under review

திரு அல்லிக்கேணி பார்த்தசாரதி மாலை

From Tamil Wiki
Revision as of 17:15, 27 April 2024 by ASN (talk | contribs) (Page Created: Para Added: Image Added: Link Created: Proof Checked.)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
திரு அல்லிக்கேணி பார்த்தசாரதி மாலை

திரு அல்லிக்கேணி பார்த்தசாரதி மாலை (1966), திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் மீது பாடப்பட்ட மாலை இலக்கிய நூல். இந்நூலை இயற்றியவர், ஸ்ரீவில்லிபுத்தூர் சௌரியப் பெருமாள்தாசர்.

பிரசுரம், வெளியீடு

திரு அல்லிக்கேணி பார்த்தசாரதி மாலை நூலை, 1966-ம் ஆண்டில், சென்னையைச் சேர்ந்த ஆர். ஜி. பதி கம்பெனி நிறுவனம் பதிப்பித்தது. இதன் விலை விலை 25 பைசா!

நூல் அமைப்பு

திரு அல்லிக்கேணி பார்த்தசாரதி மாலை நூல், எழுசீர் அடி ஆசிரிய விருத்தத்தில் இயற்றப்பட்டுள்ளது. கடவுள் வாழ்த்துடன் சேர்த்து மொத்தம் 101 பாடல்கள் இந்நூலில் அமைந்துள்ளன. வேங்கடகிருஷ்ணன் என்னும் பார்த்தசாரதிப் பெருமாளின் புகழ், பெருமை, சிறப்பு, அவரது அருளிச் செயல்கள், அவரைத் தொழுவதால் பக்தருக்கு ஏற்படும் நன்மைகள் போன்றவை இந்நூலில் விளக்கப்பட்டுள்ளன.

பாடல் நடை

ஒருவனே தெய்வமல்லால் வேறேயில்லை

யுலகமெல்லாம் ஒன்றாமே யுற்றுப் பார்த்தால்

கருவிடமே வித்துமுத லுலகமாச்சு

கதிரவனா லுலகமெல்லாம் விளங்கநிற்கும்

உருவான நட்சத்திரங்க ளிருபத்தேழி

லுள்ளபடி நடக்குமல்லால் வேறேயில்லை

பரிமளமே திருவல்லிக் கேணிவாழும்

பார்த்தனிட சாரதியைப் பணிகுவாயே


அன்னை சொல்லே காயத்திரி மந்திரமாகு

மறிந்தவர்க்குத் தந்தைசொல்லே வேதமாகும்

மன்னு மஷ்டாக்ஷர ஜெபமோட்சமாகும்

மயங்கு பன்னிருவாழ்வார் முகுந்தனாவார்.

தன்னிடத்தில் பொறுமையற்றா லவரே தெய்வஞ்

சத்தியமா யிம்மொழியை நம்பலாமே.

பன்னுமலர் திருவல்லிக் கேணிவாழும்

பார்த்தனிட சாரதியைப் பணிகுவாயே


ஈயாமல் வாழ்ந்தாலுஞ் சுகமுமில்லை

இல்லிடத்தை விடவேறே யிடமுமில்லை

ஓயாமல் பொய்யுரைத்தாற் சுகமுமில்லை

ஊருடனே பகைத்தாலு முயிர்க்குச்சேதம்

தீயாக மூளு முனி வனித்தியத்தில

தெளிந்தோரைச் சார்ந்திடிலோ வணுகிடாது

பாயாருந் திருவல்லிக் கேணிவாழும்

பார்த்தனிட சாரதியைப் பணிகுவாமே.

மதிப்பீடு

திரு அல்லிக்கேணி பார்த்தசாரதி மாலை, எளிய தமிழில் சொற்சுவை, பொருட்சுவை இலக்கியச் சுவையுடன் இயற்றப்பட்டுள்ளது. பார்த்தசாரதிப் பெருமாளைப் புகழ்ந்து இயற்றப்பட்ட பல தோத்திர நூல்களுள் ஒன்றாக அறியப்படுகிறது.

உசாத்துணை


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.