being created

தமிழிலக்கியத்தில் அகலிகை கதை

From Tamil Wiki
Revision as of 21:46, 27 November 2022 by Navingssv (talk | contribs) (Created page with "தமிழிலக்கியத்தில் சங்க காலப் பாடல்கள் முதல் நவீன இலக்கியம் வரை அகலிகை கதை வெவ்வேறு வடிவில் உள்ளது. பரிபாடல் அகலிகை கதையை பாடும் முதல் தமிழ் செய்யுள். நவீன இலக்கியத்தில் புதும...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

தமிழிலக்கியத்தில் சங்க காலப் பாடல்கள் முதல் நவீன இலக்கியம் வரை அகலிகை கதை வெவ்வேறு வடிவில் உள்ளது. பரிபாடல் அகலிகை கதையை பாடும் முதல் தமிழ் செய்யுள். நவீன இலக்கியத்தில் புதுமைப்பித்தன் சாபவிமோசனம், அகலிகை என இரண்டு சிறுகதைகள் எழுதியுள்ளார்.

அகலிகை கதைக் கொண்ட இலக்கியங்கள்

பரிபாடல்

பரிபாடலின் பத்தொன்பதாம் பாடலை எழுதியவர் நப்பண்ணனார். திருப்பரங்குன்றம் செவ்வேளைப் பற்றியது இப்பாடல். திருப்பரங்குன்றம் கோவிலுக்கு வருபவர்கள் குகை ஓவியங்களைப் பார்க்கின்றனர். அதில் பூனையாய் மாறிய இந்திரன், அகலிகை, கவுதமர் ஆகியோரின் உருவங்களும், அகலிகை கல்லாய் மாறிய சித்திரமும் உள்ளது. இதனை ஆய்வு செய்த முனைவர் அ.கா. பெருமாள் பரிபாடல் காலத்தில் அகலிகை கதை பரவலாக அறியப்பட்ட கதையாக இருந்திருக்க வேண்டுமென கருதுகிறார். பரவலாக தெரிந்த கதையே சிற்பம் அல்லது சித்திரமாக வடிக்கும் வழக்கம் இருந்தது எனக் குறிப்பிடுகிறார்.

திருக்குறள்

அகலிகை பற்றிய செய்தி திருக்குறளில் நேரடியாகக் கூறப்படவில்லை என்றாலும் அதன் உரையாசிரியர்கள் இரண்டு பாடலுக்கு உரை எழுதும் போது அகலிகை இந்திரன் கதையை உதாரணமாக சுட்டுகின்றனர்.

நீத்தார் பெருமை என்னும் அதிகாரத்தில்,

ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்புளார் கோமான்

இந்திரனே சாலும் கரி

என்ற குறளுக்கு பரிமேலழகர் உரையில், “ஐந்து புலன்களால் உண்டாகும் ஆசைகளை ஒழித்தவனுடைய வல்லமைக்கு அகன்ற வானத்தில் உள்ள தேவர்களுக்குத் தலைவனான தேவேந்திரனே சான்று ஆவான்” என்கிறார். திருக்குறள் காலத்தால் சங்க காலத்திற்கு பிந்தையது என்பதால் குறள் இயற்றப்பட்ட காலத்தில் இந்திரன் அகலிகை கதையை சுட்டியே இப்பாடல் இயற்றப்பட்டிருக்கிறது என பிற உரையாசிரியர்களும், ஆய்வாளர்களும் கருதுகின்றனர்.

இல் விழையாமை என்னும் அதிகாரத்தில்,

எனைத்துணையர் ஆயினும் என்னாம் தினைத்துணையும்

தேரான் பிறன்இல் புகல்

என்ற குறளுக்கு பரிமேலழகர் இந்திரனையே உதாரணமாக தன் உரையில் குறிப்பிடுகிறார். பரிமேலழகர் ‘என்னாம்’ என்னும் சொல்லிற்கு இந்திரன் போல் எல்லாப் பெருமையும் இழந்து என விளக்கம் தருகிறார். பரிமேலழகருக்கு பின்னால் வந்தவர்களும் இதனை ஏற்றுக் கொள்கின்றனர். பரிமேலழகரின் காலம் பொ.யு. 11 ஆம் நூற்றாண்டு. இக்காலத்திலும் அகலிகை கதை செவ்விலக்கியங்களில் செல்வாக்குடன் இருந்திருப்பதை இதன் மூலம் அறிய முடிகிறது.

கம்ப ராமாயணம்

கம்ப ராமாயணத்தின் பால காண்டத்தில் அகலிகையின் கதை வருகிறது. விசுவாமித்திரரின் யாகத்திற்கு தடையாக வந்த தாடகையை வதம் செய்த ராமலட்சுமணர் கங்கையில் நீராடிவிட்டு விசால நகரத்திற்கு வருகின்றனர். மறுநாள் வைதேக நாட்டின் தலைநகரான மிதிலைக்கு வரும் போது விசால நகரத்திற்கும், மிதிலை நகரத்திற்கும் இடையில் காட்டில் கவுதமரின் ஆசிரமம் இருக்கிறது.

காட்டில் வழி வந்த ராமன் கவுதமரின் ஆசிரமத்தை காண்கிறான். அதில் மனிதர்கள் யாரும் இல்லாததைக் கண்டு விசுவாமித்திரரிடம் ஆசிரமத்தின் வரலாற்றைக் கேட்கிறான். ராம லட்சுமண சகோதிரர்களுக்கு விசுவாமித்திரர் அகலிகையின் கதையை சுருக்கமாகச் சொல்கிறார்.

கம்பனின் ராமாயணத்தில் அகலிகை வந்திருப்பது தேவருக்கு அரசன் என்று தெரிந்தே உடலுறவு கொள்கிறாள். அதன் பின் இந்திரனின் உயரை காப்பாற்றிக் கொள்ளும் படி அகலிகை சொல்கிறாள். இந்திரன் காட்டில் எதிர்செல்லும் போது கவுதமர் நடந்ததை அறிகிறார். தன் வடிவில் வந்த இந்திரனைப் பார்த்து, ‘செய்யதகாத காரியத்தை செய்த நீ நபும்சகனாய்ப் போவாய்’ என சாபமிடுகிறார். பின் அகலிகையை பார்த்து, ‘நீ காற்றை உணவாகக் கொண்டு சாம்பல் மேல் படுத்து யார் கண்ணுக்கும் தென்படாமல் நீண்ட காலம் மறைந்து இருப்பாய். ஒரு நாள் தசரதனின் மகன் வருவான். அவன் கால் பட்டதும் நீ சாபம் தீர்ந்தவள் ஆவாய்’ எனச் சொல்லி இமயமலைக்குச் செல்கிறார்.

இக்கதையை கேட்ட ராமன் கவுதமரின் ஆசிரமத்துக்குள் காலை வைத்தான். அகலிகையின் சாபம் தீர்ந்து மீண்டும் பேரழகுடன் எழுந்து நின்றாள். ராம, லட்சுமணர் இருவரும் அவள் பாதங்களைத் தொட்டு வணங்கினர்.

கம்ப ராமாயணத்தில் அகலிகை கதை மூன்று இடத்தில் வருகிறது. பால காண்டம் அகலிகை படலத்தில் பதினேழு பாடல்களில் கதை வருகிறது. மாமன் மாரீசன் இராவணனிடம் சீதையை கவர்ந்து சிறைவைத்தது தவறு என அறிவுரை கூறும் போது,

அந்தர முற்றான் அகலிகை பொற்பால் அழிவுற்றார்

இந்திர னொப்பார் எத்தனையோர் தாம் இழிவுற்றார்

என்கிறார். இது மாரீசன் வதைப்படலத்தில் வரும் பாடல்.

மாயாசனக படலத்திலும் அகலிகை பற்றிய கதை வருகிறது. அசோகவனச் சிறையிலிருந்த சீதையிடம் தன்னை ஏற்றுக்கொள்ளுமாறு ராவணன் கேட்கிறான். அப்போது ராவணன்,

அந்தரம் உணரின் மேனாள் அகலிகை என்பாள் காதல்

இந்திரன் கரத்தைப் புல்லி எய்தினாள் இழுக்குற்றாளே என்கிறான். ராவணன், அகலிகை இந்திரனை தழுவியதால் மாசடையவில்லை எனவே சீதையும் தன்னை ஏற்றுக் கொள்ளலாம் எனக் குறிப்பிடுகிறான்.

பத்மபுராணம்

பத்ம புராணத்தில் இந்திரன் தன்னை விரும்புவது அறிந்த அகலிகை தன் மாய வடிவத்தை அனுப்புவதாக கதை வருகிறது. அகலிகை ஆசிரமத்திலேயே இருக்கிறாள். அவளின் தவத்தால் மாயை இந்திரனிடம் செல்கிறாள். வான்மீகியின் யதார்த்தம் குறைந்து பெண்ணின் கற்பு வலியுறுத்தப்பட்ட காலத்தில் வாய் மொழி மரபில் இக்கதை தோன்றியிருக்காலம் என ஆய்வாளர் அ.கா. பெருமாள் கருதுகிறார்.

அகலிகை வெண்பா

கம்பனுக்கு பின் வெள்ளைக்கால் ப. சுப்பிரமணிய முதலியார் எழுதிய அகலிகை வெண்பா என்னும் நூலில் இந்திர காண்டம், அகலிகை காண்டம், கவுதமர் காண்டம் என்னும் மூன்று காண்டங்கள் கொண்ட 282 வெண்பாக்கள் வருகிறது.

வெள்ளைக்கால் ப. சுப்பிரமணிய முதலியார் வெண்பா ராமாயணக் கதை நிகழ்த்துபவர்களின் பேச்சுகளையும் அடிப்படையாகக் கொண்டு இயற்றப்பட்டது. முதலியார் அகலிகையின் வரலாற்றை அவளது பிறப்பிலிருந்து தொடங்கிப் பாடுகிறார். பாற்கடலில் பிறந்த அகலிகையை இந்திரன் தனக்கு வேண்டும் என்றான், கவுதம முனிவரும் தனக்கு வேண்டுமென  கோரினார். அகலிகை யாருக்கு உரியவள் என கன்னியாசுல்கம் வழி முடிவு செய்யலாம் என பிரம்மா உத்தரவிடுகிறார். பிரம்மா, “கங்கை நதியின் ஆழமான பகுதியில் யார் நீண்ட நேரம் மூழ்கி இருக்கிறாரோ அவரே அகலிகைக்கு உரியவர்” என நிபந்தனை விடுத்தார். அதனை இந்திரன் மறுத்ததால் இரண்டு தலையுள்ள பசுவை யார் முதலில் பார்க்கிறாரோ அவரே அகலிகையை உரிமை கொண்டாட முடியும் என பிரம்மா சொன்னார். இதற்கு ஒப்புக் கொண்ட இந்திரன் மேகத்தின் மேல் ஏறி இருதலைப் பசுவைத் தேட ஆரம்பித்தான். கவுதமர் நாரதரிடம் சென்று வழி கேட்டார். நாரதர் கவுத்தமரை மாட்டு பண்ணை ஒன்றிற்கு அழைத்துச் சென்று அங்கு கன்று ஈனும் தருணத்தில் இருந்த பசுவின் முன் நிற்கச் சொன்னார். பசுவின் யோனியிலிருந்து குட்டியின் முகம் முதலில் வெளிவரும் போது பசுவை வலம் வரும்படி சொன்னார். தன் நிபந்தனையை முதலில் இயற்றிய கவுதமருக்கு அகலிகையை மனம் செய்து வைத்தார் பிரம்மா.


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.