under review

நோயல் நடேசன்

From Tamil Wiki
Revision as of 16:43, 2 September 2022 by Madhusaml (talk | contribs) (moved to review)
நோயல் நடேசன்
நோயல் நடேசன்

நோயல் நடேசன் (23 டிசம்பர் 1954)  ஈழத்தமிழ் எழுத்தாளர். மிருக வைத்தியர். புலம்பெயர்ந்து தற்போது ஆஸ்திரேலியாவில் வசிக்கிறார்.

பிறப்பு, கல்வி

இலங்கையின் வட மாகாணத்தின் எழுவைதீவு என்ற பிரதேசத்தில் அம்பலவாணர் சின்னத்தம்பி - ஆனந்தராணி நமச்சிவாயம் இணையருக்கு 1954 ஆம் டிசெம்பர் 23 ஆம் திகதி நோயல் நடேசன் பிறந்தார். இயற்பெயர் நோயல் சின்னத்தம்பி நடேசன். ஆரம்பக் கல்வியை எழுவைதீவு முருகவேள் பாடசாலையிலும் நயினாதீவு மகாவித்தியாலத்திலும் உயர்கல்வியை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியிலும் பயின்றார். பேராதனை பல்கலைக்கழத்தில் தனது பட்டப்படிப்பை நிறைவு செய்தார். ஆஸ்திரேலியாவில் சிட்னி நியு சவுத்வேல்ஸ் பலகலைக்கழகத்தில் முதுமாணி பட்டம் பெற்றார்.  

தனி வாழ்க்கை

நோயல் நடேசன், 1984 - 1987 காலப்பகுதியில் தமிழகத்தில் தங்கியிருந்தபோது, தமிழர் மருத்துவ சேவை என்ற நிறுவனத்தை உருவாக்கினார். அந்த நிறுவனத்தில் நோயல் நடேசனுடன் மருத்துவரான அவரது மனைவியும் பணியாற்றினார். 1987 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்குப் புலம்பெயர்ந்தார். இலங்கை, இந்தியா, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் 40 வருடங்கள் மிருக வைத்தியராக பணிபுரிந்து, ஓய்வு பெற்று, தற்போது மெல்பேர்னில் தனது மனைவியுடன் வசித்துவருகிறார். மனைவி பெயர் சியாமளா. மகன் பெயர் நவீன். மகள் பெயர் கிசானி.

பங்களிப்பு

இதழியல்

நோயல் நடேசன் 1987 ல் ஏப்ரலில், “உதயம்” மாத இதழை மெல்பேர்னில் ஆரம்பித்தார். 13 வருடங்களாக நிர்வாக ஆசிரியராகப் பணியாற்றினார். 2009 ஆம் ஆண்டு வரை “உதயம்” பத்திரிகை ஆஸ்திரேலியாவில் தொடர்ச்சியாக வெளியானது. “உதயம்” பத்திரிகையில் பல பத்திகள், சிறுகதைகள், தொடர்கள், தான் பணிபுரிந்த மிருக வைத்தியத்துறைசார் அனுபவங்கள் என்பவற்றை நோயல் நடேசன் எழுதினார்.

இலக்கியம்

“உதயம்” பத்திரிகையில் நோயல் நடேசன் அவர்கள் எழுதிய அபுனைவுகள் வழியாக அவருக்கு நவீன இலக்கியம் பற்றிய பரிச்சயம் கிட்டியது. உண்மைச்சம்பவங்களையும் கதை மாந்தர்களையும் புனைவுக்குள் பத்திரப்படுத்தும் நுட்பம் கைகூடியது.

1997 மே மாதம் “உதயம்” பத்திரிகையில் எழுதிய “நடுக்காட்டில் பிரேத பரிசோதனை” என்ற மிருக வைத்திய அனுபவக் கட்டுரையைத் தொடர்ந்து நோயல் நடேசனின் எழுத்துக்கள் அதிகம் வெளிவரத்தொடங்கின.

1980-1983 ஜூலை வரையான காலத்தில், இலங்கையின் - மதவாச்சி பகுதியில் மிருக வைத்தியராக பணிபுரிந்த காலப் பின்னணியில் எழுதப்பட்ட நடேசனின் “வண்ணாத்திக்குளம்” என்ற முதலாவது நாவல் “மித்ர” பதிப்பகத்தினால் வெளியானது.

“உதயம்” பத்திரிகையில் வெளிவந்த மிருகவைத்தியஅனுபவக் கட்டுரைகள் 2003 “வாழும் சுவடுகள்” என்ற பெயரில் புத்தகமாகியது

அமைப்பு - பணிகள்

ஆஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம்

இலக்கிய இடம்

தான் பணி செய்த மிருக வைத்தியத்துறை சார்ந்த அனுபவங்களை அபுனைவுகளாகவும் புனைவுகளாகவும் எழுதியதன் ஊடாக நோயல் நடேசன் தமிழ் இலக்கியப் பரப்பில் பரவலாக அறிமுகமானார். அதேவேளை, தனது அரசியல் நிலைப்பாடுகள் சார்ந்த எழுத்துக்களை புனைவுகளுக்கு உட்படுத்துவதற்கு அவர் மேற்கொண்ட துணிச்சலான முயற்சிகளும் தமிழ் வாசகர் பரப்பில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. நடேசனின் பெரும்பாலான நாவல்களும் சிறுகதைகளும் நேரடியானவை. புறவயத்தன்மை கொண்டவை.

நோயல் நடேசனின் “அசோகனின் வைத்தியசாலை" நாவல் குறித்து எழுத்தாளர் ஜெயமோகன் - “என்னுடைய வாசிப்பில் தமிழில் எழுதப்பட்ட ஒரு நாவலில் ஓர் அன்னியநாட்டின் சமூகவியலும் பண்பாடும் இத்தனை நுட்பமாக விவரிக்கப்படுவது இதுவே முதல்முறை" - என்கிறார்.

“வாழும்சுவடுகள்" நூல் பற்றி கோவை ஞானி குறிப்பிடும்போது - “இந்தத் தொகுப்பு எஸ்பொ முதலியவர்கள் சுட்டிக்காட்டியபடி தமிழுக்கு ஒரு புதுவரவு என்பதில் ஐயமில்லை" - என்று தெரிவித்துள்ளார்.

விருதுகள்

  • வண்ணாத்திக்குளம் - சின்னப்பா பாரதி விருது - 2012
  • மலேசியன் ஏயர்லைன்370 - திருப்பூர் இலக்கிய விருது - 2015
  • அந்தரங்கம் - திருப்பூர் இலக்கிய விருது - 2022

படைப்புகள்

சிறுகதை தொகுப்புகள்
  • மலேசியன் ஏயர்லைன்370 (2015 - சென்னை  மலைகள் பதிப்பகம்)
  • அந்தரங்கம் (2021 - புலம் வெளியீடு)
  • பிள்ளைத்தீட்டு (2022 - அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம்)
நாவல்கள்
  • வண்ணாத்திக்குளம் (2003 - மித்ர)
  • உனையே மயல் கொண்டு (2007 - மித்ர)
  • அசோகனின் வைத்தியசாலை (2016 - கருப்பு பிரதிகள்)
  • கானல் தேசம் (2018 - காலச்சுவடு)
  • பண்ணையில் ஒரு மிருகம் (2022 - காலச்சுவடு)
பயண இலக்கியம்
  • நைல் நதிக்கரையோரம்- (2018 - எதிர் பதிப்பகம்)
கட்டுரைத் தொகுப்புகள்
  • வாழும் சுவடுகள் ( 2003 - மித்ர பதிப்பகம்)
  • வாழும் சுவடுகள் 2 (மித்ரா - பதிப்பகம்)
  • வாழும் சுவடுகள் (2017 - காலச்சுவடு பதிப்பகம்)
  • எக்ஸைல் (2018 - மகிழ் பதிப்பகம், கிளிநொச்சி)

மொழிபெயர்க்கப்பட்ட படைப்புகள்

நடேசனின் மூன்று நாவல்கள் ஆங்கிலத்திலும் ஒரு நாவல் சிங்களத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

  • வண்ணாத்திக்குளம் - Butterfly lake (மொழிபெயர்த்தவர் - நல்லைக்குமரன்)
  • வண்ணாத்திக்குளம் - சிங்களத்தில் “சமணல வெவ” என்ற பெயரிலும் மடுல் கிரிய விஜயரட்ணவினால் மொழிபெயர்க்கப்பட்டது)
  • உனையே மயல் கொண்டு - Lost in you (மொழிபெயர்த்தவர் - பேராசிரியர் திருமதி பார்வதி வாசுதேவா)
  • அசோகனின் வைத்தியசாலை - King Asoka's Veterinary Hospital (மொழிபெயர்த்தவர் திரு. கிருஷ்ண பிரசாத்)

வெளி இணைப்புக்கள்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.