சுஷில்குமார்

From Tamil Wiki

சுஷில்குமார் (ஜனவரி 1, 1984) தமிழில் எழுதிவரும் எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர். நாஞ்சில் நாட்டைக் கதைகளமாகக் கொண்டு அதன் மக்கள், வாழ்க்கை, நம்பிக்கைகள், தொன்மங்கள் பற்றிய சிறுகதைகளை எழுதி வருகிறார். வரலாற்றுச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டும், கல்வித்துறை சார்ந்து நிகழும் நுட்பமான கூறுகளைச் சார்ந்தும் கதைகளை எழுதுகிறார்.

தனிவாழ்க்கை

சுஷில்குமார் ஜனவரி 1, 1984ம் ஆண்டு எஸ்.கே.கோபால் மற்றும் விஜயா தம்பதியினருக்கு இரண்டாவது மகனாக நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டத்தில் பிறந்தார். தொடக்கக் கல்வியை அரசுப்பள்ளி கன்னியாகுமரியிலும், மேல் நிலைக்கல்வியை அரசு மேல் நிலைப்பள்ளி கொட்டாரத்திலும் பயின்றார். 2001-2004ம் ஆண்டு கணிப்பொறி அறிவியல் பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றார். பின்னர் 2005-2007 ஆண்டுகளில் இந்திரா காந்தி தேசிய திறந்த நிலைப் பல்கலைக்கழகத்தின் வழி எம்.சி.ஏ பட்டம் பெற்றார். இந்த ஆண்டுகளில் அவர் ஏர்டெல் நிறுவனத்தில் வாடிக்கையாளர் சேவைப் பிரிவிலும், மைக்ரோ சாஃப்ட் நிறுவன தொழில் நுட்ப சேவைப்பிரிவிலும் பணியாற்றினார். 2009 -ல் கோவை பி.எஸ்.ஜி கல்லூரியில் கணிப்பொறி அறிவியல் பிரிவில் எம்.பில் பட்டம் பெற்றார். 2010 முதல் ஈஷா வித்யா கிராமப் பள்ளியில் ஆசிரியர் பயிற்சியாளராக பணிபுரிந்து வருகிறார். மனைவி பகவதி. மகள்கள் இஷா பாரதி மற்றும் ஸ்ரீஷா பாரதி.

இலக்கியவாழ்க்கை

சுஷில்குமாரின் முதல் சிறுகதைத்தொகுப்பு “மூங்கில்” 2021 ஜனவரியில் வெளிவந்தது. இரண்டாவது சிறுகதைத் தொகுப்பான “சப்தாவர்ணம்” 2021 டிசம்பரில் வெளிவந்தது. இவருடைய சிறுகதைகள், மொழிபெயர்ப்புக் கட்டுரைகள், மொழிபெயர்ப்பு சிறுகதைகள் தமிழினி, யாவரும், கனலி, வனம், பதாகை போன்ற தமிழ் மின்னிதழ்களில் வெளிவந்துள்ளது. ராகுல் ஆல்வரிஸின் “Free From school” புத்தகத்தை தமிழில் “தெருக்களே பள்ளிக்கூடம்” என்ற மொழிபெயர்ப்புப் புத்தகமாக தன்னறம் பதிப்பகத்தின் மூலமாக வெளியிட்டுள்ளார். 2021 விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் சார்பில் விருந்தாளராகக் கலந்து கொண்டு வாசகர்களுடன் உரையாடினார்.

படைப்புகள்

சிறுகதைத் தொகுப்பு

  • மூங்கில் – ஜனவரி 2021
  • சப்தாவர்ணம்- டிசம்பர் 2021

மொழிபெயர்ப்பு

  • தெருக்களே பள்ளிக் கூடம் – 2021

விருதுகள்

யாவரும் பதிப்பகம் நடத்திய 'க.நா.சு நினைவு சிறுகதைப் போட்டியில்' தேர்வான பரிசுக்குரிய பத்து சிறுகதைகளில் சுஷில்குமாரின் “பட்டுப்பாவாடை” சிறுகதையும் தேர்வானது.

இணைப்புகள்