நைலான் கயிறு

From Tamil Wiki
Revision as of 16:59, 22 March 2022 by Jeyamohan (talk | contribs) (Created page with "நைலான் கயிறு ( 1968) சுஜாதா எழுதிய முதல் மர்மநாவல். இந்நாவல் தமிழில் பொதுவாசிப்புத் தளத்தில் ஒரு புதிய திருப்பமாக அமைந்தது. சுஜாதா புகழ்பெற்ற எழுத்தாளராக உருவானார் எழுத்து வெளிய...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

நைலான் கயிறு ( 1968) சுஜாதா எழுதிய முதல் மர்மநாவல். இந்நாவல் தமிழில் பொதுவாசிப்புத் தளத்தில் ஒரு புதிய திருப்பமாக அமைந்தது. சுஜாதா புகழ்பெற்ற எழுத்தாளராக உருவானார்

எழுத்து வெளியீடு

இந்நாவலின் கரு சுஜாதாவால் நகுலன் தொகுத்த குருக்ஷேத்திரம் என்னும் தொகுப்புநூலில் தனிமைகொண்டு என்னும் பெயரில் எழுதப்பட்டது. அதை குற்றம், புலனாய்வு என மாற்றி இந்நாவலாக ஆக்கினார். சுஜாதா ஆகஸ்ட் 1968 முதல் நைலான் கயிறு நாவலை குமுதம் இதழில் தொடர்கதையாக எழுதினார். முதலில் இந்நாவலுக்கு சீட்டுமாளிகை என பெயரிடப்பட்டது. பின்னர் நைலான் கயிறு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இக்கதைக்காக ரங்கராஜன் என்னும் தன் பெயரை சுஜாதா என மாற்றிக்கொண்டார். இக்கதை 14 வாரங்கள் வெளிவந்தது.மீண்டும் இந்தத் தொடர் குமுதம் 5-11-2014 இதழில் ஜெயராஜ் படங்களுடன் ஆரம்பம் ஆகி வெளியானது.

கதைச்சுருக்கம்

பம்பாயின் பெட்டர் ரோடில் (Pedder Road) ஓர் அடுக்குமாடி குயிருப்பில் கிருஷ்ணன் என்பவன் நைலான் கயிற்றால் கழுத்து இறுக்கிக் கொல்லப்படுகிறான். அவனுடன் தொடர்புடைய ஹரிணி எனும் பெண்ணின் டைரி கிடைக்கிறது. ஹரிணியின் அண்ணன் தேவ் என்பவனை போலீஸ் கைதுசெய்கிறது. மும்பை வழக்கறிஞர் கணேஷ் அவனை வாதாடி விடுதலை செய்கிறார். முதிய போலீஸ் உயர் அதிகாரி ராமநாதன் கிருஷ்ணனின் தொலைபேசி புத்தகத்தில்ல் இருக்கும் ஒர் எண்ணைக்கொண்டு மேலும் துப்பறிந்து கொலையை கண்டுபிடிக்கிறார். பின்னாளில் சுஜாதாவின் முதன்மை துப்பறியும் கதாபாத்திரமாக ஆன கணேஷ் இந்நாவலில் ஒரு வழக்கறிஞராக அறிமுகமாகிறார்.

இலக்கிய இடம்

நைலான் கயிறு தமிழ் பொதுவாசிப்புத் தளத்தில் அன்றுவரை புதுமைப்பித்தன், ப.சிங்காரம், சுந்தர ராமசாமி போன்றவர்கள் உருவாக்கிய தாவிச்செல்லும் நடை, அசோகமித்திரன், ஜி.நாகராஜன் போன்றவர்களால் நவீன இலக்கியச் சூழலில் புழங்கிய குறைவாகச் சொல்லும் உத்தி ஆகியவற்றை அறிமுகம் செய்தது. சுஜாதா கர்ட் வான்காட், ஹெமிங்வே, ஜான் அப்டைக் ஆகியோர் பயன்படுத்திய மொழிவிளையாட்டுக்களை தன் நடையில் கையாண்டார். மிகச்சுருக்கமான வர்ணனைகள், தாவிச்செல்லும் உரையாடல்கள் ஆகியவற்றை பகடியும் விளையாட்டுமாக முன்வைத்த அந்த நடை பொதுவாசகர்களிடம் ஈர்ப்பை உருவாக்கி பொதுவாசிப்புக்கான புனைவெழுத்தில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.

உசாத்துணை