தேவி நாச்சியப்பன்

From Tamil Wiki
Revision as of 23:52, 28 November 2022 by ASN (talk | contribs) (Para Added, Images Added)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
தேவி நாச்சியப்பன்

தேவி நாச்சியப்பன் (தேவி; தெய்வானை; முனைவர் தேவி நாச்சியப்பன்; பிறப்பு: ஜீலை 8, 1961) எழுத்தாளர். ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியர். குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பாவின் மகள். சிறார் இலக்கியப் பங்களிப்புக்காக சாகித்ய அகாதமி வழங்கிய ‘பால சாகித்ய புரஸ்கார் விருது' பெற்றவர். தமிழில் இந்த விருதைப் பெற்ற முதல் பெண் எழுத்தாளர்.

பிறப்பு, கல்வி

தேவி நாச்சியப்பன், சென்னையில், ஜீலை 8, 1961-ல், அழ. வள்ளியப்பா-வள்ளியம்மை ஆச்சி இணையருக்குப் பிறந்தார். இயற்பெயர் தெய்வானை. சென்னை மயிலாப்பூரில் உள்ள 'சில்ரன் கார்டன்’ பள்ளியில் படித்தார். உயர்கல்வியை முடித்த தேவி நாச்சியப்பன், தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றார். தொடர்ந்து கல்வியியலில் முதுகலைப் பட்டம் பெற்றார். ‘குழந்தை இலக்கியப் பாடல்களில் உத்திகள்’  என்ற தலைப்பில் அழகப்பா பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார்.

தனி வாழ்க்கை

1984-ல் நாச்சியப்பனுடன் திருமணம் நிகழ்ந்தது. நாச்சியப்பன் கவிஞர். இலக்கிய ஆர்வலர். வங்கியில் அதிகாரியாகப் பணியாற்றினார். கீழச்சிவல்பட்டி ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் மேல்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணி புரிந்தார் தேவி நாச்சியப்பன். ஒரு மகன், ஒரு மகள்.

இலக்கிய வாழ்க்கை

சிறு வயதிலேயே கவிதைகள் இயற்றுவதில் தேவி நாச்சியப்பனுக்கு ஆர்வம் இருந்தது. கோகுலம் இதழில் பல கவிதைகள் வெளியாகின. கதைகளும் எழுதினார். இவருடைய முதல் கதை 1983-ம் ஆண்டு கோகுலம் மாத இதழில் வெளியானது. தந்தையின் ஆலோசனைப் படி பிற மொழிச் சிறார் கதைகளை மொழிபெயர்ப்பதில் ஈடுபட்டார். அவை தொகுக்கப்பட்டு, ’பல தேசத்துக் குட்டிக் கதைகள்’ என்ற தலைப்பில் இரண்டு பாகங்களாக தேவி நாச்சியப்பனின் திருமணத்தின்போது வெளியானது. இவரது சிறார் படைப்புகள் தினமணி சிறுவர்மணி, கோகுலம், அமுதசுரபி, இந்து தமிழ் திசை போன்ற இதழ்களில் வெளியாகியுள்ளன.

1997-ல், ‘பந்தும் பாப்பாவும்’ என்ற தலைப்பில் சிறார்களுக்கான சிறுகதைத் தொகுப்பு வெளியானது. 2002-ல் ‘பசுமைப்படை’ என்ற சிறார்களுக்கான சிறுகதைத் தொகுப்பு வெளியானது. தொடர்ந்து  சிறார்களுக்கான பல கதை, கட்டுரை, நாவல்களை எழுதினார். தேவி நாச்சியப்பன் எழுதிய ‘குழந்தைகள் சென்ற குஷியான பயணம்' என்ற நூல், சிறார்களுக்கான பயண நூலாக மட்டுமல்லாமல், கூட்டுக் குடும்பங்களின் மேன்மையை, உறவுகளின் பெருமையைக் கூறும் நூலாகவும் அமைந்துள்ளது.

அழ. வள்ளியப்பாவின் நூற்றாண்டான 2022-ல், ’நினைவில் வாழும் குழந்தைக் கவிஞர்’ என்ற நூலை தேவி நாச்சியப்பன் தொகுத்துள்ளார். இந்த நூலில் அழ. வள்ளியப்பாவுடன் பணிபுரிந்த, அவருடன் பழகிய பலர் தங்கள் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டுள்ளனர். ‘கல்கி’ ராஜேந்திரன், சீதா ரவி, எழுத்தாளர் பூவண்ணன், ரேவதி (ஈ.எஸ். ஹரிஹரன்), டாக்டர் கு. கணேசன், எழுத்தாளர் கமலவேலன், இயக்குநர் வசந்த் எஸ். சாய் உள்ளிட்ட பலர் கட்டுரைகளை எழுதியுள்ளனர்.