first review completed

தேசிகவினாயகம் பிள்ளை

From Tamil Wiki
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை

தேசிக விநாயகம் பிள்ளை (கவிமணி ) (ஜூலை 27, 1876 - செப்டம்பர் 26, 1954) தமிழறிஞர், எழுத்தாளர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர், கல்வெட்டாய்வாளர். தமிழ் நவீன இலக்கியம் தோன்றிய காலகட்டத்தில் தேசிய இயக்கப் பாடல்கள், பக்திப் பாடல்கள், குழந்தைப் பாடல்கள் என பலவகையான பாடல்களை பாடியவர். கவிமணி என்று அழைக்கப்படுகிறார். தமிழகக் கல்வெட்டு ஆய்வின் முன்னோடிகளில் ஒருவர்.

பிறப்பு, கல்வி

தேசிகவிநாயகம் பிள்ளை என்ற கவிமணி ஜூலை 27, 1876-ல் தென்திருவிதாங்கூரில் (இன்றைய கன்னியாகுமரி மாவட்டம்) தேரூர் என்ற ஊரில் சிவதாணுப்பிள்ளை, ஆதிலட்சுமி இணையருக்கு இரண்டு பெண் குழந்தைகளுக்குப் பிறகு மூன்றாவது மகனாக பிறந்தார். இளவயதில் மலையாளம் படித்தாலும் தமிழை கற்றுக் கொண்டார். தேரூர் திருவாவடுதுறை தம்புரானிடம் இலக்கிய இலக்கணங்களைக் கற்றார். தனது ஒன்பதாவது வயதில் தன் தந்தையை இழந்தார். எம்.ஏ. படித்த கவிமணி பின்னர் ஆசிரியர் பயிற்சி படித்தார்.

தனிவாழ்க்கை

தேசிக விநாயகம் பிள்ளை தான் படித்த கோட்டார் ஆரம்பப்பள்ளியிலேயே ஆசிரியர் ஆனார். 1901-02-ல் நாகர்கோவில் ஆசிரியர் பயிற்சிப்பள்ளியிலும், 1902-1931-ல் திருவனந்தபுரம் பெண்கள் கல்லூரியிலும் ஆசிரியப்பணி புரிந்தார். உமையம்மை எனும் பெண்ணை 1901-ல் மணம் முடித்தார். குழந்தைப்பேறு இல்லாத கவிமணி தனது அக்காள் மகன் சிவதாணுவை தனது மகன் போலவே வளர்த்தார்.

1931-1954-ஆம் ஆண்டுகளில் நாஞ்சில் நாட்டுப் புத்தேரியில் வாழ்ந்த காலக்கட்டத்தில் அழகிரிசாமி, டி.கேம் சாமிநாத சர்மா போன்ற அறிஞர்கள், இராஜாஜி, சிவாஜிகணேசன், கலைவாணர், எம்.கே.டி. பாகவதர் என அன்றைய பிரபலங்கள் எல்லோரும் அவரைச் சந்தித்துள்ளனர். அவரது சமகாலக் கவிஞர்களில் மிகவும் மதிக்கப்பட்டதற்கு அவர் சிறந்த உரையாடல்காரர் என்பதும் கூடக் காரணம் என்கிறார் சுந்தர ராமசாமி.

கவிமணிக்கு மத நம்பிக்கை உண்டு. முந்தைய மதத்திற்கும் சமகால மதத்திற்கும் உள்ள நீண்ட வேறுபாட்டை அனுசரித்து நடக்க வேண்டும் என்பது அவரது கொள்கை (தினமணி ஜூலை 5, 1954). கவிமணியிடம் சடங்குப் பற்று இருந்ததில்லை. மூடநம்பிக்கையை ஆதரிக்கும் பழைமை நம்பிக்கையும் கிடையாது. ’கோவில்களில் சாதித் திருத்தங்களைச் செய்ய இயலாவிடில் கோயில்களை ஈ.வே.ராவிடம் ஒப்படைத்துவிடலாம்’ என்று கூறியுள்ளார்.

இலக்கிய வாழ்க்கை

கவிமணி தன் இருபது வயதில் கவிதைகள் எழுத ஆரம்பித்துவிட்டார். ஆரம்ப காலத்தில் கவிமணி எழுதிய கவிதைகள் சிலவும் ஆங்கிலக் கட்டுரைகள் சிலவும் பாதுகாக்கப்படவில்லை. அவர் திருவனந்தபுரத்தில் இருந்தபோது குழந்தைகளுக்காகப் பாடல்களும் கட்டுரைகளும் எழுதினார். நாட்டாரிலக்கியங்களில் ஆர்வம் கொண்டவர். அவர் இயற்றிய பாடல்களில் சிந்து, கும்மி ஆகிய நாட்டார் பாடல் வடிவங்கள் பெருமளவில் பயின்றுவருகின்றன. நாட்டார் பாடல் வடிவங்களான தாலாட்டு, ஒப்பாரி ஆகியனவும் பழமொழிகள், நம்பிக்கைகள், வழக்காறுகள், வாய்மொழி ஆகியனவும் விரவி வருகின்றன. கவிமணி ஆரம்பக்காலத்தில் எழுதியவை பண்டித நடையிலான செய்யுட்களே. பிற்காலத்தில் இவரது நடை சாதாரண வாசகனுக்குப் புரியும்படி ஆகியது. இதற்கு இவரது நாட்டார் வழக்காற்றுச் செல்வாக்கும், கல்வெட்டுப் பயிற்சியும் காரணமாக இருக்கலாம் என்று அ.கா. பெருமாள் கூறுகிறார்.

குழந்தையிலக்கியம்

தமிழின் முதல்குழந்தைக் கவிஞர் என கவிமணி குறிப்பிடப்படுவதுண்டு. 'Baby' என்னும் ஆங்கிலப் பாடல் ஒன்றினைத் தமிழில் 'குழந்தை' என்னும் தலைப்பில் மொழிபெயர்த்துள்ளார். ’மலரும் மாலையும்’ தொகுதியில் உள்ள முத்தந்தா, காக்காய், கோழி என எட்டுக்கும் மேற்பட்ட தலைப்புகளில் உள்ள பாடல்கள் நாட்டார் பாடல் வடிவம்கொண்டவை

நூல்வெளியீடு

ஸ்ரீவைகுண்டம் சுப்பிரமணிய பிள்ளை என்பவர் கவிமணியின் சில பாடல்களை 1932-ல் வெளியிட்டார். 1938-ல் மு. அருணாசலம் வேறு பாடல்களையும் தொகுத்து மலரும் மாலையும் என்னும் தலைப்பில் ஒரு நூல் வெளியிட்டார். பின் ஆசியஜோதி (1941), மருமக்கள் வழி மகான்மியம் (1942), உமர் கய்யாம் பாடல்கள் (1945), கவிமணியின் உரைமணிகள் (1952), தேவியின் கீர்த்தனைகள் (1953) போன்ற நூல்கள் வந்தன. நாஞ்சில்நாட்டு மருமக்கள்வழி மான்மியம் தமிழின் முதல் எள்ளல் நூல். எட்வின் ஆர்னால்டின் “Light Of Asia” நூலைத் தழுவி தமிழில் 'ஆசிய ஜோதி' என்ற நூலை எழுதினார். பாரசீகக் கவிஞர் உமர் கய்யாம் பாடல்களைத் தழுவி “ரூபாயத்” எனும் தலைப்பில் தமிழில் எழுதினார்.

ஆய்வுகள்

கவிமணியின் ”காந்தளூர்சாலை” என்ற ஆங்கிலக் கட்டுரை சான்றாதாரம், பின்னிணைப்பு, வரைபடங்களுடன் வந்திருக்கிறது (1939). கவிமணி ’திவான் வெற்றி’ என்னும் கதைப் பாடல் குறித்து ஆங்கிலத்தில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். தமிழ்க் கதைப்பாடல் பற்றி வெளிவந்த முதல் ஆங்கிலக்கட்டுரை இது. கேரள சொசைட்டி பேப்பர்ஸ் ஆங்கில ஆய்விதழில் இவர் எழுதிய ’வள்ளியூர் மரபுச் செய்திகள்’ என்ற கட்டுரை ஐவர் ’ராசாக்கள் கதைப்பாடல்’ பற்றியது. 1910 அளவில் இதற்காகக் கள ஆய்வு செய்திருக்கிறார் இக்காலத்தில் ஓலையில் எழுதப்பட்ட கதைப்பாடல்களை இவர் சேகரித்திருக்கிறார்.

ஆராய்ச்சியாளர்

1922-ல் 'மனோன்மணியம் மறுபிறப்பு' என்ற திறனாய்வுக் கட்டுரையை எழுதினார். சென்னை பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேரகராதி உருவாக்கத்தில் மதிப்பியல் உதவியாளராக இருந்தார். கம்பராமாயணம் திவாகரம், நவநீதப் பாட்டியல் முதலிய பல நூல்களின் ஏட்டுப் பிரதிகளைத் தொகுத்திருக்கிறார். 'காந்தளூர்ச்சாலை' பற்றிய ஆய்வு நூலை எழுதினார்.

கல்வெட்டாய்வாளர்

கவிமணி வரலாற்றாய்வாளர், கல்வெட்டுகளை நுட்பமாக ஆராய்ந்தவர்; ஆங்கிலத்தில் பதினாறுக்கும் மேல் கட்டுரைகள் எழுதியவர். திருவனந்தபுரத்தில் இருந்தபோது (1901-31) கல்வெட்டாய்வாளராகவும் இருந்தார். இக்காலத்தில் இவர் எழுதிய 28 தமிழ்க் கட்டுரைகள் நூல் வடிவில் வந்துள்ளன. Malabar Quarterly Review, People's Weekly, People's Opinion, The Western Star, Kerala Society Papers இதழ்களில் எழுதிய 19 கட்டுரைகள் நூல் வடிவில் வரவில்லை. இவற்றிலும் 4 கட்டுரைகளை அடையாளங்காண முடியவில்லை.

20-ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் வெளிவந்த கல்வெட்டு மூலப்படிவங்களின் விளக்கங்களில் உள்ள தவறுகளைச் சுட்டிய இவரது கட்டுரைகள் முக்கியமானவை. வரலாற்றுப் பேராசிரியரான கே.கே.பிள்ளை கல்வெட்டு ஆராய்ச்சியாளர்களில் குறிப்பிடத்தகுந்தவர்கள் கே.ஏ. நீலகண்டசாஸ்திரி, வி.ஆர். இராமச்சந்திர தீட்சிதர், கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை” ஆகியோர் என்கிறார்.

விருதுகள்

  • டிசம்பர் 24, 1940-ல் தன் 64-ஆம் வயதில், சென்னை பச்சைப்பன் கல்லூரியில் தமிழ்வேள் உமாமகேசுவரம் பிள்ளை அவர்கள் ”கவிமணி” என்ற பட்டம் வழங்கினார்.
  • 1943-ல் அண்ணாமலை அரசர் ஆத்தங்குடியில் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். பெரும் பொருள் வழங்க முன் வந்தபோது அதை வாங்க மறுத்து விட்டார்.
  • 1954-ல் கவிமணிக்கு தேரூரில் நினைவு நிலையம் அமைக்கப்பட்டது.
  • அக்டோபர் 2005-ல் இந்திய அரசு அஞ்சல் தலை வெளியிட்டுச் சிறப்பித்தது.

இறுதிக்காலம்

தன் இறுதிக்காலம் வரை புத்தேரி என்ற ஊரில் வாழ்ந்தார். செப்டம்பர் 26, 1954-ல் காலமானார்.

படைப்புகள்

  • அழகம்மை ஆசிரிய விருத்தம் (கவிமணி இயற்றிய முதல் நூல்)
  • ஆசிய ஜோதி (1941)
  • மலரும் மாலையும் (1938)
  • மருமக்கள்வழி மான்மியம் (1942)
  • கதர் பிறந்த கதை (1947)
  • உமார் கய்யாம் பாடல்கள் (1945)
  • தேவியின் கீர்த்தனங்கள்
  • குழந்தைச்செல்வம்
  • கவிமணியின் உரைமணிகள்
  • தீண்டாதார் விண்ணப்பம்
  • காந்தளூர் சாலை

உசாத்துணை

அ.கா. பெருமாள்: தமிழறிஞர்கள் புத்தகம்



🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.