திருவாக்குப் புராணம்

From Tamil Wiki

கிறீத்துவ தமிழ்க் காப்பியங்களில் எச்.ஏ. கிருஷ்ண பிள்ளை இயற்றிய ‘இரட்சணிய யாத்திரிகம்’ மற்றும் வீரமாமுனிவர் இயற்றிய ‘தேம்பாவணியும்’ புகழ்பெற்றவை. இவற்றை தவிர்த்து சில அறியப்படாத கிறீத்துவ காப்பியங்களும் எழுதப்பட்டுள்ளன. திருவாக்குப் புராணம் அவற்றில் ஒன்றாகும்.

ஆசிரியர்

திருவாக்குப் புராணம் கனகசபை என்பவரால் இயற்றப்பட்டு 1853ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. அளவெட்டி கனகசபை புலவர் எனவும் அறியப்படும் இவர் 1815ல் இலங்கையில் யாழ்ப்பாணத்திலுள்ள அளவெட்டியில் பிறந்தார். இவர் பிறந்த வருடம் 1825 என்றும் சில குறிப்புகள் உள்ளன. இவரது முழுப் பெயர் ஜெர்மையா எவாட்த் கனகசபை பிள்ளை என்றும் இவரது பெற்றோர்கள் சைவ சமயத்திலிருந்து சீர்திருத்த கிறீத்துவத்தை தழுவினர்.

காலம்

இந்த நூல் உருவாகிய காலம் குறித்து பேராசிரியர் கா.சிவத்தம்பி பின்வருமாறு கூறியுள்ளார்.  “1619 – 1796 வரையுள்ள காலகட்டத்தில் கிறிஸ்தவம் தமிழரிடையே பரவுவதைக் காணலாம்.  இக்காலகட்டத்திலேயே போர்த்துக்கேயர் கத்தோலிக்க மதத்தினையும் ஒல்லாந்தர் புரட்டஸ்தத் கிறிஸ்தவத்தினையும் பரப்பினர்.  இவ்வாறு பரப்பும்போது தமிழிலக்கிய பாரம்பரியத்தின் சிற்றிலக்கிய வடிவமாக போற்றப்படும் அடிநிலை மக்கள் தொடர்புடைய இலக்கிய வடிவங்களை கையாண்டுள்ளனர்’. திருவாக்குப் புராணம் 1866ல் அச்சிடப்பட்டாலும் அதன் அடித்தளம் மேற்கூறப்பட்ட காலத்திலிருந்து உருவாகியது எனலாம்.

ஆசிரியரின் பிற நூல்கள்

கனகப்பிள்ளை ஒரு நிகண்டு நூலையும் அழகர்சாமி மடல் எனும் பிரபந்த நூலையும் இயற்றியுள்ளார்.

உள்ளடக்கம்

இரட்சணிய யாத்திரிகம் மற்றும் தேம்பாவணி கிறீத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டிருந்தாலும் அவை விவிலியத்தை நேரடியாகச் சொல்பவை அல்ல. இரட்சணிய யாரத்திரிகம் ஒரு கிறீத்துவ பக்தரின் பயணத்தையும், தேம்பாவணி அதிகம் அறியப்படாத இயேசுவின் தந்தை சூசையின் கதையை காப்பிய வடிவிலும் சொல்பவை ஆகும். கனகசபை விவிலியத்தை, அதில் உள்ளவாறே, காப்பிய வடிவில் மாற்றும் முயற்சியில் திருவாக்குப் புராணத்தை எழுதினார். கடவுளின் வார்த்தை என்பதையே திருவாக்கு என அவர் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் விவிலியத்தின் முதல் இரு புத்தகங்களான துவக்க நூல் (ஆதியாகமம் - Genesis) மற்றும் விடுதலைப் பயணம் (யாத்திராகமம் - Exodus) ஆகியவற்றைத் தாண்டி அவரால் எழுதி முடிக்க இயலவில்லை. இவை இரண்டும் முறையே 'ஜநந காண்டம்',  'யாத்திரைக் காண்டம்' என்றும் தலைப்பிடப்பட்டு எழுதப்பட்டுள்ளன.

ஜநந காண்டத்தில் பத்துப் படலங்களும்,  யாத்திரைக் காண்டத்தில் எட்டு படலங்களும் உள்ளன. பழைய ஏற்பாட்டில் ‘பத்துகற்பனைப்படலத்துடன்’ முதல் பகுதி நிறைவு பெறுகிறது. இரண்டாம் பாகத்தில் சுவிசேட காண்டம் எனும் தலைப்பில் 67 பாடல்கள் மட்டுமே எழுதப்பட்டுள்ளன. இவற்றில் புதிய ஏற்பாட்டு துவக்க கதைகளும் கருத்துக்களும் உள்ளன. நூலின் துவக்கத்தில் வரும் பதிகத்தில் ஆசிரியர் புதிய மற்றும் பழைய ஏற்பாட்டின் பல நிகழ்வுகளைக் குறித்தும் எழுதியுள்ளார்.

அச்சு வடிவம்

1866ல் வெளியான இதன் அச்சு வடிவத்தின் முகப்பில் ‘தமிழில் கவிதை வடிவில் விவிலியத்தை எழுதும் முயற்சி’ என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது. ‘இஃது கிறிஸ்துசமய வித்தியாசாலை மாணாக்கரும் பிறரும் சத்தியவேதநூலைக் கற்றுக்கொள்ளுவதற்குபயோகமாக மெக்காதர் ஐயரால் புராணனடையாகச் செய்விக்கப்பட்டது’ எனும் குறிப்பும் உள்ளது.

அதிகம் அறியப்படாத கிறீத்துவ காப்பியங்கள்

  • கிறிஸ்து மான்மியம் - சங்கை தொஷ் ஐயர் (வெளியீடு தரங்கம்பாடி லூத்தரன் மிஷன் அச்சகம் 1891)
  • திருஅவதாரம் - மாணிக்கவாசகம் ஆசீர்வாதம், சூரங்குடி, திருநெல்வேலி(பிறப்பு 1865)
  • சுடர்மணி - ஆரோக்கியசாமி (பிறப்பு 1912, கோலியனூர், விழுப்புரம்) (வெளியீடு 1976)
  • சுவிசேட புராணம் - ஸ்காட்
  • கிறிஸ்தாயணம் - ஜான் பால்மர்
  • ஞானாதிக்க ராயர் காப்பியம் - சாமிநாத பிள்ளை
  • இயெசு புராணம் - ஈழத்துப்பூராடனார்
  • திருச்செல்வர் காவியம் - அருளப்பர் நாவலர்

திருவாக்குப் புராணத்திலிருந்து சில பாடல்கள்

முதற்பாடல்

துள்ளு தெண்டிரைத் தொல்கடற் பாரினுள்

கள்ள மற்ற கருத்துமெய்ஞ் ஞானிகள்

வள்ள லென்று வழுத்து மொருபொருள்

உள்ள முற்றென் நுணர்வினு ணிற்பதே.

உற்பத்திப் படலம்

துவக்க நூல் முதல் பாடல்

அனைத்துககுந் திருவாக்கால் அளித்தகில சராசரமும் அருட்சித் தத்தே

நினைத்துளவப் படியமைத்துக் காத்தழிக்குந் தனிமுதலாம் நிகரிலாதான்

றனைத்துதிசெய் தெண்ணுகின்ற தகுங்கருமஞ்சித்திபெறத் தருகவென்றே

இனைத்தெனவாப் போதரிய இணைமலர்த்தாள் சிரந்தேந்தி இறைஞ்சுவ மே.

சலப்பிரளயப்படலம்

நோவா காலத்துப் பிரளயம்

இன்னவாறுயர் புன்ற்பெருக்கிடை இறையவன்றனது முனிவினால்

பின்னவாறுபடு மன்குலம்பெரிது பீழையுற்றுயிர் மடிந்தன

அன்னவாறுபல புள்விலங்க்குகளு மன்றுமாய்ந்துயி ரழிந்தன

சொன்னவாறுகெழு பேழையாழமிகு தோயமெலுலவி நின்றதே.

புதிய ஏற்பாடு

மரியாளின் நன்றிப்பாடலின் பகுதி

தயவுறுமவனிரக்கந் தலைமுறை தொறுமவற்குப்

பயமுறுகின்றோர் மீது பற்றிநின் றிடுவதாகும்

புயம்தனாலே யன்னான் பலத்தவை புரிவோனாகி

வயமுறு மிறுமாப்புற்றோர் மனங்களைச் சிதறத்தாக்கி.

கடைசிப் பாடல்

இந்தநல் லுரையைக்கேட்டோ ரெலிசபெத் தினைபார்த்தேயுன்

பந்தமானவரு ளிப்பேர் படைத்தவ ரில்லையென்னாத்

தந்தைதன் வதன்நோக்கிச் சைகையாலென்ன பேருன்

மைந்தனுக்கீயவுள்ளம் வைத்தனை யுரைநீயென்றார்.

உசாத்துணை