங்கியிருக்க மாட்டார். கல்லூரி இதழ்களில் எழுதிய கட்டுரைகளிலும் கவிதைகளிலும் சரி, உ.வே.சா.வுக்கு எழுதியதாகக் கிடைக்கும் கடிதங்களிலும் சரி, அவர் மறைவு வரை அனைத்து இடங்களிலும் சூரியநாராயண சாஸ்திரியார் என்கிற பெயரையே பயன்படுத்திவந்திருக்கிறார்.

சூரியநாராயண சாஸ்திரியார் தனித்தமிழ்ப் பற்றின் காரணமாகத் தன் பெயரை மாற்றிக்கொள்ளவில்லை என்பதுடன், தனித்தமிழில் பேச வேண்டும், எழுத வேண்டும் என்கிற நிலைப்பாட்டையும் அவர் எழுத்துகளில் காண முடிவதில்லை. 1903-ல் இறப்பதற்கு முன் வெளிவந்த தமிழ் மொழி வரலாறு நூல் முழுவதிலும் வடமொழிச் சொற்கள் விரவியிருப்பதுடன் ‘பாஷையின் சீர்திருத்தம்’ தலைப்பிலமைந்த கட்டுரையில் “தமிழ்ச் சொற்கள் ஆங்கில பாஷையிற் புகுதலும் ஆங்கிலச் சொற்கள் தமிழ் பாஷையிற் புகுதலும் இயற்கையே. இதைத் தடுக்க முடியாது. தடுக்கப் புகுதலும் தக்கதன்றாம்… ஆங்கிலச் சொற்களைத் திசைச் சொற்களென மேற்கொள்வதில் யாது தடையோ? இவ்வாறு செய்தலே அறிவுடையோர் செயலாம்” என்று தன் மொழிக் கொள்கையைப் பதிவுசெய்துள்ளார். (பரிதிமாற்கலைஞரின் மொழிக் கொள்கை, ஜே. சுடர்விழி).[1]

இக்கருத்துக்களை மறுக்கும் பேரா. கல்யாணராமன் பரிதிமாற்கலைஞர் என்ற பெயரில் சூரியநாராயண சாஸ்திரி தன்னை முன்வைக்க விரும்பினார் என்றும் இரு பெயர்களையும் அவர் மாறிமாறி பயன்படுத்தினார் என்றும் ஆயினும் அவருடைய தனித்தமிழ் ஈடுபாட்டால் பரிதிமாற்கலைஞர் என்ற பெயரே அவருக்கு உகந்தது என கருதவேண்டும் என்றும் சொல்கிறார்.[2]

மறைவு

நவம்பர் 2, 1903-ல் காசநோயால் பரிதிமாற்கலைஞர் மறைந்தார்.

நினைவகங்கள், வரலாற்றுநூல்கள்

பரிதிமாற்கலைஞர்- தபால்தலை
  • மதுரை மாவட்டம் விளாச்சேரியில், பரிதிமாற்கலைஞர் பிறந்து வாழ்ந்த இல்லத்தை தமிழ்நாடு அரசு அக்டோபர் 31, 2007 அன்று அவருடைய நினைவில்லமாக திறந்து வைத்தது.
  • ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசின் சார்பில் ஜூலை 6-ஆம் நாள் பரிதிமாற்கலைஞரின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
  • மத்திய அரசு பரிதிமாற் கலைஞருக்கு தபால்தலை வெளியிட்டது.
  • இந்திய இலக்கியச் சிற்பிகள்: பரிதிமாற்கலைஞர் (வி.கோ. சூரியநாராயண சாஸ்திரியார்) - பரிதிமாற்கலைஞர் வாழ்க்கை வரலாறு, வி.சு.கோவிந்தன்

நூல்கள்

நாடகங்கள்
  • ரூபாவதி
  • கலாவதி
  • மான விஜயம்
  • சூர்ப்பநகை – புராண நாடகம்
கவிதைகள்
  • தனிப்பாசுரத் தொகை
  • பாவலர் விருந்து
நாவல்
  • மதிவாணன்
ஆய்வுகள்
  • நாடகவியல்,
  • தமிழ் வியாசங்கள்
  • சித்திரக் கவி விளக்கம்
  • தமிழ்மொழியின் வரலாறு
  • மணிய சிவனார் சரித்திரம்
  • தமிழ்ப் புலவர் சரித்திரம்
பதிப்பித்த நூல்கள்

பரிதிமாற்கலைஞர் 67 நூல்களை பதிப்பித்தார் எனப்படுகிறது. அவற்றில் சில:

  • சயங்கொண்டாரின் கலிங்கத்துப் பரணி
  • மழவை மகாலிங்க ஐயர் எழுதிய இலக்கணச் சுருக்கம்
  • புகழேந்திப் புலவரின் நளவெண்பா
  • உத்தரகோச மங்கை மங்களேசுவரி பிள்ளைத் தமிழ்
  • சபாபதி முதலியார் இயற்றிய `திருக்குளந்தை வடிவேலன் பிள்ளைத் தமிழ்’
  • சபாபதி முதலியார் இயற்றிய`மதுரைமாலை’
  • தாண்டவராய முதலியாரின் `பஞ்ச தந்திரம்’
மாணவர்களுடன் இணைந்து எழுதியவை
  • நாமகள் சிலம்பு
  • தமிழ் மகள் மேகலை
  • இன்பவல்லி
  • ஞான தரங்கிணி
  • கலாநிதி

உசாத்துணை

இணைப்புகள்


✔ Second review completed


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.