ஜி. நாகராஜன்

From Tamil Wiki

ஜி. நாகராஜன் (செப்டெம்பர் 1, 1929 – ஃபெப்ரவரி 19, 1981) நவீனத்துவம் தமிழுக்கு உருவாக்கியளித்த முக்கியமான கலைஞர். இவர் எழுத்துக்கள் அடித்தள இருள் உலகை நோக்கிச் செல்லும் பார்வை கொண்டது. அது மனிதர்கள் மேல் அவநம்பிக்கையும் கசப்பின் சிரிப்பும் கொண்டது. எழுதியது கொஞ்சம்தான் என்றாலும் அசலான புனைவுக்கலைஞன். கம்பீரமான உடல்மொழி கொண்டவர்.

பிறப்பு, கல்வி

ஜி.நாகராஜன், செப்டெம்பர் 1, 1929 அன்று தன் பெற்றோரின் ஒன்பது குழந்தைகளில் ஏழாவதாக மதுரையில் பிறந்தார். மதுரை அருகிலுள்ள திருமங்கலத்தில் பி.கே.என். பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு வரையிலும், பின் பழனியில் 10 மற்றும் 11 வகுப்புகளையும் முடித்தார். மதுரைக் கல்லூரியில் படித்தபோது கணிதத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுத்து சர் சி.வி. ராமனிடமிருந்து தங்கப் பதக்கம் பெற்றார். மதுரைக் கல்லூரியில் இளங்கலை, முதுகலை படித்துத் தேர்ச்சி பெற்றார்.

தனிவாழ்க்கை

ஜி. நாகராஜன் 1959ல் ஆனந்தாவை மணந்தார். ஆனந்தா தீ விபத்தில் இறந்து போனதால், 1962ல் நாகலட்சுமி என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இவருக்கு இரண்டு குழந்தைகள் இருந்தனர். காரைக்குடியில் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றினார். அதன் பிறகு சென்னை கணக்காயர் அலுவலகத்தில் சிறிது காலம் பணியாற்றி, பின்னர் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றினார்.

இலக்கிய வாழ்க்கை

1963-ல் தனது 'பித்தன் பட்டறை' வெளியீட்டகம் மூலம் குறத்தி முடுக்கு நாவலை வெளியிட்டார். நாட்டில் நடப்பதை தான் விரும்பும் அளவு சொல்லமுடியவில்லை என்று வருத்தம் கொண்டார்.

எழுத்தாளர்கள், எழுத்திலும் கூட தொடத்தயங்கிய பாத்திரங்களை யதார்த்தத்துடன் படைத்தளித்தவர் நாகராஜன். விலைமாது, பிட்பாக்கெட்கள்,திருடர்கள் என அவரின் படைப்புலகம் உலக வாழ்வின் இருண்ட முகங்களை அவைகளின் அறங்களுடன் காட்சிப்படுத்தியது.

விருதுகள்

நூல்கள்

நாவல்கள்

குறத்தி முடுக்கு', 'நாளை மற்றும் ஒரு நாளே' ஆகிய இரண்டு குறு நாவல்களும் 17 சிறுகதைகளுமே எழுதியுள்ளார். அதே போல ஆங்கிலத்தில் கட்டுரைகளும், ஒரு புத்தகமும் எழுதியுள்ளார்.

  • குறத்தி முடுக்கு 1963
  • நாளை மற்றும் ஒரு நாளே 1974
சிறுகதைகள்
  • எங்கள் ஊர்
  • டெர்லின் ஷர்ட்டும் எட்டுமுழ வேட்டியும் அணிந்த மனிதர்
  • யாரோ முட்டாள் சொன்ன கதை
  • தீராக் குறை
  • சம்பாத்தியம்
  • பூர்வாசிரமம்
  • அக்கினிப் பிரவேசம்
  • நான் புரிந்த நற்செயல்கள்
  • கிழவனின் வருகை
  • பூவும் சந்தனமும்
  • ஜீரம்
  • போலியும் அசலும்
  • துக்க விசாரனை
  • மனிதன்
  • இலட்சியம்
  • ஓடிய கால்கள்
  • நிமிஷக் கதைகள்