under review

பரத நாட்டிய நிகழ்ச்சி நிரல்

From Tamil Wiki
Revision as of 10:55, 17 January 2024 by Logamadevi (talk | contribs)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
ஸ்ம்ரிதி விஸ்வநாத் நடனம் (நன்றி: தென்றல் இதழ், வட அமெரிக்கா)

பரத நாட்டியம், அதற்கென்று காலாதீதமாகப் பின்பற்றப்பட்டுவரும் நிகழ்ச்சி நிரலின் படி அரங்கில் நிகழ்த்தப்படுகிறது. பரத நிகழ்ச்சிகளுக்கென்று தனியான நாட்டிய நிரல் உண்டு. அவை நாட்டிய உருப்படிகளை முதன்மையானதாகக் கொண்டு அமைந்துள்ளன.

பரத நிகழ்ச்சி நிரல் - இறைவணக்கம்

பரத நாட்டியம் நிகழ்த்தப்படுவதற்கு முன், முதலில் இறைவணக்கம் பாடப்படும். அதற்கென்று அமைந்துள்ள இசைக் கலைஞர் அதனைப் பாடுவார். தொடர்ந்து தனிப்பட்ட நாட்டிய உருப்படிகளுடன் நிகழ்ச்சி தொடங்கும். ஒவ்வொரு உருப்படிக்கும் பெயர் உண்டு. தனித்தன்மை உண்டு. அனைத்து உருப்படிகளும் ஓர் ஒழுங்கு நிரலில் அமைந்திருக்கும்.

பரத நிகழ்ச்சி - உருப்படிகள்

பரத நாட்டியம், முதலில் நிருத்த வகை உருப்படிகளும், தொடர்ந்து நிருத்திய மற்றும் நாட்டிய வகை உருப்படிகளும் கொண்டதாக அமைந்திருக்கும். உருப்படிகள் மொத்தம் எட்டு வகைப்படும். அவை,

  • அலாரிப்பு
  • ஜதிஸ்வரம்
  • சப்தம்
  • வர்ணம்
  • பதம்
  • தில்லானா
  • விருத்தம்
  • மங்களம்
அலாரிப்பு

பரத நாட்டியத்தின் முதல் நிகழ்வு, அலாரிப்பு. கடவுள், குரு சபையோர் முதலானோரை, ஆடுபவர் மதித்து வணங்கும் நிகழ்ச்சியே அலாரிப்பு. இது, நிருத்த வகை ஆடலைச் சேர்ந்தது.

அடவுகள் இந்த ஆடலில் முதன்மை பெறும். அடவுகளுக்கான சொற்கட்டுகள், "தத்தை தையும் தத்தாம் கிடதக" என்றவாறு அமையும். திச்ரம் (மூன்று) கண்டம் (ஐந்து), மிச்ரம் (ஏழு) ஆகிய தாள வகைகள் அலாரிப்பில் இடம் பெறும்.

அடவுச் சொற்கட்டுகளை நட்டுவனார் தத்தகாரத்தில் சொல்வார். இசையமைப்பாளர் கம்பீர நாட்டை இராகத்தில் கோவையாக இசைப்பார். அடவுக் கோவைகள் முதற் காலம், இரண்டாம் காலம் என ஆடப்பட்டு நிறைவுறும்.

ஜதிஸ்வரம்

ஜதிஸ்வரம் என்பது, அபிநயம் இல்லாத நிருத்த வகை ஆடல் உருப்படி. இதில் சொற்கட்டுகள் இடம் பெறாது. ஆனால் ஸ்வரக் கோர்வைகளும் ஜதிக் கோர்வைகளும் இருக்கும். (ஜதி + ஸ்வரம் = ஜதிஸ்வரம்)

ஜதிஸ்வரத்தில், பல்லவியை அடுத்து மூன்று சரணங்கள் இருக்கும். ‘சா நி தா மா கா’ என்றவாறு முழுவதும் ஸ்வரக் கோர்வைகளைக் கொண்டிருக்கும். பல்லவிக்குப் பின் ஜதிகள் இருக்கும். ஒவ்வொரு சரணமும் முடிந்து பல்லவி பாடிய பின்னும் ஜதிகள் இருக்கும்.

ஜதிஸ்வரங்கள் பொதுவாக ரூபகம், ஆதி, திச்ர, திருபுடை, மிச்ரசாபு ஆகிய தாளங்களில் இருக்கும். குரலிசையோடு நட்டுவனார் தாளமும் மிருதங்க வாசிப்பும் இந்நிகழ்ச்சியில் சிறப்பிடம் பெறும்.

சப்தம்

நாட்டிய நிரலில் பாட்டும் பாவமும் தோன்றும் முதல் உருப்படி சப்தம். இது பாட்டு, சொற்கட்டு, ஜதிக்கோவை ஆகியவை கொண்டது. சப்தங்கள் தெலுங்கு மொழியில் இருக்கும். தமிழிலும் சப்தங்கள் உண்டு. பெரும்பாலான சப்தங்கள் காம்போதி இராகத்திலும் மிச்ர சாபு தாளத்திலும் இருக்கும்.

வர்ணம்

வர்ணம் என்னும் உருப்படியில் இரண்டு வகை உண்டு. ஒன்று தாள வர்ணம், மற்றையது பத வர்ணம், பரத நாட்டிய நிகழ்ச்சியில் பத வர்ணம் இடம்பெறும்.

பத வர்ணம் பல்லவி, அனுபல்லவி, முக்தாயி ஸ்வரம், எத்துக்கடை பல்லவி, சரணம் என்ற பகுதிகளைக் கொண்டது, இவ்வனைத்துப் பகுதிகளிலும் பாடல் தொடர்ந்து வரும். இப்பாடல் அபிநயிக்கத்தக்க பொருளைக் கருவாகக் கொண்டிருக்கும். பத வர்ணத்தின் ஸ்வரங்களுக்கு நிருத்தமும், பாடலுக்கு அபிநயமும் செய்யப்படும். இதனால் இசை, தாளம், பாவகம் ஆகிய மூன்றும் சிறந்திருக்கும் உருப்படியாகப் பத வர்ணம் இருக்கும்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் பத வர்ணங்கள் இயற்றப்பட்டுள்ளன. பல்வேறு ராகங்களில் இவை அமையும். ஆதி, ரூபக தாளங்களில் இருக்கும். பத வர்ணத்தின் ஒவ்வொரு பகுதியும் வெவ்வேறு ராகத்தில் அமையும் ராகமாலிகைப் பத வர்ணங்களும் உண்டு.

பதம்

முழுவதும் அபிநயமாக அமையும் உருப்படி பதம். இது பல்லவி, அநுபல்லவி, சரணம் என்ற பகுதிகளைக் கொண்டது. இது காதல் சுவையை உணர்த்தும் உருப்படி. ஆதலால், தலைவன்-தலைவி உறவு முறையில், இறைவன் தலைவன். நாட்டியமாடுபவள் தலைவி. இது பரமாத்மா ஆகிய இறைவனை அடைய விரும்பும் ஜீவாத்மாவின் உறவை உணர்த்தும். இந்த உயர்ந்த உறவு, உலகியல் நிலையில் ‘பதத்தில்’ சித்திரிக்கப்படுகிறது.

தலைவி அனுபவிக்கும் பல்வேறு அந்தரங்க உணர்வுகள், இந்த உருப்படியில் அபிநயிக்கப்படும் ஆதலால் உசேனி, கமாஸ், ஆகிரி, கானடா போன்ற மென்மையான ராகங்களில் பதங்கள் அமைந்திருக்கும். தாள வேறுபாடுகள் பதத்தில் முக்கியத்துவம் பெறுவதில்லை.

வெவ்வேறு வகையினரான தலைவியரின் தன்மைக்கு ஏற்ப அபிநய பாவகம் அமைந்திருக்கும்.

முருகன், சிவன், கிருஷ்ணன் ஆகிய தெய்வங்கள் இந்த உருப்படியில் தலைவனாகக் கொள்ளப்படுவர். மன்னர், வள்ளல் ஆகியோரைத் தலைவனாகக் கொண்ட பதங்களும் உள்ளன. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், வடமொழி ஆகிய மொழிகளில் பதங்கள் உள்ளன.

தில்லானா

மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் தரும் நாட்டிய உருப்படி தில்லானா. இது, பல்லவி, அநுபல்லவி, சரணம் என்ற பகுதிகளைக் கொண்டது. தில்லானா, திர்தில்லானா, தீம் திம் திரி திரி தில்லானா - போன்ற சொற்கட்டுகள் இந்த உருப்படி முழுவதும் இருக்கும். சரணப் பகுதியில் மட்டும் பாடல் இருக்கும். மத்திம காலத்தில் மிக விறுவிறுப்பாக ஆடப்படும். கண்ணையும் கருத்தையும் கவரும் கரண நிலைகள் (dance postures) தில்லானாவிற்கு அழகு சேர்க்கும்.

பல ராகங்களிலான ராகமாலிகைத் தில்லானாக்கள் உள்ளன. பல்வேறு தாளங்களிலான தாளமாலிகைத் தில்லானாக்களும் உள்ளன.

விருத்தம்

தாளக் கட்டுப்பாடு இல்லாத ஓர் உருப்படி ‘விருத்தம்’. பாடகர் பாடலை ராக பாவம் ததும்ப நிதானமாகப் பாடுவார். ஆடுபவர் பாடலை அனுபவித்து நிதானமாக அபிநயம் செய்வார். சம்ஸ்கிருதத்தில் இந்த உருப்படி ‘ஸ்லோகம்’ எனப்படும். தெலுங்கில், ‘பத்யம்’ என்று வழங்கப்படும். இது பக்திச் சுவைக்கு முதன்மை கொடுக்கும் நிகழ்ச்சி.

மங்களம்

பரத நாட்டிய நிகழ்ச்சியில் இறுதியாக ‘மங்களம்’ இடம்பெறும். இதற்கெனத் தனி ஆடல்முறை எதுவுமில்லை. வாழ்த்துச் சொற்களைக் கொண்டது மங்களப் பாடல். இது மத்தியமாவதி, சுருட்டி அல்லது சௌராஷ்டிர ராகத்தில் இருக்கும். பாடகரும் இசையமைப்பாளரும் மங்களப் பாடலை விறுவிறுப்பாக இசைப்பர். அப்பொழுது நாட்டியக் கலைஞர், ஆடல் தெய்வமான நடேசனை வணங்குவார். நாட்டிய ஆசான், மற்றும் பக்க வாத்தியம் வாசிப்பவர்கள் அனைவரையும் வணங்குவார். தொடர்ந்து சபையோர் அனைவரையும் வணங்குவார். பொது வணக்கத்துடன் நிகழ்ச்சி மங்களமாக நிறைவுறும்.

உசாத்துணை


✅Finalised Page