under review

பகடையாட்டம்

From Tamil Wiki
Revision as of 22:28, 30 April 2022 by Madhusaml (talk | contribs)
பகடையாட்டம்

பகடையாட்டம் ( 2003) யுவன் சந்திரசேகர் எழுதிய நாவல். திபெத் சாயலில் உள்ள சொமிட்ஸியா என்னும் மலைநாட்டில் இருந்து லாமா போன்ற ஒருவர் தப்பியோடி இந்தியா வருவதையும், அவர் சரணடைகையில் ஏற்றுக்கொண்ட மேஜர் கிருஷ்ணன் என்பவரின் உளப்பதிவுகளையும், சொமிட்ஸுவின் ரகசிய மதநூலின் முன்மொழிவுகளையும் வெவ்வேறு துணைக்கதைகளையும் கலந்து எழுதப்பட்ட மீன்புனைவு வகை நாவல்

எழுத்து வெளியீடு

பகடையாட்டம் யுவன் சந்திரசேகர் எழுதிய இரண்டாவது நாவல். 2004ல் இதை எழுதினார். தமிழினி பதிப்பகம் இதை வெளியிட்டது

கதைச்சுருக்கம்

இந்தியாவின் வட எல்லையில் இமையமலை அடுக்குகளுக்குள் கதை நிகழ்கிறது. திபெத்தை நினைவுறுத்தும் சோமிட்ஸியா என்ற சிறிய நாடு. அதன் மதத் தலைவரும் அரசியல் அதிபருமான சோமிட்ஸு புதிதாகத் தெரிவுசெய்யப்பட்ட சிறுவர். அவரது அமைச்சரும் காவலருமான ஈனோங் தன் மீது ஆதிக்கம் செலுத்தும் அமைச்சரிடமிருந்து தப்பி இந்தியாவரும் சொமிட்ஸு இமையமலைச்சாரலில் இந்திய ராணுவ முகாமில் இருக்கும் மேஜர் கிருஷ் முன் சரணடைகிறார் .அன்றிரவு மர்மமான முறையில் அவர் காணாமலாகிறார். மேஜர் கிருஷ் அதன் விளைவுகளால் பதவி இழந்து மனம் உடைந்து ஊர்திரும்புகிறார்.

இந்தக் கதைக்கட்டமைப்புக்குள் பல்வேறு கதைக்கோடுகள் இதில் உள்ளன. மேஜர்கிருஷின் கதை ஒருகோடு. அதை மீட்டுச்சொல்லும் சந்திரசேகரின் நோக்கு ஒரு கோடு. ஜூலியஸ் லுமும்பா, வேய்ஸ் முல்லர் போன்ற பயணிகளின் கதைகள் தனிக்கோடுகள். நேரடியாகச் சொல்லப்படும் சோமிட்ஸியாவின் நிகழ்வுகள் ஒரு கோடு. இவற்றைத் தன் குறுக்காக ஊடுருவும் சொமிட்சிய மத- சோதிட மூலநூலின் தத்துவமும் தொன்மமும் கலந்தச் சொற்களினாலான ஒரு கோடு. இக்கோடுகளின் பின்னலை நிகழ்த்த வேண்டிய பொறுப்பு வாசகனின் கற்பனைக்கு விடப்பட்டிருப்பதே இந்நாவலின் கலையனுபவமாகும். மேலோட்டமாக தொடர்பற்றவையாகத் தோன்றும் நிகழ்வுகள் விளக்கமுடியாத மாற்றுமெய்மை ஒன்றால் இணைக்கப்பட்டிருப்பதை இந்நாவல் சித்தரிக்கிறது

பின்னணி

திபெத்தின் பதினொன்றாவது பஞ்சன்லாமா ( Gedhun Choekyi Nyima ) சிறுவனாக திபெத்தில் இருந்து காணாமலான உண்மைச்சம்பவத்தையும் தலாய்லாமா இந்தியா வந்த நிகழ்வையும் ஒட்டி உருவாக்கப்பட்டது இந்தக்கதை. லாப்ஸிங் ராம்பா போன்று திபெத்தை பற்றிய மாயக்கதைகளை எழுதும் எழுத்தாளர்களிடமிருந்து எடுத்துக்கொண்ட செய்திகளை மீளுருவாக்கம் செய்து சொமிட்ஸியா உருவாக்கப்பட்டுள்ளது

இலக்கிய இடம்

தமிழில் மீன்புனைவு (Metafiction) வகைமைக்குள் எழுதப்பட்ட முக்கியமான படைப்புகளில் ஒன்று பகடையாட்டம். தொன்மங்கள், வரலாற்று நிகழ்வுகள், அரசியல், சாமானியர்களின் வாழ்க்கை ஆகியவை பின்னிப்பிணைந்து ஒன்றையொன்று தீர்மானிப்பதன் சித்திரத்தை அளிக்கிறது.

உசாத்துணை



✅Finalised Page