under review

தலைச்சங்காடு டி.எம். ராமநாதன்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
Line 13: Line 13:
டி.எம். ராமநாதன் பெப்ருவரி 04, 1974 அன்று நாதஸ்வரக் கலைஞர் திருவாலங்காடு டி.எஸ்.வி. பால சுப்பிரமணியம் பிள்ளை, பங்கஜம் அம்மாள் இணையரின் மூத்த மகள் ராஜகுமாரியை திருமணம் செய்து கொண்டார். டி.எம். ராமநாதன், ராஜகுமாரி தம்பதியருக்கு ஒரு மகள் அனுராதா, இரண்டு மகன்கள் - யோகேஸ்வரன், சண்முகநாதன்.
டி.எம். ராமநாதன் பெப்ருவரி 04, 1974 அன்று நாதஸ்வரக் கலைஞர் திருவாலங்காடு டி.எஸ்.வி. பால சுப்பிரமணியம் பிள்ளை, பங்கஜம் அம்மாள் இணையரின் மூத்த மகள் ராஜகுமாரியை திருமணம் செய்து கொண்டார். டி.எம். ராமநாதன், ராஜகுமாரி தம்பதியருக்கு ஒரு மகள் அனுராதா, இரண்டு மகன்கள் - யோகேஸ்வரன், சண்முகநாதன்.


(தொடர்புக்கு- தலைச்சங்காடு டி.எம்.ராமநாதன்: +91 9444247653)
(தொடர்புக்கு- தலைச்சங்காடு டி.எம்.ராமநாதன்: +91-94442 47653)


==இசைப்பணி==
==இசைப்பணி==

Revision as of 15:43, 5 August 2023

To read the article in English: Thalachangadu T.M. Ramanathan. ‎

டி. எம். ராமனாதன்

டி.எம். ராமநாதன் (தலைச்சங்காடு. எம். ராமநாதன்) (பிறப்பு: மார்ச் 02, 1951) தவில் கலைஞர். திருவிழந்தூர் ஏ.கே. வேணுகோபால் பிள்ளையின் மாணவர். திருவெண்காடு சுப்ரமணியபிள்ளை போன்றவர்களுக்கு வாசித்தவர்.

பிறப்பு, கல்வி

நன்றி இசை இனமுரசு

டி.எம். ராமநாதன் மார்ச் 02, 1951 அன்று மயிலாடுதுறை மாவட்டம் தலைச்சங்காடு கிராமத்தில் ஜி. மாரிமுத்து பிள்ளை, எம். ராஜலெட்சுமி அம்மாள் தம்பதியருக்கு பிறந்தார். டி.எம். ராமநாதனின் தந்தை ஜி. மாரிமுத்து பிள்ளை ஒரு நாதஸ்வரக் கலைஞர். உடன் பிறந்தவர்கள் ஆறு பேர், ஒரு அண்ணன், இரண்டு தம்பி, மூன்று தங்கைகள்.

டி.எம். ராமநாதன் தலைச்சங்காடு அரசு பள்ளியில் ஏழாம் வகுப்பு வரை பயின்றார். பின் கலைமாமணி திருவிழந்தூர் ஏ.கே. வேணுகோபால் பிள்ளையிடம் குருகுல கல்வி முறையில் ஆறு ஆண்டுகள் தவில் கற்றார்.

தனி வாழ்க்கை

தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்ற போது

டி.எம். ராமநாதன் பெப்ருவரி 04, 1974 அன்று நாதஸ்வரக் கலைஞர் திருவாலங்காடு டி.எஸ்.வி. பால சுப்பிரமணியம் பிள்ளை, பங்கஜம் அம்மாள் இணையரின் மூத்த மகள் ராஜகுமாரியை திருமணம் செய்து கொண்டார். டி.எம். ராமநாதன், ராஜகுமாரி தம்பதியருக்கு ஒரு மகள் அனுராதா, இரண்டு மகன்கள் - யோகேஸ்வரன், சண்முகநாதன்.

(தொடர்புக்கு- தலைச்சங்காடு டி.எம்.ராமநாதன்: +91-94442 47653)

இசைப்பணி

லண்டனில் எலிசபெத் மகாராணியுடன்
தொடக்கம்

டி.எம். ராமநாதன் ஆரம்பத்தில் தன் குரு திருவிழந்தூர் ஏ.கே. வேணுகோபால் பிள்ளையுடன் இணைந்து தவில் வாசிக்கத் தொடங்கினார். அந்நாட்களில் மணி, மாமுண்டியாப் பிள்ளை சகோதரர்களுக்கு இரண்டு ஆண்டுகள் தவில் வாசித்தார். பின் நாதஸ்வரக் கலைஞர் திருவெண்காடு சுப்பிரமணிய பிள்ளை குழுவில் இரண்டரை ஆண்டுகள் தவில் வாசித்தார். பின்னர் பன்னிரெண்டு ஆண்டுகள் இஞ்சிக்குடி பிச்சைக்கண்ணு, கந்தஸ்வாமி பிள்ளை குழுவினருடன் தவில் வாசித்தார்.

சிங்கப்பூரில்

டி.எம். ராமநாதன் 1971-ஆம் ஆண்டு சிங்கப்பூர் சென்று அங்கு சவுத் ப்ரிட்ஜ் ரோட்டில் உள்ள மாரியம்மன் கோவிலில் பதிமூன்று ஆண்டுகள் கோவில் தவில் கலைஞராக இருந்தார். நாமகிரிபேட்டை கிருஷ்ணன், வலையப்பட்டி சுப்பிரமணிய பிள்ளை குழுவினர் சிங்கப்பூர் ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் இசை நிகழ்ச்சிகாக வந்த போது அங்கே ஏற்பட்ட மனஸ்தாபத்தால் சிங்கப்பூர் வானொலி நிலையத்தில் மறுநாள் ஏற்பாடாகியிருந்த இசை நிகழ்ச்சியில் வலையப்பட்டி சுப்பிரமணிய பிள்ளை வாசிக்க மறுத்துவிட்டார். அப்போது சிங்கப்பூர் வானொலியின் தமிழ் நிகழ்ச்சி பொறுப்பாளரான க. பெருமாள், நாமகிரிபேட்டை கிருஷ்ணனிடம் வலையப்பட்டிக்கு பதிலாக டி.எம். ராமநாதனை தவில் வாசிக்க பரிந்துரைத்தார்.

கல்கத்தா ராமர் கோவிலில், அப்போதைய ஜனாதிபதி ஆர்.வெங்கட்ராமன் பங்குபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நாதஸ்வர கலைஞர் திருச்சேறை டி.வி.எஸ். சிவசுப்பிரமணியம் குழுவினருடன்
தவில் சீர்திருத்தங்கள்

டி.எம். ராமநாதன் சிங்கப்பூரில் இருந்த போது பொறையாறு வேணுகோபால் பிள்ளையிடம் தவிலில் வார் இழுத்து கட்டுவதற்கு பதிலாக நட்டு போல்ட் வைத்து இறுக்கம் செய்யும் வித்தையைக் கற்றுக் கொண்டார்.[1] பின் 1983-ல் டி.எம். ராமநாதன் இந்தியா வந்த போது நட்டு போல்ட் வைத்து இறுக்கம் செய்த தவிலை வாசிக்க ஆரம்பித்தார். ஆரம்ப காலத்தில் பொறையாறு வேணுகோபால் பிள்ளை, டி.எம். ராமநாதனின் இந்த யோசனைக்கு எதிராக எதிர்ப்பு எழுந்தாலும் பின்னாட்களில் அதனை அனைவரும் ஏற்று பயன்பாட்டில் கொண்டனர். டி.எம். ராமநாதன் 90-களில் மீண்டும் சிங்கப்பூருக்கு சென்று தர்ம முனீஸ்வரன் கோவிலில் நான்கு ஆண்டுகள் தவில் கலைஞராகப் பணியாற்றிய பின் இந்தியா திரும்பினார்.

சிறப்பு நிகழ்வுகள்

டி.எம். ராமநாதன் இந்தியா வந்த பின் தனித் தவில் கலைஞராக கச்சேரிகள் நிகழ்த்தி வருகிறார். திருச்சி அகில இந்திய வானொலி நிலையத்தில் 'ஏ-டாப்' (A-Top) கிரேட் தவில் கலைஞராக அங்கிகரிக்கப்பட்டுள்ளார்.

2002-ஆம் ஆண்டு லண்டன் நகரில் உள்ள முருகன் கோவிலுக்கு அப்போதைய இங்கிலாந்தின் ராணி எலிசபெத் வருகை தந்த போது, டி.எம். ராமநாதன், எம்.கே.எஸ். சிவா, எம்.கே.எஸ். நடராஜன் சகோதரர்கள், டி.ஜி. முத்துக்குமாரசாமி குழுவினருடன் இணைந்து கச்சேரி நிகழ்த்தினார்.அதே ஆண்டில் இலங்கை யாழ்ப்பாணத்தில் நிகழ்ந்த ஆருத்ரா தரிசனம் நிகழ்வில் தவில் வாசிப்பில் பங்கேற்றார். டி.எம். ராமநாதன் 2009-ஆம் ஆண்டு அமெரிக்காவில் ஒஹாயோ மாகாணத்திலுள்ள கிளீவ்லேண்ட் நகரத்தில் ஆண்டுதோறும் நிகழும் தியாகராஜர் ஆராதனையில் இஞ்சிக்குடி இ.எம். சுப்பிரமணியம் குழுவினருடன் இணைந்து தவில் வாசித்தார். 2018 முதல் 2022 வரை மலேசியா ஈப்போ முருகன் கோவிலில் கோவில் தவில் கலைஞராக பணியாற்றினார்.

டி.எம். ராமநாதன் தமிழகத்தில் இந்து அறநிலையத்துறை சார்பில் பழனியிலுள்ள தவில் நாதஸ்வர இசைப் பயிற்சிப் பள்ளியில் கோவில்களுக்காக தவில் வாசிக்கும் கலைஞர்களுக்கு வேதாரண்யம் வி.ஜி. பாலசுப்பிரமணியத்துடன் இணைந்து ஆறு மாத காலம் பயிற்சி வகுப்புகள் நிகழ்த்தினார்.

இணைந்து வாசித்தவர்கள்

டி.எம். ராமநாதன் இ.கே. பிச்சைக்கண்ணு பிள்ளை, நாமகிரிபேட்டை கிருஷ்ணன், திருவெண்காடு டி.பி. சுப்பிரமணியபிள்ளை, வண்டிக்கார தெரு திரு. மணி, மாமுண்டியாபிள்ளை, திருச்சேறை டி.வி.எஸ். சிவசுப்பிரமணியம், மதுரை எம்.பி.என். சேதுராமன் பிள்ளை, மதுரை பொன்னுச்சாமிப் பிள்ளை, திருப்பாம்புரம் சிவசுப்பிரமணியம் பிள்ளை, திருப்பாம்புரம் சண்முகசுந்தரம் பிள்ளை, ஷேக் சின்ன மௌலானா, ஏ.கே.சி. நடராஜன் (கிளாரினெட்) போன்ற கலைஞர்களுக்கு தவில் வாசித்துள்ளார்.

டி.எம். ராமநாதன் வலைங்கைமான் சண்முகசுந்தரம் பிள்ளை, திருச்சேறை முத்துகுமாரசாமி பிள்ளை, பெரும்பள்ளம் வெங்கடேசன் பிள்ளை, அரித்துவாரமங்கலம் பழனிவேல், திருவாளபுத்தூர் கலியமூர்த்தி, வேதாரண்யம் வி.ஜி. பாலசுப்பிரமணியம், தஞ்சாவூர் டி.ஆர். கோவிந்தராஜன், வலையப்பட்டி சுப்பிரமணியம், யாழ்ப்பாணம் சின்னராசா, யாழ்ப்பாணம் கணேசபிள்ளை போன்ற தவில் கலைஞர்களுடனும் இணைந்து வாசித்துள்ளார்.

கலை இடம்

முத்தமிழ் பேரவை விருது பெற்ற போது

தலைச்சங்காடு டி.எம். ராமநாதன் திருவிழந்தூர் ஏ.கே. வேணுகோபால் பிள்ளை குரு மரபில் முக்கியமான தவில் வித்வானாக கருதப்படுகிறார். சிங்கப்பூரிலிருந்து பொறையாறு வேணுகோபால் பிள்ளைக்கு அடுத்தப்படியாக டி.எம். ராமநாதன் கொண்டு வந்த வாரிலிருந்து நட்டு போல்ட் மாற்றம் தமிழக தவில் இசை மரபில் ஒரு முக்கியமான மாற்றமாக கலைஞர்களால் கருதப்படுகிறது. திருச்சி அகில இந்திய வானொலி நிலையத்தில் 'ஏ-டாப்' (A-Top) கிரேட் தவில் கலைஞராக அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.

விருதுகள்

  • தமிழக அரசின் ’கலைமாமணி’ விருது
  • ’லயஞான சிகாமணி’ விருது, இந்து சமய பேரவை, யாழ்ப்பாணம், இலங்கை
  • ’தவில் செல்வம்’, முத்தமிழ் பேரவை, சென்னை
  • ’கலை ஞான சிகரம்’, தென் சோழ மண்டல இசை வேளாளர் சங்கம், நாகப்பட்டினம் மாவட்டம்
  • வைதீஸ்வரன் கோவில் ’தவில் நாத பேரொளி’ விருது
  • ’இசை மாமுரசு’ விருது
  • ’லயஞான கற்பனை சுடரொளி’ விருது

உசாத்துணை

வெளி இணைப்புகள்

அடிக்குறிப்புகள்

  1. பொறையாறு வேணுகோபால் பிள்ளை அவ்வகை தவிலை சிங்கப்பூரில் முதன்முதலில் கண்டுபிடித்து பயன்பாட்டிற்குக் கொண்டு வந்தவர்


✅Finalised Page