under review

செம்பருத்தி

From Tamil Wiki
Revision as of 14:42, 3 July 2023 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected text format issues)
செம்பருத்தி

செம்பருத்தி (1968) தி.ஜானகிராமன் எழுதிய நாவல். மூன்று பெண்களுக்கும் ஓர் ஆணுக்குமான வெவ்வேறுவகையான உறவுகளை உளவியல் பார்வையுடன் ஆராய்ந்தது.

எழுத்து, வெளியீடு

செம்பருத்தி சாவி ஆசிரியராக இருந்த தினமணி கதிர் இதழில் 1968-ம் வருடம் தொடராக வந்தது. முதல் பதிப்பை 1968-ல் ஐந்திணை பதிப்பகம் வெளியிட்டது. 2003-ல் காலச்சுவடு செம்பதிப்பாக வெளிவந்தது.

கதைச்சுருக்கம்

சட்டநாதன் குடும்பத்தின் மூன்றாவது பிள்ளை. அவனது ஆசிரியர் தாண்டவ வாத்தியாரின் மகளான குஞ்சம்மாளை காதலிக்கின்றான். அவள் அவனது இரண்டாவது அண்ணன் முத்துசாமிக்கு மணமுடிக்கப் படுகின்றாள். முத்துசாமி இறந்து போகின்றான். சட்டநாதனுக்கு முத்துசாமி பார்த்து வைத்திருந்த பெண் புவனாவுடன் திருமணம் நடக்கின்றது. அண்ணன் முத்துசாமியின் கடையையும் நடத்த ஆரம்பிக்கின்றான்.புவனா அவனுக்கு நல்ல துணையாக, அனைவரையும். அரவணைத்துச் செல்பவளாக இருக்கிறாள். குஞ்சம்மாள் சட்டநாதனை பார்த்துக்கொண்டு இருந்தால் மட்டும் போதும் என புகுந்த வீட்டில் இருந்துவிடுகிறாள். வாழ்ந்து நொடித்த பெரியண்ணன் குடும்பமும் வந்து சேர்கிறது. பெரிய அண்ணி நிறைவற்று, அனைவரின் மேலும் வெறுப்பை அள்ளிக்கொட்டிகொண்டிருப்பவர். இந்த மூன்று பெண்களுக்கும் சட்டநாதனுக்குமான வெவ்வேறு வகை உறவுகள் வழியாக நகரும் கதை குஞ்சம்மாள் புவனாவுக்குத் தன் காதல் முன்னமே தெரியும் என அறியும்போது உச்சமடைகிறது. அந்த சிறு அந்தரங்கம் கூட தனக்கு இல்லையா என சீற்றத்துடன் குஞ்சம்மா சட்டநாதனை விட்டு விலகி மணமான தன் மகளுடன் சென்றுவிடுகிறாள். புவனா நாற்பது கடந்த வயதுக்குரிய உளச்சிக்கல்களால் சட்டநாதனை வதைத்து பின் கனிவடைகிறாள். பொதுவுடமைவாதி நண்பர் சீதாபதியின் நட்பு தம்பதியர் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. வெவ்வேறு காலகட்டங்களூடாகச் சொல்லும் இந்நாவல் 'கணவன் மனைவிக்கிடையே ஒளிவு மறைவும் தேவைதானோ? அர்த்தநாரீஸ்வரனாலேயே தன் இணையுடன் இரண்டறக் கலக்க முடியவில்லையே?' என்ற கேள்வியுடன் முடிகிறது.

கதை மாந்தர்

  • சட்டநாதன் - மூன்று சகோதரர்களில் இளையவன்
  • புவனா-சட்டநாதனின் மனைவி
  • முத்துசாமி-சின்ன அண்ணன்
  • குஞ்சம்மா-சின்ன அண்ணி
  • பெரிய அண்ணன்- வாழ்ந்து கெட்டவர்
  • பெரிய அண்ணி
  • சண்பகவனம்-புவனாவின் தந்தை
  • ஆண்டாள்-பெரியண்ணனின் காதலி
  • சீதாபதி-பொதுவுடமைவாதி, சட்டநாதனின் நண்பர்

இலக்கிய இடம்

செம்பருத்தி தி.ஜானகிராமனின் நாவல்களில் மோகமுள், அம்மா வந்தாள் ஆகிய இருநாவல்களுக்கும் அடுத்தபடியாக வைக்கப்படுகிறது. இதன் தொடக்கப்பகுதிகளில் இருந்த ஒருமை மெல்லமெல்ல இல்லாமலாகி அங்குமிங்கும் நாவல் இலக்கின்றி செல்கிறது. தொடர்கதையாக எழுதப்பட்டதன் விளைவு அது. புவனா, குஞ்சம்மாள், பெரிய அண்ணி எனும் மூன்று பெண்களின் குணச்சித்திரங்களையும் அவர்களுக்கிடையேயான உறவின் சில தருணங்களையும் நுட்பமாக படைத்திருப்பதனால் இந்நாவல் இலக்கியப் படைப்பாக கருதப்படுகிறது. ஆனால் பாதிக்குமேல் மிக மேலோட்டமான உரையாடல்களாகவே நாவல் நீள்கிறது. காமம் சார்ந்த தருணங்களை உருவாக்கியபடியே செல்கிறார் ஆசிரியர். நாவலின் பேசுபொருளுக்கு அப்பால் மேலோட்டமான ஓர் அரசியல்களமும் இந்நாவலுக்கு இருக்கிறது. இலக்கியப்படைப்பாக ஆகும் நாவலுக்கு இருந்தாகவேண்டிய தேடலும், அதன்விளைவான ஒருமையும் அமையவில்லை. குஞ்சம்மாளின் காதல் சட்டென்று குரோதமாக ஆகும் உச்சத்தால் இலக்கியத்தன்மையை அடைகிறது. தி.ஜானகிராமன் வெவ்வேறு நாவல்களில் ஒரேவகை பெண் கதாபாத்திரங்களை மீண்டும் மீண்டும் உருவாக்குகிறார் என எழுத்தாளர் ஜெயமோகன் குறிப்பிடுகிறார். ’அம்மா வந்தாளின் இந்து தான் குஞ்சம்மாள், அலங்காரத்தம்மாள்தான் பெரிய அண்ணி, ஒரு சிறிய காட்சியில் தோன்றி மறையும் பெண் (அப்புவிற்கு அவனது அப்பா பார்த்து வைத்திருக்கும் பெண்)தான் புவனா’ என்று குறிப்பிடுகிறார்.சென்ற நூற்றாண்டின் வாழ்க்கையை தி.ஜா. நளபாகத்தைவிடவும் துல்லியமாக, விவரமாக மோகமுள்ளிலும் செம்பருத்தியிலும் அம்மா வந்தாளிலும் பதிவு செய்திருக்கிறார்" என்று சாரு நிவேதிதா குறிப்பிடுகிறார்.

உசாத்துணை


✅Finalised Page