பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்

From Tamil Wiki
Revision as of 15:21, 25 June 2022 by ASN (talk | contribs) (para created)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

சங்க காலத்தில் தோன்றிய இலக்கியங்களான பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் பதினெண் மேற்கணக்கு நூல்கள் என்று அழைக்கப்படுவது போல் சங்கம் மருவிய காலத்தில் தோன்றிய நூல்கள் பதினெண் கீழ்கணக்கு நூல்கள் என அழைக்கப்படுகின்றன.

கீழ்கணக்கு நூல்களின் இலக்கணம்

அடிநிமிர்வு இல்லாத வெண்பாக்களினால் அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நால்வகைப் பயன்களைப் பற்றிப் பாடுவதே கீழ்க்கணக்கு நூல்கள் என ‘பன்னிரு பாட்டியல்’ தெரிவிக்கிறது.

“அகவலும் கலிப்பாவும் பரிபாடலும்

பதிற்றைந் தாதி பதிற்றைம்பது ஈறாக

மிகுத்துடன் தொகுப்பன மேற்கணக்கு எனவும்

வெள்ளைத் தொகையும் அவ்வகை எண்பெறின்

எள்ளறு கீழ்க்கணக்கு எனவும் கொளலே”

என்கிறது பன்னிரு பாட்டியல்.

கீழ்கணக்கு நூல்கள் பட்டியல்

“நாலடி நான்மணி நானாற்ப(து) ஐந்திணைமுப்

பால் கடுகம் கோவை பழமொழி மாமூலம்

இன்னிலை காஞ்சியுட னேலாதி யென்பதூஉம்

கைந்நிலையு மாங்கீழ்க் கணக்கு”

- என்ற தனிப்பாடல் கீழ்க்கணக்கு நூல்களைத் தொகுத்துக் கூறுகின்றது.

  1. நாலடியார்
  2. நான்மணிக்கடிகை
  3. இனியவை நாற்பது
  4. இன்னா நாற்பது
  5. களவழி நாற்பது
  6. கார் நாற்பது
  7. ஐந்திணை ஐம்பது
  8. ஐந்திணை எழுபது
  9. திணைமொழி ஐம்பது
  10. திணைமாலை நூற்றைம்பது
  11. திருக்குறள்
  12. திரிகடுகம்
  13. ஆசாரகோவை
  14. பழமொழி
  15. சிறுபஞ்சமூலம்
  16. இன்னிலை (அ) கைந்நிலை
  17. முதுமொழிக் காஞ்சி
  18. ஏலாதி

என மேற்கண்ட பதினெட்டு நூல்களும் கீழ்கணக்கு நூல்களாகக் கருதப்படுகின்றன.

இன்னிலையும் கைந்நிலையும்

கீழ்கணக்கைப் பற்றிய மேற்கண்ட தனிப்பாடல்

“இன்னிலை காஞ்சியுட னேலாதி யென்பதூஉம்

கைந்நிலையு மாங்கீழ்க் கணக்கு”

என்று குறிப்பிடுகின்றது. அதானது இன்னிலை மற்றும் கைந்நிலை இரண்டையுமே கீழ்கண்க்கு நூல்களில் இப்பாடல் வரிசைப்படுத்துகிறது. அதே சமயம் வேறு சில நூல்களில்

“இன்னிலை காஞ்சியுட நேலாதி யென்பவே

கைநிலைய வாங்கீழ்க் கணக்கு”

என்ற குறிப்பு காணப்படுகிறது.

இன்னிலையை நூலாகக் கொண்டால் கைந்நிலை மறைந்து ‘ஒழுக்க நிலையனவாம் கீழ்க்கணக்கு’ என்று அடைமொழியாகின்றது. கைந்நிலையை நூலாகக் கொண்டால் இன்னிலை மறைந்து ‘இனிய நிலைமையாகிய காஞ்சி’ என்று அடைமொழியாகின்றது. இதனால் பதினெட்டாவது நூல் இன்னிலையா அல்லது கைந்நிலையா என்ற சந்தேகம் பலருக்கும் தோன்றியது. கீழ்கணக்கு நூல் இன்னிலைதான் என்றும், கைந்நிலைதான் என்றும் அறிஞர்களிடையே விவாதமும் எழுந்தது

இன்னிலை - கைந்நிலை விவாதம்

கீழ்கணக்கு நூல்களின் பா வகை

கீழ்க்கணக்கு நூல்களில் பஃறொடை, நேரிசை, இன்னிசை, சிந்தியல், குறள் வெண்பாக்கள் பயின்று வருகின்றன. பஃறொடை வெண்பா வருதலினால் சில பாடல்கள் நான்கடிக்கு அதிகமாக ஐந்து, ஆறு அடிகளிலும் பயின்று வருகிறது. பொதுவாக நான்கும், நான்கிற்குக் கீழ்ப்பட்ட அடிகளுமே பதினெண் கீழ்க்கணக்கில் பெரும்பாலும் அமைந்துள்ளன. இரண்டாம் அடியில் நான்கு சீராய் வராது ஈற்றடி போல் முச்சீராய் வரும் சவலை வெண்பாவும் கீழ்கணக்கு நூல்களில் இடம் பெற்றுள்ளது.