பகல் வேடம் (நிகழ்த்துக்கலை)

From Tamil Wiki
Revision as of 21:54, 17 February 2022 by Navingssv (talk | contribs) (Created page with "பகல் வேளையில் நிகழ்த்தப்படும் கலையாதலால் இதனை பகல் வேடம் அல்லது பல வேடம் என்றழைக்கின்றனர். பல வேடங்களைப் புனைந்து ஆடுவதால் இதனை பொது மக்கள் பல வேடம் என்கின்றனர். இது ஒரு நடமாட...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

பகல் வேளையில் நிகழ்த்தப்படும் கலையாதலால் இதனை பகல் வேடம் அல்லது பல வேடம் என்றழைக்கின்றனர். பல வேடங்களைப் புனைந்து ஆடுவதால் இதனை பொது மக்கள் பல வேடம் என்கின்றனர். இது ஒரு நடமாடும் அரங்குக் கலை. மதுரை நாயக்கர்கள் தமிழகம் வந்த போது பகல் வேடக் கலைஞர்கள் அவர்களுடன் வந்தனர் என்ற கருத்து உள்ளது.

நடைபெறும் முறை

இக்கலை கோவில் அல்லது சடங்குகளுடன் தொடர்பில்லாதது. எனவே இது சமூக சார்புக்கலை. ஊரின் தன்மையைப் பொறுத்து இக்கலை நிகழ்த்தப்படும் நாட்கள் தீர்மானிக்கப்படுகிறது. சிறிய ஊராக இருந்தால் ஐந்து முதல் பத்து நாட்கள் வரையிலும், பெரிய ஊராக இருந்தால் இருபது முதல் முப்பது நாட்கள் வரையிலும் இக்கலை நிகழ்த்தப்படுகிறது. பொதுவாக இது ஞாயிறுக்கிழமை நிகழ்த்தப்படுவதில்லை. ஊரின் தன்மை, ஊர் மக்களின் ஆர்வம் பொறுத்து கதை நிகழ்த்தப்படும் நேரம் அமையும். காலை பத்து மணி முதல் மாலை ஐந்து மணி வரை இக்கலை நிகழும். இடையில் நண்பகல் வேளையில் கலைஞர்கள் ஓய்வெடுத்துக் கொள்வர்.

இக்கலையை ஆண்கள் மட்டும் நிகழ்த்துக்கின்றனர். பெண் வேடங்களையும் ஆண்களே புனைகின்றனர். இந்நிகழ்த்துக் கலையில் பங்கு பெறும் கலைஞர்களின் எண்ணிக்கைக் குறிப்பிட்டுக் கூற முடியாது.

புராண இதிகாசக் கதைகளும், இனச் சார்புக் கதைகளும் பகல் வேடக் கலையின் பாடுபொருள். மக்கள் பெரும்பாலும் அறிந்த புராணக் கதைகளையே கலைஞர்கள் நிகழ்த்துக்கின்றனர். மேலும் சிதம்பரம் தீட்சதர் பட்டாச்சாரி கதை, மடாதிபதிச் சாமியார், ராஜா மந்திரி கதை ஆகியனவும் நடிக்கப்படுகின்றன. இந்தக் கதைகளில் எதாவது ஒரு நீதியை முக்கியத்துவப்படுத்திப் பேசுகின்றனர். வாழ்க்கை நெறியை எடுத்துரைக்கும் கதை மடாதிபதிச் சாமியார் கதை, ராஜாவின் மடமைச் செயலைச் சொல்லும் கதை ராஜா மந்திரி கதை. இனச் சார்புக் கதைகளாக ராவுத்தர் கதை, வெட்டியான் கதை ஆகியவற்றைக் கூறலாம். இசுலாமியர்கள் அதிகம் உள்ள பகுதியில் ராவுத்தர் கதையும், ஒடுக்கப்பட்ட மக்கள் நிறைந்த பகுதியில் வெட்டியான் கதையும் நிகழ்த்துகின்றனர். இந்த கதைகளில் சில அறக் கருத்துகள் கூறப்படுகின்றன. தமிழ் இலக்கிய தொடர்புடைய அப்பர், சம்பந்தர், சுந்தரர், ஞானசம்பந்தர் ஆகியவர்களின் வரலாறுகளும் இக்கலையில் நிகழ்த்தப்படுகின்றன. குறவன், குறத்தி கதையும் அன்மைக் காலமாக நிகழ்த்தப்படுகின்றன.

இக்கலை உரையாடலும், பாடலும் கலந்து நிகழ்த்தப்படும் கலை. பாடல்கள் இசையுடன் பாடப்படும். பாடல்கள் பல்லவி, அனுபல்லவி, சரணம் போன்ற அமைப்புடையவை.