செய்யிது ஆசியா உம்மா

From Tamil Wiki
Revision as of 07:48, 8 February 2022 by Jeyamohan (talk | contribs) (Created page with "செய்யிது ஆசியா உம்மா (பொயு 1868- 1948) கீழக்கரையில் வாழ்ந்த இஸ்லாமிய மதஞானி. சூஃபி மரபில் வந்தவர். சூஃபி இலக்கியங்களை படைத்தவர் == பிறப்பு, இளமை == ஹபீபு அரசர் என்று புகழப்பட்ட ஹபீபு மரை...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

செய்யிது ஆசியா உம்மா (பொயு 1868- 1948) கீழக்கரையில் வாழ்ந்த இஸ்லாமிய மதஞானி. சூஃபி மரபில் வந்தவர். சூஃபி இலக்கியங்களை படைத்தவர்

பிறப்பு, இளமை

ஹபீபு அரசர் என்று புகழப்பட்ட ஹபீபு மரைக்காயரின் இளைய சகோதரரின் பேர்த்தி ஆசியா உம்மா. தந்தை பெயர் ஹபீபு முகம்மது மரைக்காயர். ஆசியா உம்மாவின் மூதாதையர்கள் எட்டையபுர மன்னர்களுடன் நெருக்கமான நட்புறவு கொண்டிருந்தனர். இவருடைய குடும்ப முன்னோர்களில் ஒருவரான ஹபீபு அரசர் சவூதி அரேபியாவின் ஜித்தா நகருக்கும் புனித மக்காவுக்கும் இடையே கிணறு தோண்டியது சிறப்புக்குரியதாக நினைவுகூரப்படுகிறது. சேதுபதி மன்னரின் அனுமதியுடன் கீழக்கரையில் 1754-ம் ஆண்டில் டச்சுக்காரர்களால் கட்டப்பட்ட வர்த்தகப் பண்டகசாலை ஆசியா உம்மாவின் முன்னோர்களுக்குச் சொந்தமானது. அவர்கள் பல கப்பல்களுக்கு உரிமையாளர்களாக இருந்து கடல் வணிகத்தில் முனைந்திருந்தனர்.

ஆன்மிக வாழ்க்கை

ஆசியா உம்மா கீழக்கரையில் வாழ்ந்த கல்வத்து நாயகம் சையிது அப்துல் காதிர் அவர்களின் முதன்மைச் சீடரானார். பெரும்பாலும் இறைத்தியானம், தொழுகை ஆகியவற்றில் ஈடுபட்டு வீட்டுமாடியில் தனிமையாகக் காலத்தைச் செலவிட்டார். அதனால் ‘மேல்வீட்டுப் பிள்ளை’ என்ற செல்லப்பெயர் சூட்டி அழைத்தார்கள். புனித ஹஜ் கடமையை ஆற்றினார்

இலக்கியவாழ்க்கை

ஆசியா உம்மா பாடிய பாடல்கள் மெய்ஞான தீப இரத்தினம், மாலிகா இரத்தினம் ஆகிய தொகுப்புளாக வெளிவந்துள்ளன. கண்ணி, விருத்தம், துதி, இன்னிசை, ஆனந்தக்களிப்பு, கும்மி, வெண்பா, பதிகம், மாலை, தாலாட்டு ஆகிய வழிவங்களில் பாடல்களைப் பாடியுள்ளார். மகான் ஆரிபு நாயகர், நாகூர் ஷாகுல் ஹமீது நாயகர், குணங்குடி மஸ்தான் சாகிபு, இமாம் கஸ்ஸாலி முதலானோரைச் சிறப்பிக்கும் கருப்பொருளைக் கொண்ட பாடல்களை எழுதினார். அல்லாஹ்வின் 99 பெயர்களைச் சிறப்பிக்கும் அஸ்மாவுல் ஹூஸ்னா முனாஜாத்தும், 99 நாமங்கள் எனும் மற்றொரு பாடல் தொகுப்பும் உள்ளன

ஆசியா உம்மா தமது குடும்ப முன்னோர்களின் திருப்பணிகளைச் சிறப்பித்து பாடல்கள் இயற்றினார். ஹபீபு அரசர் மாலை, கல்வத்து நாயகம் முனாஜாத்து, கல்வத்து நாயகம் துதி, கல்வத்து நாயகம் இன்னிசை, பல்லாக்கு தம்பி முனாஜாத்து, பல்லாக்கு ஒலி துதி ஆகியவை குறிப்பிடத்தக்கவை

ஆசியா உம்மா இயற்றிய ஞான ரத்தினக் கும்மி 110 கண்ணிகளைக் கொண்டது. ஞானத்தை ஒரு பெண்ணாக உருவகப்படுத்தி தனது முன்னால் நிறுத்தி, ‘ஞானப் பெண்ணே’ என அழைத்துப் பாடும் கும்மிப் பாடல்கள் இவை.

கருத்தை உன்னிலே தான் அடைத்து

இறைக் காதலே மிக ஆசை கொண்டால்

பொருந்தும் பூலோக வானலோகம் எல்லாம் புகழாம் இரத்தின ஞானப் பெண்ணே!

அரபு மொழி வரிவடிவத்தில் தமிழ்ச் சொற்களை எழுதும் அரபுத் தமிழ் மரபில் ஆசியா உம்மா தன் பாடல்களை எழுதினார்

நூல்கள்

  • மெய்ஞான தீப இரத்தினம்
  • மாலிகா இரத்தினம்
  • 99 நாமங்கள்
  • அஸ்மாவும் ஹூஸ்லா முனாஜாத்
  • ஞானரத்தினக்கும்மி
  • ஹபீபு அரசர் மாலை
  • கல்வத்து நாயகம் முனாஜாத்து
  • கல்வத்து நாயகம் துதி
  • கல்வத்து நாயகம் இன்னிசை
  • பல்லாக்கு தம்பி முனானாத்து
  • பல்லாக்கு ஒலி துதி

மறைவு

ஆசியா உம்மா எண்பது வயதில் 1948-ஆம் ஆண்டில் கீழக்கரையில் காலமானார், குடும்ப முன்னோர் ஹபீப் அரசரின் நினைவு வளாகத்தில் அவர் அடக்கம் செய்யப்பட்டார்.ஆசியா உம்மாவின் பேத்தி அகமது மரியத்தின் முயற்சியினால் மெய்ஞ்ஞானத் தீப இரத்தினம் நூல் அச்சிடப்பட்டது,

உசாத்துணை

https://www.hindutamil.in/news/spirituals/70112--1.html