under review

துஞ்சத்து எழுத்தச்சன்

From Tamil Wiki
Revision as of 12:53, 15 December 2023 by Thangavel (talk | contribs) ("சம்ஸ்மிருதச்" is corrected as "சம்ஸ்கிருதச்" & "பரம்பு" has been corrected as "பறம்பு" also more than 1 places.)
துஞ்சத்து எழுத்தச்சன்
துஞ்சன்பறம்பு

துஞ்சத்து எழுத்தச்சன் (துஞ்சத்து ராமானுஜன் எழுத்தச்சன்) (பொ.யு. 15- 16 ஆம் நூற்றாண்டு) மலையாள மொழியின் முதற்கவிஞர் என்றும் மொழித்தந்தை என்றும் கருதப்படுபவர். மலையாளமொழி இலக்கியவடிவம் பெறுவது எழுத்தச்சனின் படைப்புகள் வழியாகவே என்று இலக்கிய வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள்.

வாழ்க்கைக் குறிப்பு

துஞ்சத்து எழுத்தச்சன் பொ.யு 15-16-ஆம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் இன்றைய மலப்புரம் மாவட்டத்தில் உள்ள திரூர் நகரை அடுத்துள்ள இடத்தில் பிறந்தார். இந்த இடம் தற்போது துஞ்சன் பறம்பு என அழைக்கப்படுகிறது.

எழுத்தச்சன் என்பது அவருடைய சாதிப்பெயர். கல்விகற்பிப்பது, ஜோதிடம் பார்ப்பது ஆகியவற்றை குலத்தொழிலாகச் செய்பவர்கள் எழுத்தச்சன் சாதியினர். பிராமணர்களுக்கு அடுத்த நிலையில், ஆலயப்பணி செய்யும் சாதியினருக்கு நிகரான நிலையில் இருந்தவர்கள். துஞ்சத்து என்பது அவருடைய குடும்பத்தின்பெயர் (இறுதிஎல்லை, விளிம்பு என்று பொருள்) இவரது இயற்பெயர் ராமானுஜன் என இவர் நூல்களிலிருந்து சில வரிகளைக்கொண்டு வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர். எழுத்தச்சன் சாதியினருக்குரிய சம்ஸ்கிருதம், சோதிடம் ஆகியவற்றை இளமையிலேயே கற்றார். திருவிதாங்கூர் அரசில் சிலகாலம் வாழ்ந்ததாகச் சொல்லப்படுகிறது. இறுதியில் சிற்றூர் அருகே உள்ள திருக்கண்டியூர் என்னுமிடத்தில் தங்கினார்.

எழுத்தச்சனின் சாதி, பிறந்த ஊர் ஆகியவை குறித்து பலவகையான ஊகங்கள் கேரள வரலாற்றிலுள்ளன. பெரும்பாலும் தொன்மங்களும், இலக்கியப்படைப்புகளின் வரிகளை ஒட்டிய கணிப்புகளுமே கிடைக்கின்றன.

இலக்கிய வாழ்க்கை

மொழித்தந்தை

எழுத்தச்சனின் காலகட்டத்தில் மலையாள மொழி இலக்கியத்தகுதி பெறாத பேச்சுவழக்காக இருந்தது. அதற்குரிய தனித்த எழுத்துருவும், இலக்கணமும் உருவாகவில்லை. பொயு 13 ஆம் நூற்றாண்டுவரை கேரளநிலப்பகுதியை சோழர்கள் தங்கள் பிரதிநிதிகள் வழியாக ஆட்சி செய்தனர். இக்காலகட்டத்தில் கேரளத்தில் மொழியில் மூன்று எல்லைகள் திரண்டு உருவாயின. ஒருபக்கம் பிராமணர்களுக்கு உரிய சமூக இடம் முதன்மைப்பட்டது. சம்ஸ்கிருதக் கல்வி சிற்றரசர்களால் பெருமளவுக்கு ஊக்குவிக்கப்பட்டது. விளைவாக மணிப்பிரவாளம் என்னும் சம்ஸ்கிருதம் கலந்த மலையாளம் உருவாகியது. வெண்மணி கவிஞர்கள் இவ்வகைக்குச் சிறந்த உதாரணங்கள்.

இன்னொரு பக்கம் சோழர் ஆட்சிக்காலத்தில் மையமொழியாக இருந்த செவ்வியல் தமிழ் கேரளத்தில் முதன்மை ஆட்சிமொழியாகவும் இலக்கியமொழியாகவும் நீடித்தது. கம்பராமாயணத்தின் நேரடிச்செல்வாக்கும் அதன் மொழிநடையும் கொண்ட நூல்கள் உருவாயின. இது கொடுந்தமிழ் என்று பிற்கால வரலாற்றாசிரியர்களால் குறிப்பிடப்படுகிறது. இவ்வகைப்பட்ட படைப்புகள் 13 ஆம் நூற்றாண்டில் உருவான கண்ணச்ச ராமாயணம், ராமசரிதம் போன்றவை.

மக்கள் வெவ்வேறு ஊர்களிலாக ஒரு பேச்சுவழக்கு மொழியை கொண்டிருந்தனர். இந்த மொழி தமிழகத்தில் மலைப்பகுதி மக்களின் இன்றைய பேச்சுமுறைக்கு மிக அணுக்கமானது. அந்த மொழி வணிகம் போன்றவற்றில் புழக்கத்தில் இருந்தது. அதை மலையாண்மை (மலைமொழி) என்று அறிஞர்கள் குறிப்பிட்டனர்.

பல்லவர் காலத்தில் தமிழகத்தில் உருவாகி இந்தியாவெங்கும் சென்ற பக்தி இயக்கம் கேரளத்திலும் செல்வாக்கைச் செலுத்தியது. பக்தி இயக்கத்தின் அடிப்படை என்பது எல்லாவகையான உழைப்பாளி மக்களை நோக்கியும் சைவ, வைணவ, சாக்த மதங்களைக் கொண்டுசென்று சேர்ப்பதுதான். அந்நோக்கத்துடன் இந்தியா முழுக்கவே மக்கள் பேசும் மொழிகளில் மத இலக்கியங்கள் உருவாகி வந்தன. துஞ்சத்து எழுத்தச்சன் மக்களின் மொழியில் ராமாயணம் மகாபாரதம் ஆகிய இரு இதிகாசங்களையும் எழுதினார். அவற்றை மலையாளத்தின் எழுத்துக்களிலும் எழுதினார். அவை வாய்மொழி வடிவிலும் எழுத்து வடிவிலும் பெரும்புகழ்பெற்றன. கேரளம் முழுக்கவே இன்றும் வீடுகள் தோறும் அன்றாடம் வாசிக்கப்படுகின்றன. அந்த இரு நூல்கள் வழியாகவே மலையாள மொழி உருவாகி வந்தது எனப்படுகிறது.

மலையாண்மையுடன் செவ்வியல்தமிழ் சொற்களும் சம்ஸ்ருதச் சொற்களும் கலந்து எழுத்தச்சன் உருவாக்கிய மொழியே மலையாளம் எனப்பட்டது. அதன் அடிப்படைச் சொற்றொடரமைப்பும் இலக்கணமும் மலையாண்மையில் இருந்து பெறப்பட்டது. உயரிலக்கணம் சம்ஸ்கிருதத்தை ஒட்டியதாக பின்னாளில் உருவாக்கப்பட்டது.

பக்தி இயக்கம்

துஞ்சத்து ராமானுஜன் எழுத்தச்சன் ஏழாம் நூற்றாண்டில் உருவாகி இந்தியாவெங்கும் பரவிய பக்தி இயக்கத்தின் கேரள முகமாகக் கருதப்படுகிறார். அவருக்கு முன்னரே மத இலக்கியங்கள் இருந்தாலும் பக்தி இயக்கத்திற்குரிய மூன்று இயல்புகளான மக்கள்மொழியில் எழுதப்படுவது, நாட்டார்ப்பண்புகள் மற்றும் இசைக்கூறுகள் கொண்டிருப்பது, பக்தியை உயர்விழுமியமாக முன்வைப்பது ஆகியவை முழுமையாக அவர் படைப்புகளிலேயே உள்ளன

கிளிப்பாட்டு

தூது என தமிழிலும் சந்தேசம் என சம்ஸ்கிருதத்திலும் அறியப்படும் குறுங்காவிய வகைமையில் இயற்கையையும் தோழியையும் தோழரையும் தலைவன் தலைவியிடமும் தலைவி தலைவனிடமும் காதல்தூதாக அனுப்புவதாக கவிதைகள் அமைந்திருக்கும். காளிதாசனின் மேகசந்தேசம் அவ்வகையில் முக்கியமான படைப்பு. அது மேகத்தை தூதுவிடுவது. அந்த வகைமையிலொன்று கிளியை தூதுவிடுவது. அழகர் கிள்ளை விடு தூது தமிழில் அவ்வகையில் ஒரு முக்கியமான படைப்பு. சுகசந்தேசம் என்னும் பெயரில் மலையாளத்திலும் ஒரு குறிப்பிடத்தக்க படைப்பு உண்டு

எழுத்தச்சன் தன் இரு முதன்மை ஆக்கங்களையும் கிள்ளை விடு தூது வடிவில் எழுதினார். ராமனின் கதையையும், மகாபாரதக் கதையையும் கவிஞன் கிளியிடம் சொல்வதுபோல எழுதப்பட்டவை அப்படைப்புகள். சம்ஸ்கிருத செவ்வியல் கவிதைகள் போல மொழிச்செறிவும் படிமச்செறிவும் கொண்டவையாக அன்றி நாட்டார் பாடல்கள் போல உணர்ச்சிகரமான ஓட்டமும் எளிய மொழியும் கொண்டவையாக அமைந்துள்ளன

ராமநாமம் பாடி வந்ந பைங்கிளிப்பெண்ணே

ராமநாமம் நீ சொல்லீடு மடியாதே

என அத்யாத்ம ராமாயணம் கிளிப்பாட்டு நூலும்

ஸ்ரீமயமாய ரூபம் தேடும் பைங்கிளிப்பெண்ணே

சீமையில்லாதே சுகம் நல்கணம் எனிக்கு நீ

என மகாபாரதம் கிளிப்பாட்டு நூலும் தொடங்குகின்றன

கிளிப்பாட்டு பின்னர் மலையாளத்தில் ஓர் இலக்கிய இயக்கமாக ஆகியது. அதை கிளிப்பாட்டு பிரஸ்தானம் என இலக்கிய வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள்.

எழுத்துமொழி முன்னோடி

எழுத்தச்சன் காலத்திற்கு முன்பு மலையாள மொழியில் வட்டெழுத்து (முப்பது எழுத்துகள்கொண்ட தமிழை ஒத்த மலையாள அரிச்சுவடி), சமஸ்கிருதத்தை ஒத்த அரிச்சுவடி, நம்பூதிரிகள் பயன்படுத்திய சமஸ்கிருத அரிச்சுவடி, கிரந்தமும் வட்டெழுத்தும் பல்வேறு வகைகளில் இணைந்த பல்வேறு மலையாள அரிச்சுவடிகள் என தனித்தனி எழுத்து அமைப்புகளை ஒவ்வொருவரும் கொண்டிருந்தனர்.

எழுத்தச்சன் ஹரிநாம கீர்த்தனையை தான் உருவாக்கிய ஐம்பத்தியொரு (51) எழுத்துகள் கொண்ட அரிச்சுவடியைப் பயன்படுத்தி எழுதினார் என்றும், அவரது பாடல் பிரபலமானதால், அவர் அமைத்த எழுத்துமுறையும் பிரபலமானது என்றும் சொல்லப்படுகிறது. ஐம்பத்தொன்று எழுத்து என்பதை அவர் குறிப்பிட்டும் இருக்கிறார். அவர் ஆசிரியரானதனால் அந்த எழுத்துமுறையை அவர் பரவலாக கற்பித்தார். முப்பத்தியொரு எழுத்துகள் கொண்ட வட்டெழுத்துகள் ஆங்காங்கே கற்பிக்கப்பட்டு வந்தபோதும் மலையாள மொழியின் முதல் அகராதியை உருவாக்கிய ஹெர்மன் குண்டர்ட் ஐம்பத்தொன்று எழுத்துமுறையே மலையாளம் என ஏற்றுக்கொண்டார். 1800 கள் முதல் ஆங்கில அரசு அரசு ஆவணங்கள், ஆணைகளுக்கு எழுத்தச்சனின் எழுத்துமுறையைப் பயன்படுத்தியது.

இலக்கியப்படைப்புகள்

எழுத்தச்சனின் நூல்களில் சில நூல்கள் அவரால் இயற்றப்பட்டவை என இலக்கியக்குறிப்புகளும் தொன்மங்களும் உறுதி செய்கின்றன. சில நூல்கள் அவர் பெயரில் இருந்தாலும் அவரால் எழுதப்பட்டவையா என்பது விவாதத்திற்குரியதாக உள்ளது.

அத்யாத்மராமாயணம் கிளிப்பாட்டு

எழுத்தச்சன் இராமாயணத்தின் வாய்மொழி வடிவங்களை அத்யாத்ம ராமாயணம் என்னும் பிற்கால ராமாயணத்துடன் இணைத்து 'அத்யாத்மராமாயணம் கிளிப்பாட்டு' என்ற காவியத்தைப் படைத்தார். இது மலையாள மொழியின் முதல்நூல் என்று மதிப்பிடப்படுகிறது. இன்றும் ஆலயங்களிலும் இல்லங்களிலும் படிக்கப்படுகிறது.

எழுத்தச்சனின் காலகட்டத்தில் வான்மீகி ராமாயணம் புகழ்பெற்றிருந்தது. கம்பராமாயணம் வான்மீகி ராமாயணம் உட்பட பிறா ராமாயணங்களை ஒருங்கிணைத்து எழுதப்பட்டு அக்காலகட்டத்தில் கேரளம் முழுக்க புகழ்பெற்றிருந்தது. கம்பராமாயணத்தின் நேரடியான சாயல்கொண்ட படைப்புகளான கண்ணச்ச ராமாயணம், ராமசரிதம் ஆகியவை புழக்கத்தில் இருந்தன. ஆனால் எழுத்தச்சன் ராமசர்மா எழுதிய அத்யாத்ம ராமாயணம் நூலையே தன் முதல்நூலாகக் கொண்டார்.

இரு காரணங்கள் அதற்குச் சொல்லப்படுகின்றன.

அ. அத்யாத்மராமாயணம் பிற்கால ராமாயணங்கள் அனைத்தையும் உள்ளடக்கியதாகையால் அன்று அடித்தள மக்களிடையே புகழ்பெற்றிருந்தமையே அதற்குக் காரணம் என மதிப்பிடப்படுகிறது.

ஆ. அத்யாத்ம ராமாயணம் ராமனை அரசனாக அன்றி தெய்வமாக முன்வைக்கும் தூய பக்திநூல். அதை அடியொற்றியே துளசிதாசரின் ராமசரிதமானஸ் என்னும் புகழ்மிக்க நூலும் எழுதப்பட்டது. பக்தியை முன்வைக்கும் வைணவ மதப்பிரிவுகள் வான்மீகி ராமாயணத்தையோ கம்பராமாயணத்தையோ மூலநூல்களாக கொள்வதில்லை. அவை அத்யாத்ம ராமாயணத்தையே மூலநூலாகக் கொள்கின்றன.

மகாபாரதம் கிளிப்பாட்டு

அத்யாத்மராமாயணம் கிளிப்பாட்டு அமைந்த அதே வடிவிலேயே மகாபாரதச் சுருக்கத்தை நீண்ட கதைப்பாடலாக எழுத்தச்சன் எழுதினார். இது வியாசபாரதத்தை அடியொற்றியது.

பிற காவியங்கள்

எழுத்தச்சன் பாகவதம் கிளிப்பாட்டு, பிரம்மாண்டபுராணம், தேவிபாகவதம், சிவபுராணம், தேவி மகாத்மியம், உத்தர ராமாயணம், சதமுக ராமாயணம் ஆகிய படைப்புகளை எழுதினார் என்று சொல்லப்படுகிறது. இவற்றில் எவையெல்லாம் எழுத்தச்சன் எழுதியவை என உறுதியாகச் சொல்லப்படமுடியாது. பாகவதம் கிளிப்பாட்டு பிற்காலத்தைய நூல் என அறிஞர் கருதுகின்றனர். உத்தர ராமாயணம் கிளிப்பாட்டு, சதமுக ராமாயணம் ஆகியவையும் எழுத்தச்சன் எழுதியவை அல்ல என்று ஆய்வாளர் கருதுகின்றனர்.

பாடல்கள்

ஹரிநாமகீர்த்தனம், சிந்தாரத்னம், கைவல்யநவநீதம் ஆகிய பாடல்களையும் எழுத்தச்சன் எழுதியதாகச் சொல்லப்படுகிறது. இருபத்துநான்கு விருத்தம் என்னும் பாடல் அவர் எழுதியது என தொடக்ககால ஆசிரியர்கள் கருதினர். பின்னர் அந்நூலின் மொழிநடையைக் கொண்டு அந்த பார்வை மறுக்கப்பட்டது.

தொன்மங்கள்

கொட்டாரத்தில் சங்குண்ணி எழுதிய ஐதீகமாலை என்னும் நூலில் ஒரு தொன்மம் உள்ளது. அத்யாத்மராமாயணத்தை எழுதிய ராமசர்மா அந்நூல் அறிஞர்களால் ஏற்கப்படாமையால் மனமுடைந்து இருந்தபோது நான்கு வேதங்களும் நான்கு நாய்களின் வடிவில் தொடர்ந்து வர வியாசரே வந்து அவரை வாழ்த்தி தென்னாட்டில் அத்யாத்ம ராமாயணத்தின் புகழை நிலைநிறுத்த ஒருவர் பிறப்பார் என அறிவித்தார். அவ்வாறுதான் எழுத்தச்சன் பிறந்தார்

சடங்குகள்

எழுத்தச்சன் தொடர்பான சில சடங்குகள் கேரளத்தில் புகழ்பெற்றுள்ளன.

ஏடு துவக்குதல்

சிறுவர்களுக்கு முதல் எழுத்தை அரிசி அல்லது நெல்பரப்பில் எழுதி ஏடு தொடங்கும் சடங்கு தொல்தமிழகத்தில் இருந்து வந்தது. எழுத்தச்சன் அதை மலையாள எழுத்துருக்களை எழுதியபடி நிகழ்த்தும் சடங்கை உருவாக்கினார் என்று சொல்லப்படுகிறது. 'ஹரி ஸ்ரீ கணபதியே நமஹ' என்ற வாசகத்தைக் கொண்டு எழுத்தச்சன் சிறார்களுக்கு ஏடு தொடங்கி வைத்தார். இன்றுகேரள மக்கள் விஜயதசமி அன்று அவர் வசித்த துஞ்சன் பறம்புக்கு வந்து அங்குள்ள மண்ணைக் கொண்டு தங்கள் குழந்தைகளின் கல்வியைத் துவக்குவது மரபாக உள்ளது. பல்வேறு ஆலயங்களிலும் இச்சடங்கு இன்று கொண்டாடப்படுகிறது.

ஆடிமாதம் ராமாயணம் வாசிப்பு

மலையாள மாதம் கர்க்கிடகம் (தமிழில் ஆடி) நாற்பத்தொரு நாட்களிலாக எழுத்தச்சனின் அத்யாத்மராமாயணம் கிளிப்பாட்டு நூலை அந்தியில் இல்லங்களில் வாசித்து முடிக்கும் சடங்கு கேரளத்தில் பரவலாக உள்ளது. ஆலயங்களிலும் இந்த வாசிப்புச்சடங்கு நிகழ்கிறது

நினைவிடங்கள்

எழுத்தச்சன் நினைவாக பல நூலகங்களும் கலாச்சார மையங்களும் உள்ளன. மூன்று மையங்கள் முக்கியமானவை

சிற்றூர் மடம்

பாலக்காடு அருகே சிற்றூரில் சோகநாசினி ஆற்றின் கரையில் சிற்றூர் மடம் உள்ளது. இங்குதான் பாகவதம் கிளிப்பாட்டு எழுதப்பட்டது. அது எழுத்தச்சனால் எழுதப்பட்டது என்றும் அவருடைய மாணவரான சூரியநாராயணனால் எழுதப்பட்டது என்றும் இரண்டு தரப்புகள் உண்டு. இங்கே எழுத்தச்சன் துறவுபூண்டு வாழ்ந்ததாகச் சொல்லப்படுகிறது. அவருடைய மிதியடி, யோகதண்டு ஆகியவை இங்கே உள்ளன

துஞ்சன் பறம்பு

கேரளத்தில் மலப்புறம் மாவட்டத்தில் திரூர் அருகே எழுத்தச்சன் பிறந்த இடமாக கருதப்படும் துஞ்சன் பறம்பு எனுமிடத்தில் 1964 ஜனவரி 1 ல் துஞ்சன் நினைவிடம் திறக்கப்பட்டது. மாத்ருபூமி நாளிதழ் ஆசிரியரும் சுதந்திரப்போராட்டவீரருமான கே.பி.கேசவமேனன் அதன் முதல் தலைவராக இருந்தார். எம்.டி.வாசுதேவன் நாயர் அதை பெரிய நிறுவனமாக வளர்த்தெடுத்தார்.

துஞ்சன் பல்கலைக்கழகம்

துஞ்சத்து எழுத்தச்சன் நினைவாக துஞ்சன் மலையாள பல்கலைக்கழகம் கேரளத்தில் திரூரில் 2012ல் நிறுவப்பட்டது.

நினைவுகள்

துஞ்சன் தினம்

எழுத்தச்சனின் பிறப்புநாளாக டிசம்பர் 31 அறிவிக்கப்பட்டுள்ளது. அன்று அவருடைய நினைவு கேரளம் முழுக்க கொண்டாடப்படுகிறது.

துஞ்சன் விருது

கேரள சாகித்ய அக்காதமி ஆண்டுதோறும் துஞ்சன் நினைவு விருதுகள் வழங்கி வருகிறது

இலக்கிய நூல்கள்

எழுத்தச்சனைப் பற்றி ஏராளமான ஆய்வுநூல்களும் புனைவுகளும் மலையாளத்தில் எழுதப்பட்டுள்ளன. இருபதுக்கும் மேற்பட்ட குறிப்பிடத்தக்க வாழ்க்கை வரலாறுகள் உள்ளன.

புனைவுகள்
  • தீக்கடல் கடைந்து திருமதுரம்- சி.ராதாகிருஷ்ணன்
ஆய்வுகள்
  • எழுத்தச்சனின் கலை - பி.கே.பாலகிருஷ்ணன்
  • விஸ்வாசத்தின்றே காணாப்புறங்கள்- கே.பாலகிருஷ்ண குறுப்பு
  • துஞ்சத்து எழுத்தச்சன்றே ஜீவிதமும் கிருதிகளும். கே.பி.நாராயண பிஷாரடி
இதழ்கள்

துஞ்சத்து எழுத்தச்சனின் பெயரில் இரண்டு இதழ்கள் வெளியாயின

  • 1906 ல் திரிச்சூரில் இருந்து கவிஞர் வள்ளத்தோள் நாராயண மேனன் முன்னெடுப்பில் ராமானுஜன் என்னும் இதழ் வெளிவந்தது.
  • 1949ல் சிற்றூரில் இருந்து துஞ்சத்தெழுத்தச்சன் என்னும் இதழ் வெளிவந்தது.

இலக்கிய இடம்

"பக்தி இயக்கத்தின் சமூக அரசியல் மாற்றத்தின் குரலை கேரளத்துக்குக் கொண்டு வந்தவர் எழுத்தச்சன். எளிய நாட்டார் வாய்மொழி சந்தத்தில் ராமாயணத்தையும் மகாபாரதத்தையும் எழுதி முழுமுதல்தெய்வத்தை கேரள மண்ணில் நிறுவியவர் அவர். மலையாளமொழி இலக்கியத்தின் தொடக்கப்புள்ளி, கேரள தேசியத்தின் விதை, கேரள எளிய மக்களின் முதல் பிரதிநிதி, கேரள சமூகத்தின் பண்பாட்டு அடித்தளத்தை உருவாக்கியவர் எழுத்தச்சனே என்று இ.எம்.எஸ்.நம்பூதிரிப்பாட் குறிப்பிடுவது இதனாலேயே." என ஜெயமோகன் குறிப்பிட்டார்.

நூல்கள் பட்டியல்

  • அத்யாத்ம ராமாயணம் கிளிப்பாட்டு
  • வியாசமகாபாரதம் கிளிப்பாட்டு
  • பாகவதம் கிளிப்பாட்டு
  • பிரம்மாண்டபுராணம்
  • தேவிபாகவதம்
  • சிவபுராணம்
  • தேவி மகாத்மியம்
  • உத்தர ராமாயணம்
  • சதமுக ராமாயணம்
  • ஹரிநாமகீர்த்தனம்
  • சிந்தாரத்னம்
  • கைவல்யநவநீதம்

உசாத்துணை


✅Finalised Page