திருமயிலை சண்முகம் பிள்ளை

From Tamil Wiki

மகாவித்வான் திருமயிலை சண்முகம் பிள்ளை ( 1858 -1905) தமிழறிஞர். சென்னை மயிலாப்பூரில் வாழ்ந்தவர். மயிலை சீனி.வேங்கடசாமியின் ஆசிரியர். நூல்பதிப்பாளர். மணிமேகலையை முதலில் பதிப்பித்தவர்.

வாழ்க்கை

சண்முகம் பிள்ளை சிவஞான சுவாமிகள், திருத்தணிகை கச்சியப்ப முனிவர், அஷ்டாவதானம் புரிசை சபாபதி முதலியார், மயிலை சண்முகம் பிள்ளை ஆகியோர் ஆசிரியர்- மாணவர் வரிசையில் அமைந்தவர்கள் என மயிலை சீனி.வேங்கடசாமி அவருடைய ’தமிழாசிரிய மாணவ வழிமுறை விளக்கம்’ என்னும் நூலில் குறிப்பிடுகிறார்.

சண்முகம் பிள்ளை புனித பால் உயர்நிலைப் பள்ளி, புனித தோமையர் உயர்நிலைப் பள்ளி ஆகியவற்றில் தமிழாசிரியராக இருந்து ஓய்வுபெற்றவர். தமிழறிஞர் கா. நமச்சிவாய முதலியார் இவருடைய மாணவர். இவரிடம் மயிலை சீனி. வேங்கடசாமி தமிழ் கற்றார். சென்னை மயிலாப்பூர், காரணீஸ்வரர் கோயில் தெருவில் வாழ்ந்தார்.

பதிப்புப் பணி

மயிலை சண்முகம்பிள்ளை தமிழ் பதிப்பு முன்னோடிகளில் ஒருவர், விவேகசிந்தாமணி, ஞானபோதினி இதழ்களில் எழுதியுள்ளார் என வீ.அரசு குறிப்பிடுகிறார். மணிமேகலையை 1894ல் முதன்முதலில் அச்சிட்டு வெளியிட்டவர். இந்நூல் மதராசு ரிப்பன் அச்சியந்திரசாலையில் பதிப்பிக்கப்பட்டது. மயிலை சண்முகம்பிள்ளை கந்தபுராணம் உள்ளிட்ட நூல்களுக்கு உரை எழுதியிருக்கிறார்.

நூல்கள்

பதிப்பு
  • மணிமேகலை
  • நன்னூல் விருத்தியுரை
  • தஞ்சைவாணன் கோவை
  • மச்சபுராணம்
  • சிவவாக்கியர் பாடல்
  • மாயப்பிரலாபம்
  • பிக்ஷாடனநவமணிமாலை
  • குளத்தூர்ப் பதிற்றுப்பத்தந்தாதி
உரை
  • கந்தபுராண வசனம்
  • அயோத்தியா காண்டம்
  • பொன்வண்ணத்தந்தாதி
  • திருக்கைலாய ஞானஉலா
  • திருவாரூர் மும்மணிக் கோவை
  • பிச்சாடன நவமணி மாலை

உசாத்துணை

  • மயிலை சீனி வேங்கடசாமி. வீ.அரசு. சாகித்ய அக்காதமி
  • தமிழாசிரிய மாணவ வழிமுறை விளக்கம் மயிலை சீனி.வேங்கடசாமி