under review

தென்னிந்தியா றெயில்வே என்னும் கர்நாடகப் புகைவண்டியின் சிந்து

From Tamil Wiki
Revision as of 03:11, 27 October 2023 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Changed incorrect text:  )
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
தென்னிந்தியா றெயில்வே சிந்து என்னும் கர்நாடகப் புகைவண்டியின் சிந்து

தென்னிந்தியா றெயில்வே என்னும் கர்நாடகப் புகைவண்டியின் சிந்து(1914), சிந்து இலக்கிய நூல்களுள் ஒன்று. தென்னிந்திய ரயில்வே நிறுவனம், சென்னை எழும்பூர் முதல் தூத்துக்குடி வரை பயணம் செய்யும் புகைவண்டியை அறிமுகம் செய்தது. அந்தப் புகை வண்டியின் சிறப்பை, எழும்பூர் முதல் தூத்துக்குடி வரை நடுவில் வரும் ரயில் நிறுத்தங்களை, அந்த இடத்தின் சிறப்புக்களைப் பற்றிக் கூறுகிறது இச்சிந்து நூல்.

பிரசுரம், வெளியீடு

தென்னிந்தியா றெயில்வே என்னும் கர்நாடகப் புகைவண்டியின் சிந்து நூலை இயற்றியவர், திருவண்ணாமலையைச் சேர்ந்த வீரபத்திரன். இந்நூலை, திருப்போரூர் கோபால் நாயகர், தமது சென்னை என்.சி. கோள்டன் அச்சியந்திரசலையில் 1914-ல், பதிப்பித்தார். வித்தியாரத்நாகர அச்சுக்கூடம் மூலம், 1925-ல், இந்த நூல் மீண்டும் பதிப்பிக்கப்பட்டது.

நூல் அமைப்பு

தென்னிந்தியா றெயில்பாரடி- பெண்ணேயிது
தெற்கே போகும் நேரடி

- என்று தொடங்கும் இச்சிந்து நூல், தலைவியுடன் தலைவன், சென்னை எழும்பூர் முதல் தூத்துக்குடி வரை பயணம் செய்யும் புகைவண்டியில், 'டிக்கெட்டு எடுத்து இக்கட்டு இல்லாமல்' பயணம் செய்வதாக அமைந்துள்ளது. இரு அடிக் கண்ணிகளால் ஆன இந்நூலில் பேச்சு வழக்குச் சொற்களும், ஆங்கிலச் சொற்களுக்கு நேரிடையான தமிழ்ச் சொற்களும் இடம்பெற்றுள்ளன.

நூல் மூலம் தெரிய வரும் செய்திகள்

தென்னிந்தியா றெயில்வே என்னும் கர்நாடகப் புகைவண்டியின் சிந்து நூல், சென்னை முதல் தூத்துக்குடி வரையிலான பயணத்தில் வழியில் எதிர்ப்படும் ஊர்களைச் சுட்டி விளக்குகிறது. கைகாட்டி மரம் தானாகவே ஏறி, இறங்குவது, திண்டிவனத்தில் உணவு அருந்துவது போன்றவற்றை வியப்புடன் குறிப்பிடுகிறது. நெல்விளைந்தகளத்தூர் என்பதை வடகளத்தூர் என்றும், மயிலம் என்பதனைத் தென்மயிலம் என்றும், திருப்பாதிரிப்புலியூரைத் திருப்பாப்புலியூர் என்றும் இந்த நூல் சுட்டுகிறது. புகைவண்டியில் பயணம் செய்வதின் இனிமையை, சிறப்பைக் கூறுவதையே இந்த நூல் நோக்கமாகக் கொண்டுள்ளதால், பிற வழிநடைச் சிந்துகளில் இடம்பெறும், பயணத்தின் நோக்கம், சென்றடையும் இடத்தின் வருணனை போன்றவை இந்த நூலில் இடம்பெறவில்லை.

பாடல் நடை

புகை வண்டிப் பயண வர்ணனை

தென்னிந்தியா றெயில்பாரடி -
பெண்ணேயிது தெற்கேபோகும் நேரடி

மன்னர்கள்தான் துதிக்கும் மதிராஸ்க்கருகாக
உன்னிதமாகவே யுகமையாயேற்பட்ட

மண்டலத்தோர்புகழும் மதிறாஸ் எழும்பூரினில்
கண்டவர்வியப்படையக் கருதிநியமித்த

சட்டமுடன்ஸ்டேஷன் பட்டணத்தோர்போற்ற
திட்டமதாகவே கட்டியிருக்கிற

கண்ணாடிக் கதவுகள் கனத்த ஆபீசுகள்
விண்ணாடரும்மெச்ச விதமாகயேற்பட்ட

கைக்காட்டிமரங்களும் கனத்த ஆளுகளும்
பைக்காட்சினேகர் முதல் பலருமிருக்கிற...

ரயில் நிலையங்களின் பெயர்கள்

டிக்கட்டுகள் வாங்கி இக்கட்டில்லாமலே
பக்குவமாகவே தக்கபடிபோவோம்

சைதாபேட்டை ஸ்டேஷன் சார்ந்த பரங்கிமலை
பயிலாகிறெயில்வண்டி பார்மீதிலே போகும்

பல்லாவரம்பாரு பக்கத்தில் வண்டலூரு
எல்லார்தங்குங்கூடு வாஞ்சேரியிதுபாரு

அங்கமதுயீடேற ஆண்டவனைப்போற்றும்
சிங்கபெருமாள்கோயில் ஸ்டேஷனிதுபாரடி

தென்பகுதி ரயில் நிலையங்கள்

திருப்பரங்குன்றம் திருமாநகரம்
விருப்பமுள்ளபள்ளுகுடி விருதுபட்டிஸ்டேஷன்

துலுக்கப்பட்டிசாத்தூர் கோவில்பட்டிகுமரி புரம்
துடர்ந்துவரும்ஸ்டேஷன் துருசாய்ப்போகும் இஞ்சின்

கண்டவர் வியப்படையுங் கடம்பூரு ஸ்டேஷனிது
அண்டையிலிருக்கு மணியாச்சி சத்திரமிது

செந்தைக்குண்டாதாண்டி சிறப்பானறெயில்வண்டி
விந்தைமிகும் திருநெல்வேலி யிதோவந்தோம்

ஏத்தும் திட்டப்பாறை நேத்தியாய்நாம்வந்தோம்
தூத்துக்குடிதுலை தூரமேநாம் வந்தோம்

மதிப்பீடு

சிந்து நூல்கள் பல்வேறு நிகழ்வுகளைப் பாடுபொருள்களாகக் கொண்டு இயற்றப்பட்டன.அக்காலத்து மக்களுக்குப் புகைவண்டி என்பது புதுமையானதாகவும், அதில் பயணம் செய்வது ஒரு சுற்றுலாவைப் போலவும் தோன்றியமையால், அதைப் பற்றி எல்லா மக்களும் அறிய வேண்டும் என்பதற்காக, இதுபோன்ற சிந்து நூல்கள் இயற்றப்பட்டன. அந்த வகையில் சென்னை எழும்பூர் முதல் தூத்துக்குடி வரை பயணம் செய்யும் புகைவண்டி பற்றிய வழிநடைச் சிந்தாக இந்த நூல் அமைந்துள்ளது.

உசாத்துணை


✅Finalised Page