நெய்தற் கார்க்கியார்

From Tamil Wiki
Revision as of 16:31, 7 October 2022 by Siva Angammal (talk | contribs)

நெய்தற் கார்க்கியார்,  சங்ககாலப் பெண்பாற் புலவர்களில் ஒருவர். நெய்தல் திணைப் பாடல்கள் இரண்டு இவர் பாடியனவாகச் சங்கநூல் தொகுப்பில் உள்ளன.

ஆசிரியர் குறிப்பு

நெய்தற் கார்க்கியார் என்ற பெயரிலுள்ள கார் என்பது கருமைநிறம் கொண்ட மழைமேகத்தைக் குறிக்கும். காரி என்னும் பெயர் மழைமேகம் போன்று உதவுபவன் என்னும் பொருளைத் தரும். காரி என்னும் ஆண்பால் பெயருக்கு இணையான பெண்பால் பெயர் கார்க்கி எனக் கொள்ளலாம். நெய்தற் கார்க்கியார் இயற்றிய இரண்டு பாடல்களும் நெய்தல் திணையை சார்ந்ததாகையால் நெய்தல்  என்னும் அடைமொழி இவரது பெயருக்கு தரப்பட்டுள்ளது எனக் கருதலாம்.   ஆண்பாற் புலவர்கள் பட்டியலில் இவரது பெயர் இடம் பெற்றிருந்தாலும் இவர் பெண்பாற் புலவர் என்றே கருதப்படுகிறது.

பாடல்கள்

நெய்தற் கார்க்கியார் இயற்றிய இரு பாடல்கள் குறுந்தொகை நூலின் 55 மற்றும் 212- வது பாடல்களாக இடம் பெற்றுள்ளன.

குறுந்தொகை 55

மாக்கழி மணிப்பூக் கூம்பத் தூத்திரைப்

பொங்குபிதிர்த் துவலையொடு மங்குல் தைஇக்

கையற வந்த தைவரல் ஊதையொடு

இன்னா உறையுட் டாகும்

சின்னாட் டம்மவிச் சிறுநல் லூரே.

எளிய பொருள்;

இந்தச் சிறிய நல்ல ஊரானது கரிய கழியினிடத்திலேயுள்ள நீல மணி போன்ற பூக்கள் குவியும்படி தூய அலையிடத்துப் பொங்கிய பிசிராகிய துளியோடு மேகத்தைப் பொருந்தி பிரிந்தோர் செயலறும்படி வந்த தடவுதலையுடைய வாடைக் காற்றோடு துன்பத்தைத் தரும் தங்குமிடத்தை யுடையதாகின்ற சில நாட்களையுடையது.

(மணிப்பூ: மணிப்பூ நெய்தல் நிலத்து உப்பங்கழியில் பூக்கும். வாடைக்காற்றுப் பட்டால் இது கூம்பிவடும்.)

குறுந்தொகை 212

கொண்கன் ஊர்ந்த கொடுஞ்சி நெடுந்தேர்

தெண்கட லடைகரைத் தெளிமணி யொலிப்பக்

காண வந்து நாணப் பெயரும்

அளிதோ தானே காமம்

விளிவது மன்ற நோகோ யானே.

எளிய பொருள்;

தலைவன் ஏறிச் சென்ற கொடுஞ்சியை உடைய உயர்ந்த தேரானது தெள்ளிய நீரைஉடைய கடலை அடைந்த கரைக்கண் தெளிந்த ஓசையை உடைய மணிகள் ஒலிக்கும்படி நாம் காணும்படி வந்து பின்பு நாம் நாணும்படி மீண்டு செல்லா நிற்கும்; காமம்! இரங்கத் தக்கது; நிச்சயமாக அழியக்கடவதாகும்; இவை கருதி யான் வருந்துவேன்.

உசாத்துணை

மகடூ முன்னிலை, பெண்பாற் புலவர் களஞ்சியம், டாக்டர் தாயம்மாள் அறவாணன், பச்சை பசேல் பதிப்பகம்

எட்டுத்தொகை, தமிழ் இணையக் கல்விக்கழகம்