under review

திருக்குற்றாலக் குறவஞ்சி: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
(Changed incorrect text: ==அடிக்குறிப்புகள்== <references />)
 
Line 172: Line 172:
*[https://shaivam.org/scripture/Tamil/1164/tirukkutralak-kuravanchi திரிகூடராசப்பக் கவிராயரின் திருக்குற்றாலக் குறவஞ்சி - மதிப்புரை ரசிகமணி சிதம்பரநாத முதலியார்]
*[https://shaivam.org/scripture/Tamil/1164/tirukkutralak-kuravanchi திரிகூடராசப்பக் கவிராயரின் திருக்குற்றாலக் குறவஞ்சி - மதிப்புரை ரசிகமணி சிதம்பரநாத முதலியார்]
*[http://www.muthukamalam.com/essay/literature/p248.html குற்றாலக் குறவஞ்சியில் குறவர் வாழ்வியல் மு. கயல்விழி]
*[http://www.muthukamalam.com/essay/literature/p248.html குற்றாலக் குறவஞ்சியில் குறவர் வாழ்வியல் மு. கயல்விழி]
==அடிக்குறிப்புகள்==
== அடிக்குறிப்புகள் ==
<references />
<references />


{{Finalised}}
{{Finalised}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Latest revision as of 06:20, 7 May 2024

குறத்தி குறி சொல்லல், நன்றி: தமிழ்ஹிந்து

திருக்குற்றாலக் குறவஞ்சி தமிழ்ச் சிற்றிலக்கியங்களுள் குறத்தி பாட்டு அல்லது குறவஞ்சி வகையைச் சேர்ந்த நூல். தமிழின் குறவஞ்சி நூல்களில் கவிநயம் மிக்கதாகவும், மக்களால் விரும்பப்பட்டதாகவும் இருந்தது.

தென்காசிக்கு அருகில் அமைந்திருக்கும் குற்றாலம் எனும் ஊரின் சிறப்பையும் அங்கு கோயில் கொண்ட குற்றாலநாதரையும் போற்றிப் பாடும் நூல். குற்றாலக்குறவஞ்சி நாட்டிய நாடகமாக, நவீன நாடகமாக, நாட்டார் இசைக்கலையாக இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழின் கூறுகளையும் கொண்ட ஓர் நிகழ்த்துகலையாக நடிக்கப்பட்டு வருகிறது.

ஆசிரியர்

திருக்குற்றாலக் குறவஞ்சியை இயற்றியவர் திரிகூடராசப்ப கவிராயர்.

குற்றாலத்திற்கு அருகிலுள்ள மேலகரம் என்ற சிற்றூரில் சைவ வேளாளர் குடியில் பிறந்தவர். திருவாவடுதுறை ஆதீனத்தின் தலைவராக விளங்கிய சுப்பிரமணிய தேசிகனின் சகோதரர். குற்றாலநாதரது சன்னிதானத்தில் வாழ்நாள் முழுவதும் தெய்வத்தொண்டு செய்து வந்தவர். 'திருக்குற்றாலநாதர் கோவில் வித்துவான்' என்ற பட்டப்பெயர் பெற்றவர். குறவஞ்சி நூலைப் பாராட்டி மதுரை நாயக்க மன்னரான முத்துவிஜயரங்க சொக்கலிங்க நாயக்கர் பரிசளித்த நிலம் குறவஞ்சி மேடு என்றே வழங்கப் படலாயிற்று.

இதற்கு ஆதாரமாக 1718-ம் ஆண்டின் செப்புப் பட்டயம் ஒன்றும் உள்ளதாகத் தெரிகிறது. திரிகூடராசப்பக்கவிராயர் குற்றாலத்தின் மீது தலபுராணம், மாலை, சிலேடை, பிள்ளைத்தமிழ், யமகஅந்தாதி முதலிய நூல்களையும் இயற்றினார்.

கொல்லம் ஆண்டு 887-ல் பாண்டிய அரசன் குற்றாலநாதரின் சித்திரசபைக்கு ஓடு வேய்ந்த செய்தியைச் சின்னணஞ் சாத்தேவன் என்பவன் செப்பேடு செய்து செய்திருக்கிறான், என்று இந்த நூலிலுள்ள பாடல் ஒன்று குறிப்பிடுகிறது. கொல்லம் 824 + 887 = 1711-ம் ஆண்டினை இந்த நூல் குறிப்பிடுவதால் இந்த நூலின் காலம் 18-ம் நூற்றாண்டு எனத் தெரியவருகிறது.

நூல் அமைப்பு

தமிழ் இணைய கல்விக்கழகம்
kuravanji dancers-tamilhindu.com

திருக்குற்றாலக் குறவஞ்சி, குறவஞ்சி என்னும் சிற்றிலக்கிய வகைமையின் இலக்கணப்படி இயற்றப்பட்டுள்ளது. இறைவன்மீது பாடப்பெற்றதால் 'திரு' அடைமொழியுடன் திருக்குற்றலாக்குறவஞ்சி எனும் பெயர் பெற்றது.

நாயகி வசந்தவல்லி, குற்றாலத்தில் உறையும் இறைவரான திரிகூடநாதர் மீது கொண்ட காதல் சித்தரிக்கப் படுகிறது. “கடவுள்மாட்டு மானிடப் பெண்கள் நயந்த பக்கம்” என்பதற்குச் சான்றாகத் திகழ்கிறது.

திரிகூடநாதர் பவனிவருதல் – வசந்தவல்லி பந்தாடுதல் – வசந்தவல்லி சிவனைக் கண்டு காதல் கொள்ளதல் – வசந்தவல்லியின் கால் துன்பம் – குறத்தி (சிங்கி) வருதல், மலைவளம் கூறுதல் – வசந்தவல்லிக்கு குறி சொல்தலுல் – வசந்தவல்லியின் மகிழ்ச்சி – குறவன் (சிங்கன்) குறத்தியைத் தேடிவருதல் – இருவரும் சந்தித்தல் என்ற வரிசையில் நிகழ்வுகள் அமைகின்றன.

குறவஞ்சி நாடகத்திற்கான இலக்கணம் மற்றும் கதை அமைப்புடன் திருக்குற்றாலக் குறவஞ்சி இயற்றப்பட்டுள்ளது.

  • குற்றாலநாதர் திருவுலா வரும் செய்தியை கட்டியங்காரன் அறிவிக்கிறான்.
  • திருவுலா தொடங்குகிறது. மூவர் தமிழும் நான்மறைகள் முழங்கக் குற்றலாநாதர் வீதியில் உலா வருகிறார்.
  • அப்பொழுது பந்து ஆடிக்கொண்டிருந்த வசந்தவல்லி (நாயகி) திருவுலாக்காண வருகிறாள்.
  • தோழியின் வாயிலாக குற்றாலநாதரின் பெருமை அறிந்த வசந்தவல்லி இறைவன் மீது காதல்கொண்டு தோழியைத் தூதனுப்புகிறாள்.
  • இந்நிலையில் குறிசொல்லும் குறத்தி தெருவழியே வருகிறாள்.
  • தோழி அவளைக் குறிசொல்ல அழைத்தவுடன் குறப்பெண் தன்நாட்டு மலையழகையும் தங்கள் வாழ்வியலையும் பாடுகிறாள்.
  • வசந்தவல்லியின் உள்ளங்கையைப் பார்த்து அவள் குற்றாலநாதர் மீது காதல் கொண்டுள்ள செய்தியையும், வசந்தவல்லியின் எண்ணம் நிறைவேறும் என்றும் குறி சொல்லிப் பரிசு பெறுகிறாள்

கைந்நொடியிற் பொன்னிதழி மாலைவருங்காண்-இனி
கக்கத்தில் இடுக்குவாயோ வெட்கத்தை அம்மே.

  • குறத்தியின் கணவன் அவளைக் தேடிவருகிறான்.இருவரும் குற்றாலநாதரைப் பாடுகின்றனர்.

பாடல் நடை

குறத்தி மலை வளம் கூறல்

வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும்
மந்தி சிந்து கனிகளுக்கு வான் கவிகள் கெஞ்சும்
கானவர்கள் விழி எறிந்து வானவரை அழைப்பார்
கமன சித்தர் வந்து வந்து காயசித்தி விளைப்பார்
தேன் அருவித் திரை எழும்பி வானின் வழி ஒழுகும்
செங்கதிரோன் பரிக்காலும் தேர்க்காலும் வழுகும்
கூனல் இளம் பிறை முடித்த வேணி அலங்காரர்
குற்றாலத் திரிகூட மலை எங்கள் மலையே

வசந்தவல்லி பந்தாடல்

செங்கையில் வண்டு கலின்கலின் என்று
செயம் செயம் என்றாட இடை
சங்கதம் என்று சிலம்பு புலம்பொடு
தண்டை கலந்தாட இரு
கொங்கை கொடும்பகை வென்றனம் என்று
குழைந்து குழைந்தாட மலர்ப்
பைங்கொடி நங்கை வசந்த
சவுந்தரி பந்து பயின்றனளே

சிங்கன் சிங்கி உரையாடல்

இத்தனை நாளாக என்னுடன் சொல்லாமல்
எங்கே நடந்தாய்நீ சிங்கி (எங்கே நடந்தாய்நீ)
கொத்தார் குழலார்க்கு வித்தார மாகக்
குறிசொல்லப் போனனடா சிங்கா (குறிசொல்ல)
வள்ளிக் கொடியிலே துத்திப்பூப் பூப்பானேன் சிங்கி – காதில்
வங்காளத் தாரிட்ட சிங்காரக் கொப்படா சிங்கா
கள்ளிப்புப் பூத்த ததிசய மல்லவோ சிங்கி – தெற்கு
வள்ளியூ ரார்தந்த மாணிக்கத் தண்டொட்டி சிங்கா
வன்னக் குமிழிலே புன்னை யரும்பேது சிங்கி – மண்ணில்
முந்நீர்ச் சலாபத்து முத்துமூக் குத்திகாண் சிங்கா
சொருகி முடித்ததில் தூக்கண மேதடி சிங்கி – தென்
குருகையூ ரார்தந்த குப்பியுந் தொங்கலுஞ் சிங்கா
பொன்னிட்ட மேலெல்லா மின்வெட்டிப் பார்ப்பானேன் சிங்கி – இந்த
வன்னப் பணிகளின் மாணிக்கக் கல்லடா சிங்கா

சிறப்புகள்

திருக்குற்றாலக் குறவஞ்சி தமிழில் இயற்றப்பட்ட முதல் குறவஞ்சி நூல். இயற்றமிழ், இசைத்தமிழ் இரண்டும் கலந்தது. பல வகைப் பாக்களும், பாவினங்களும் கலந்த நூல். இனிய ஓசை நயமும் சிறந்த கற்பனையும் உடைய நூல்.

குறவஞ்சி நூல்களுள் மக்களால் மிக விரும்பிப் பயிலப்பட்டும், நடிக்கப்பட்டும் வந்ததால் 'திரிகூடராசப்பக் கவிராயரின் கவிதைக் கிரீடம்' என்று அழைக்கப்படுகிறது.இன்றும் நாட்டிய நாடகமாக மேடைகளில் நடிக்கப்பட்டு வருகிறது[1]."நாற்பது ஐம்பது வருஷத்துக்கு முன்பு திருநெல்வேலி மதுரைச் சீமையில் தமிழ் கற்றவர் என்றால் குற்றாலக் குறவஞ்சியைக் கல்லாதவர் இருக்கமாட்டார்கள். மந்தை நாடகத்திலும் பரதநாட்டியத்திலும் குறவஞ்சிப் பாடலைப் பாடுவது சாமான்யம். எல்லாப் பள்ளிக்கூடங்களிலுமே பாடமாக வைத்துப் பாடும்படியாகக் கற்பிப்பார்கள்" என்று டி.கே. சிதம்பரநாத முதலியார் குற்றாலக்குறவஞ்சி நூலின் பதிப்புரையில் குறிப்பிடுகிறார்[2].

நாடகச்சுவை நிரம்பிய இந்நூல் சந்த (ஓசை) நயமும், கற்பனை வளமும் கொண்ட பாடல்களைக் கொண்டது. வசந்தவல்லி பந்தாடும் பாங்கைக் கூறும் பாடல், குறத்தி மலை வளம் கூறும் பாடல், சிங்கன், சிங்கி உரையாடல்-இவை மக்கள் மிகவும் விரும்பிப் பாடும் பாடல்கள்[3] [4][5]

குறவர் குறத்தியரின் வாழ்வியல்

குற்றாலக் குறவஞ்சி குறவர், குறத்தியரின் வாழ்வியலையும், பல வரலாற்றுச் செய்திகளையும் கூறுகிறது.

குறவர்கள் வேட்டையாடும் முறை, அவர்களின் பேச்சு வழக்கு, குறத்தியர் குறி சொல்லும் முறை, அவர்களுக்கு மக்களிடம் இருந்த மதிப்பு ஆகியவை நயத்துடன் கூறப்பட்டுள்ளன.

'முருகப்பெருமானுக்கு எங்கள் மகளையும் தந்தோம், மலைகள் தோறும் குடிகொள்ள மலைகளை சீதனமாகவும் தந்தோம்' என்று தன் குலப்பெருமையை குறத்தி குறிப்பிடுகிறாள்.

ஒருகுலத்திற் பெண்கள்கொடோம் ஒருகுலத்திற் கொள்ளோம்
உறவு பிடித்தாலும் விடோம் குறவர்குலம் நாங்கள்
வெருவி வரும் தினைப்புனத்தில் பெருமிருகம் விலக்கி
வேங்கையாய் வெயில்மறைத்த பாங்குதனைக் குறித்தே
அருள் இலஞ்சி வேலர்தமக்கு ஒருபெண்ணைக் கொடுத்தோம்
ஆதினத்து மலைகளெல்லாம் சீதனமாக் கொடுத்தோம்
பரிதிமதி சூழ்மலையைத் துருவனுக்குக் கொடுத்தோம்
பரமர்திரி கூடமலை பழையமலை யம்மே.

குறத்தியர் ஆண்களுக்கு வலதுகையையும், பெண்களுக்கு இடது கையும் பார்த்து குறிசொல்லுவர். ஜக்கம்மா தேவியையும், குறளிப் பேயையும் வசப்படுத்திக் குறி கணிப்பர். மனக்குறி, உடற்குறி, கைக்குறி, விழிக்குறி, சொற்குறி போன்ற பலவகையான குறிகளை சொல்வதில் வல்லவர்களாகவும் திகழ்ந்தனர்.

மன்னவர் தமக்கு வலதுகை நோக்கி
இன்னகை மடவார்க் கிடதுகை பார்த்துக்
காலமுன் போங்குறி கைப்பல னாங்குறி
மேல்இனி வருங்குறி வேண்டுவோர் மனக்குறி
மெய்க்குறி கைக்குறி விழிக்குறி மொழிக்குறி

குறவர்கள் நரிபோல் ஒடுங்கியும், பேய்போல் தொடர்ந்தும், சிங்கம்போல் பாய்ந்தும் பறவைகளைத் துல்லியமாக வேட்டையாடிப் பிடித்தனர். இவர்கள் மனிதர்களின் தலைமுடியைக் கத்தரித்து கண்ணிகளாகத் திரித்து பொறிவைத்து பறவைகளை பிடித்தனர். வேட்டையின் போது தோலினால் செய்த முழவு என்ற கருவியை முழக்கினர். பறவைகளை அழைக்க அப்பறவைகள் போன்றே ஒலி எழுப்பினர். சிலர் மரத்தின் மீதேறி பறவைகளைக் கண்காணித்தனர்.

அவர்கள் சதா வகைக் கண்ணியை பயன்படுத்தி ஊர்க் குருவிகளையும், உள்ளான்களையும், வலியான்களையும் பிடித்தனர். முக்கூடு என்ற கண்ணியை பயன்படுத்தி கருங் குருவிகளையும், கானாங்கோழிகளையும் பிடித்தனர். பெரிய கண்களையுடைய கண்ணிகளை கீழே நெருக்கி வைத்து காக்கைகளைப் (நீர் கோழிகளை) பிடித்தனர். அதே கண்ணிகளை கீழே கவிழ்த்து வைத்து பதியச் செய்து வக்காய் பறவைகளைப் பிடித்தனர்.

அக்கண்ணியை வளைத்து சுருக்கி நன்றாய் மூடிபோட்டு பதியச் செய்து உள்ளான்களைப் பிடித்தனர்.

கலந்த கண்ணியை நெருக்கிக் குத்தினாற் காக்கை
யும்படுமே குளுவா-காக்கை யும்படுமே
மலர்ந்த கண்ணியைக் கவிழ்த்துக் குத்தினால் வக்கா
வும்படுமே குளுவா வக்கா வும்படுமே
உலைந்த கண்ணியை இறுக்கிக் குத்தினால் உள்ளா
னும்படுமே குளுவா-உள்ளா னும்படுமே"

வரலாற்றுக் குறிப்புகள்

குறத்தி குறி சொல்வதற்குமுன் இறைவன் அருள் வேண்டிப் பாடும் பாடலில்

குழல்மொழி இடத்தார் குறும்பலா உடையார்
அழகு சந்நிதி வாழ் அம்பல விநாயகா
செந்திவாழ் முருகா செங்கண்மால் மருகா
கந்தனே இலஞ்சிக் கடவுளே சரணம்
புள்ளிமான் ஈன்ற பூவையே குறக்குல
வள்ளி நாயகியே வந்தெனக்கு உதவாய்
அப்பனே மேலை வாசலில் அரசே
செப்பரு மலைமேல் தெய்வ கன்னியர்காள்
ஆரியங்காவா அருட்சொரி முத்தே
நேரிய குளத்தூர் நின்ற சேவகனே
கோல மாகாளி குற்றால நங்காய்
கால வைரவா கனதுடிக் கறுப்பா
முன்னடி முருகா வன்னிய ராயா
மன்னிய புலிபோல் வரும் பன்றிமாடா
எக்கலா தேவி துர்க்கை பிடாரி
மிக்கதோர் குறிக்கா வேண்டினேன் உங்களை.

குற்றாலத்தைச் சுற்றியுள்ள இலஞ்சி, மேலைவாசல், ஆரியங்காவு, சொரிமுத்தையன் கோயில், குளத்தூர் ஆகிய தலங்களைப் பற்றிய குறிப்புகள் உள்ளன.

சிங்கன் பாடும் பாடலில், அப்பகுதியை அக்காலகட்டத்தில் ஆட்சிபுரிந்த சொக்கம்பட்டி ஜமீந்தார் சின்னணைஞ்சாத் தேவர்

ஆலயஞ் சூழத் திருப்பணி யுங்கட்டி
  அன்னசத்தி ரங்கட்டி அப்பாலுந் தென்காசிப்
  பாலமும் கட்டிப் படித்தரஞ் சேர்கட்டிப்
  பத்த சனங்களைக் காக்கத் துசங்கட்டி
  மாலயன் போற்றிய குற்றால நாதர்
  வழித்தொண்டு செய்திடக் கச்சைகட்டிக்கொண்ட
  சீலன் கிளுவையிற் சின்னணைஞ் சேந்த்ரன்
  சிறுகால சந்தித் திருத்துப் புறவெல்லாம்

மற்றும் சில பிரமுகர்கள், ஊர்த்தலைவர்களின் பெயர்களும் அவர்கள் செய்த தர்ம காரியங்களும் குறிப்பிடப் படுகின்றன. இவை முக்கியமான வரலாற்றுக் குறிப்புகளாகும்.

உசாத்துணை

அடிக்குறிப்புகள்


✅Finalised Page