நோன்பு

From Tamil Wiki
Revision as of 11:26, 2 July 2022 by Jeyamohan (talk | contribs) (Created page with "நோன்பு : தன்னை தூய்மை செய்துகொள்ளவோ, வழிபாட்டின்பொருட்டோ செய்யப்படும் தற்கட்டுப்பாடுகள் நோன்பு எனப்படுகின்றன. ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக செய்யப்படும் தற்கட்டுப்பாடும...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

நோன்பு : தன்னை தூய்மை செய்துகொள்ளவோ, வழிபாட்டின்பொருட்டோ செய்யப்படும் தற்கட்டுப்பாடுகள் நோன்பு எனப்படுகின்றன. ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக செய்யப்படும் தற்கட்டுப்பாடும் நோன்பு எனப்படுகிறது. உண்ணாமை, பேசாமை உட்பட பலவகையான தற்கட்டுப்பாடுகள் நோன்புநெறிகளாக உள்ளன.

வேர்ச்சொல்

நோன்பு என்னும் சொல்லின் வேர் நோய். நோய் என்னும் வேர்ச்சொல்லுக்கு எஸ். வையாபுரிப்பிள்ளை பேரகராதி அளிக்கும் பொருள்களாவன. வியாதி,துன்பம், அச்சம், வலி. சங்ககாலத்தில் நோய் என்ற சொல் வருந்துதல், மெலிதல் என்னும் பொருளில் அகத்துறை பாடல்களில் பயன்படுத்தப்படுகிறது. (...நாடன் நோய் தந்தனனே தோழி.பசலை ஆர்த்தன குவளை அம் கண்ணே”. கபிலர். குறுந்தொகை 13) நோதல் என்னும் சொல் வருந்துதல் என்று பொருளில் பயன்படுகிறது. (நோதலும் தணிதலும் அவற்றோரன்ன. கணியன் பூங்குன்றன், புறநாநூறு 192) . வையாபுரிப்பிள்ளை பேரகராதி நோய்த்தல் என்னும் சொல்லுக்கு மெலிதல், வாடுதல் என்னும் பொருள்களை அளிக்கிறது. கருவுற்ற பெண் அடையும் மெலிவும் தளர்வும் நோய்த்தல் எனப்படுகிறது.

நோற்றல் என்பது காத்திருத்தல் என்னும் பொருளில், குறிப்பாக பசித்துக் காத்திருத்தல் என்னும் பொருளில் மலையாளத்தில் புழக்கத்தில் உள்ளது.(ஈற்றப்புலி நோற்றுகிடக்கும் ஈரன் கண்ணு துறந்நும். கடம்மனிட்ட ராமகிருஷ்ணன். காட்டாளன் கவிதை) நோற்றல் என்பது தவத்தை குறிக்கிறது (இவன் தந்தை என் நோற்றான் கொல் எனும் சொல்- திருக்குறள் 70 ) நோற்பு என்னும் சொல்லுக்கு பேரகராதி பொறுத்துக்கொள்ளுதல்,தவம் என்னும் பொருட்களை அளிக்கிறது. நோன்றல், நோன்றுதல் ஆகிய சொற்கள் சங்க காலம் முதல் பொறுத்துக்கொள்ளுதலை குறிக்க பயன்பட்டன. (பட்டென கண்டது நோனான் ஆகி. அகநாநூறு.44) திவாகர நிகண்டு நோன்றல் என்பதற்கு தள்ளுதல், துறத்தல் என்று பொருள் அளிக்கிறது.பிங்கல நிகண்டு நோன்றல் என்ற சொல்லுக்கு நிலைநிறுத்துதல், உறுதிகொள்ளுதல் என பொருள் விளக்கம் அளிக்கிறது.

இச்சொற்களில் இருந்து நோன்பு என்னும் சொல் உருவானது.