பக்குடுக்கை நன்கணியார்

From Tamil Wiki

பக்குடுக்கை நன்கணியார் சங்ககாலத் தமிழ்ப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய பாடல் ஒன்று சங்கத்தொகை நூலான புறநானூற்றில் உள்ளது.

வாழ்க்கைக் குறிப்பு

உ.வே.சா. ”நன்கணியார்” என்பது இயற்பெயர் என்று கருதினார். கணி என்பதற்கு ஜோதிடம் என்பது பொருள். இவர் ஜோதிடராக இருக்கலாம் என அறிஞர்கள் கருதினர். பக்கத்தில் நிகழ்வனவற்றை உடுத்திக்கொண்டு அவற்றை நல்ல கண் கொண்டு பார்க்கும் கவிஞர். (பக்கு+உடுக்கை+நல்+க(ண்)ணியார்) என்ற பொருளில் வருவதால் ”பக்குடுக்கை நன்கணியார்” என்று அழைக்கப்பட்டார்.

இலக்கிய வாழ்க்கை

பக்குடுக்கை நன்கணியார் புறநானூற்றில் 194-வது பாடலைப் பாடினார். உலகியலைக் கூறும் பெருங்காஞ்சித் துறைப் பாடலாக உள்ளது. நிலையாமை பற்றிய பாடலாக ஆரம்பித்து இயல்புணர்ந்தவர் இனியவற்றைக் காண்பர் என்று கூறும் நேர்மறைத்தன்மையுடைய பாடலாக அமைந்துள்ளது.

பாடல் வழி அறியவரும் செய்திகள்

  • இறந்தவர் இல்லத்தில் நெய்தல் பறை ஒலிக்கும். புணர்ந்தோர் பூமாலை அணிவர்.
  • இனிய காண்க!

பாடல் நடை

  • புறநானூறு 194 (துறை: பெருங்காஞ்சி)

ஓர் இல் நெய்தல் கறங்க, ஓர் இல்
ஈர்ந் தண் முழவின் பாணி ததும்ப,
புணர்ந்தோர் பூ அணி அணிய, பிரிந்தோர்
பைதல் உண்கண் பனி வார்பு உறைப்ப,
படைத்தோன் மன்ற, அப் பண்பிலாளன்!
இன்னாது அம்ம, இவ் உலகம்;
இனிய காண்க, இதன் இயல்பு உணர்ந்தோரே.

உசாத்துணை