under review

தி. க. சுப்பராய செட்டியார்

From Tamil Wiki
Revision as of 09:14, 24 February 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Changed incorrect text: **ஆம் ஆண்டு, **இல்)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
தமிழ் இணைய கல்விக் கழகம்

தி. க. சுப்பராய செட்டியார் ( இறப்பு: 1894) 19-ம் நூற்றாண்டு புலவர்களுள் ஒருவர். திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் மாணவர்களில் முதன்மையானவர் . 19-ம் நூற்றாண்டு காலங்களில் வாழ்ந்த புலவர்களில் ஓலைச்சுவடிகளை நூல்களாகப் பதிப்பித்த புலவர்களில் குறிப்பிடத்தக்கவர் . இவர் சோடசாவதானம் சுப்பராய செட்டியார் என்றும் அழைக்கப்பட்டார்.

பிறப்பு, கல்வி

மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை யின் 'என் சரித்திரம்' என்ற புத்தகத்தில் இவரை பற்றிய குறிப்புகள் உள்ளன. பண்ருட்டியில் பாலக்கரை வீரராகவ செட்டியாரின் மகனாகப் பிறந்தார். மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் மாணாக்கர். ஆழ்ந்த அறிவும் நல்ல நினைவாற்றலும் கொண்டவர். பதினாறு அவதானம் செய்யும்படி தம் ஆசிரியரால் பயிற்றுவிக்கப்பட்டு சோடசாவதானம் சுப்பராய செட்டியார் என்று சிறப்பு பெயர் பெற்றார். தி. க. சுப்பராய செட்டியார் மதராஸ் அரசாங்கத்து நார்மல் பாடசாலையில் தமிழ்ப் புலவராகப் பணியாற்றினார். இராயபேட்டை அத்துவித வேதாந்த சபையில் வாரந்தோறும் வேதாந்த வகுப்பு நடத்தி வந்தார் .

இலக்கியப் பணி

Tamil digital library
Tamil digital library

இவர் 'விரிஞ்சேகர் சதகம்', ' ஆதிபுர தலபுராணம் ' என்னும் நூல்களை இயற்றியுள்ளார் . பதினோராம் திருமுறை முழுவதையும் பல ஏட்டுச் சுவடிகளை ஒப்புநோக்கி, முதன்முதலாகப் பதிப்பித்து 1869-ல் வெளியிட்டார்.

தம் ஆசிரியர் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் மாயூரப் புராணம்,திருநாகை காரோணப் புராணம் ஆகியவற்றையும், காங்கேயன் உரிச்சொல் நிகண்டு,திருப்போரூர் சந்நிதிமுறை ஆகியவற்றையும் பதிப்பித்தார்.

பரஞ்சோதி முனிவரின் திருவிளையாடற் புராணம் , கம்பராமாயணம் , அயோத்தியா காண்டம் , சிவஞான முனிவரின் 'காஞ்சிப் புராணம்' , 'புலியூர் வெண்பா' ஆகிய நூல்களுக்கு உரை எழுதி அச்சிட்டார் . 'நாமகள் இலம்பகம்', 'கோவிந்தையார் இலம்பகம், காந்தருவதத்தையார் இலம்பகம்' மூன்றையும் நச்சினார்க்கினியர் உரை, பதவுரையுடன் பதிப்பித்தார்.

சிலப்பதிகாரம் – புகார்க் காண்டத்தின் கானல்வரிக்குப் புதியதாய் உரை எழுதி, 1872 -ல் முதன்முதலாகப் பதிப்பித்தார். 'விரிஞ்சேகர் சதகம்' பற்றியும் சுப்பராய செட்டியாரைப் பற்றியும் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை எழுதிய சிறப்பு செய்யுள்

மாமேவு கற்பகப் பூந்தளிரும் நறுமலரும் வாட்டமற்றெளிர வான்மேல்
மாலென வுயர்ந்துதழை சோலைபுடை சூழும்வள வாணியம் பதிதழைப்பப்
பூமேவு மொருபாற் பசுங்கொடி தழைப்பவளர் பொற்றரு வினிற்றழைத்த
பூரணி யிடப்பிரம காரணர் விரிஞ்சேகர் பொன்னங்கழற்கணியெனப்
பாமேவு மொருசதகம் இனிது பாடுகவெனப் பரவுதம்பாலேற்றவர்
பாலேவ மேற்பவருள் மால்வேங்க டப்பமுகில் பரிவுற்று வந்துகேட்பத்
தூமேவு சொற்பொருள் நயம் பெறச் செய்தனன் துதிவீரராகவப்பேர்த்
தூயனருள் மைந்தன் நய மிகுசோட சவதானி சுப்புராய புரவலனே" -

சுப்பராய செட்டியாரிடம் தமிழிலக்கியங்களைப் பயின்றவர்களில் தெ. பொ. மீனாட்சிசுந்தரத்தின் தந்தை பொன்னுசாமி கிராமணியும் ஒருவர்.

இறப்பு

தி. க. சுப்பராய செட்டியார் 1894-ல் காலமானார் .

நூல்கள்

விரிஞ்சேச சதகம்

பதிப்பித்த நூல்கள்
  • பதினோராம் திருமுறை( ஏட்டுச்சுவடிகளிலிருந்து)
  • நாமகள் இலம்பகம்
  • கோவிந்தையார் இலம்பகம்
  • காந்தருவதத்தையார் இலம்பகம்
  • மாயூரப் புராணம்
  • திருநாகை காரோணப் புராணம்
  • காங்கேயன் உரிச்சொல் நிகண்டு
  • திருப்போரூர் சந்நிதிமுறை
  • உரிச்சொல் நிகண்டு
உரையெழுதிப் பதிப்பித்த நூல்கள்
  • திருவிளையாடற் புராணம்
  • கம்பராமாயணம்
  • அயோத்தியா காண்டம்
  • சிவஞான முனிவரின் காஞ்சிப் புராணம்
  • புலியூர் வெண்பா
  • திருநெடுந்தாண்டகமாலை

உசாத்துணை

தமிழ் இணைய கல்விக் கழகம்


✅Finalised Page