ச. பவானந்தம் பிள்ளை

From Tamil Wiki

This page is being created by ka. Siva

ச. பவானந்தம் பிள்ளை (1876 - 1932), தமிழறிஞர், திவான் பகதூர் பட்டம் பெற்ற காவலதிகாரி, பவானந்தர் கழகத்தின் நிறுவனர்.

பிறப்பு மற்றும் இளமை

ச. பவானந்தம் பிள்ளை,  தஞ்சாவூர்  மாவட்டம்  கருந்தட்டாங்குடியில் முத்துசாமிப் பிள்ளை, சந்திரமதி ஆகியோரின் மகனாக 1876 - ஆம் ஆண்டு பிறந்தார். சரவண பவானந்தம் பிள்ளை என்பது இவரின் இயற்பெயராகும். இளமைக் கல்விக்குப் பிறகு சட்டம் படிக்க இங்கிலாந்து செல்ல விரும்பிய ச. பவானந்தம் பிள்ளையை தாய் தடுத்தமையால் 1899- ஆம் ஆண்டு  காவல்துறைப் பணியில் இணைந்தார். 1908- ஆம் ஆண்டு உதவி ஆணையராகவும் (Assistant Commissioner), 1918 இல் காவல்துறையின் சென்னைத் துணை ஆணையராகவும் (Deputy Commissioner) பணியாற்றியவர். இவர்தம் கடமையுணர்வையும், ஒழுங்கினையும் கருதி, ஆங்கிலேய அரசு இவருக்கு "ராவ் பகதூர்" மற்றும் "திவான் பகதூர்" என்ற பட்டங்களை வழங்கியது.

மாட்சிமை தங்கிய வேல்ஸ் இளவரசரும் இளவரசியாரும் சென்னைக்கு வருகை புரிந்தபோது (1906 வருடம் ஜனவரி மாதம் 24-28 தேதி) அவர்களுக்கு மெய்காப்பாளராயிருக்கும் பொறுப்பை ஏற்று ச. பவானந்தம் பிள்ளை திறம்படச் செயலாற்றியதற்கு வியந்து இளவரசர் தம் திருக்கரத்தாலேயே 'விசேட விருதுப் பதக்கம்' ஒன்றை இவருக்கு அளித்தார். மிண்டோ பிரபுவும், ஹார்டிஞ்சு பிரபுவும் சென்னையில் தங்கியிருந்த போதும் இவரே அவர்களுக்கு மெய்காப்பாளராயிருந்து செயலாற்றினர்.

பவானந்தர் கழகம் உருவாக்கம்

ச. பவானந்தம் பிள்ளை,  தமிழறிவுடன் ஆங்கில அறிவும் பெற்றவர். அப்போது பதிப்பிக்கப்படாத பல நூல்களை பதிப்பிக்க வேண்டும் என்ற எண்ணத்தை செயல்படுத்த சென்னை வேப்பேரியில்   பவானந்தர் கழகத்தை (Bavanantham Academy) உருவாக்கினார்.  பவானந்தர் கழகம் சார்பில் பேரகத்திய விருத்தி, தொல்காப்பியம் – பேராசிரியர், நச்சினார்க்கினியர் உரை, யாப்பருங்கல விருத்தியுரை, இராமானுச கவிராயர் சங்கர நமச்சிவாயப் புலவர் சிவஞான முனிவர் முதலிய உரையாசிரியர்களின் உரைகளைத்தழுவி எழுதப்பட்ட நன்னூல் காண்டிகையுரை , வீரசோழியம், நம்பியகப்பொருள், இறையனார் களவியல் உரை ஆகிய நூல்கள் தரமான அச்சில் பதிப்பிக்கப்பட்டுள்ளன. இந்த முயற்சியில் பவானந்தருக்கு அறிஞர் குழு ஒன்று துணைசெய்தது. அக்குழுவில் கா.ரா.கோவிந்தராச முதலியார், மே.வீ. வேணுகோபாலப்பிள்ளை உள்ளிட்டோர் இடம்பெற்றிருந்தனர். நாடகவியல் விளக்கம், பரதசாத்திர விளக்கம், வேதாந்த சித்தாந்த தத்துவ ஞானம், நீதிக் கவித்திரட்டு முதலிய நூல்களையும் ச. பவானந்தம் பிள்ளை  எழுதியுள்ளார். சட்டத் தேர்வுக்குப் பயன்படும் வகையில் முப்பதுக்கும் மேற்பட்ட நூல்களை ச. பவானந்தம் பிள்ளை வெளியிட்டுள்ளார்.  அரிச்சந்திரன், காணாமற் போன கணையாழி, பாதுகா பட்டாபிசேகம், சகுந்தலை உள்ளிட்ட நூல்களையும் வெளியிட்டுள்ளார். தற்கால சொல்லகராதி நூலைத் தொகுத்துள்ளார்.

தற்போதும் சென்னை, வேப்பேரி   தௌடன் பேருந்து நிலையத்தின் அருகில் உள்ள இந்நூலகத்தில்  நாற்பதாண்டுகளாக ச. பவானந்தம் பிள்ளை சேமித்த நூல்கள், ஓலைச்சுவடிகள், கையெழுத்துப்படிகள் பாதுகாக்கப்படுகின்றன

நூல்கள்

  • பவானந்தர் வெளியிட்ட நூல்களுள் சில
  • நன்னூல் காண்டிகையுரை
  • வீரசோழியம்
  • நம்பியகப்பொருள்
  • இறையனார் களவியல் உரை
  • நாடகவியல் விளக்கம்
  • பரதசாத்திர விளக்கம்
  • வேதாந்த சித்தாந்த தத்துவ ஞானம்
  • நீதிக் கவித்திரட்டு
  • அரிச்சந்திரன்
  • காணாமற் போன கணையாழி
  • பாதுகா பட்டாபிசேகம்
  • சகுந்தலை

மறைவு

ச. பவானந்தம் பிள்ளை பிள்ளை 20.05.1932 அன்று  இயற்கை எய்தினார்.

உசாத்துணை

  • தமிழ் வளர்த்த பெருமக்கள், என். ஸ்ரீனிவாசன், அல்லயன்ஸ் நூற்றாண்டு வெளியீடு
  • திவான் பகதூர் சரவண பவானந்தம் பிள்ளை, தமிழ் இணையக் கல்விக் கழகம் ; https://www.tamilvu.org/ta/library-l0G00-html-l0G00v11-120174
  • தொல்காப்பியம், பொருளதிகாரம், நச்சினார்க்கினியம், தமிழ் மின் நூலகம்; https://www.tamildigitallibrary.in/book-detail?id=jZY9lup2kZl6TuXGlZQdjZQ8jZQy&tag=%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%2C+%E0%AE%A8%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%2C+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2+%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88+%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D