being created

சுபமங்களா

From Tamil Wiki
Revision as of 20:40, 1 October 2022 by ASN (talk | contribs) (Page created; Para Added, Link Created; Image Added)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
சுபமங்களா - பிப்ரவரி 1991 இதழ்

சுபமங்களா மாத இதழ், ஶ்ரீராம் நிறுவனத்தால் 1988-ல் தொடங்கப்பட்டது. அனுராதா ரமணனின் ஆசிரியத்துவத்தில் பெண்களுக்கான இதழாக ஜனவரி 1991 வரை வெளிவந்தது. பிப்ரவரி 1991-ல் கோமல் சுவாமிநாதன் ஆசிரியர் பொறுப்பேற்றார். அது முதல் டிசம்பர் 1995 வரை அது ஓர் இலக்கிய இதழாக வெளிவந்தது.

பதிப்பு, வெளியீடு

1988-ல் தொடங்கப்பட்ட சுபமங்களா, 1991 பிப்ரவரியில், கோமல் சுவாமிநாதனின் ஆசிரியர் பொறுப்பில் 1995 டிசம்பர் வரை 59 இதழ்கள் வெளிவந்தது. சுபமங்களா இதழ்  கவிதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புக் கவிதைகள், சிறுகதைகள், நீள் கதைகள், மொழிபெயர்ப்புச் சிறுகதைகள்  போன்றவற்றை இதழ் தோறும் வெளியிட்டது. மூத்த எழுத்தாளர்களின் படைப்புகள் மட்டுமல்லாது, இளையோர்களின் சிறுகதைகளையும் தொடர்ந்து வெளியிட்டு ஊக்குவித்தது.

உள்ளடக்கம்

வெகுஜனப் பத்திரிகையின் தோற்றம், வடிவமைப்பு, திரைப்பட விளம்பரங்கள், அனுபவ் பவுண்டேஷன் விளம்பரங்கள் என வணிக நிர்ப்பந்தங்களுக்கு உட்பட்டுத் தான் ‘சுபமங்களா’ இதழ் வெளியானது. ஆனால், அதன் உள்ளடக்கமோ இலக்கியத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்தது.

சுபமங்களாவில் மொழிபெயர்ப்பிற்கும், கவிதைக்கும் இதழ்தோறும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. ஈழ எழுத்தாளர்களின் படைப்புகளும் தொடர்ந்து வெளியாகின. நூல் விமர்சனப் பகுதி முக்கியமானதாக இருந்தது. வாசகர் கடிதங்கள், விவாதங்கள், மதிப்புரைகள் போன்றவற்றிற்கும் இவ்விதழ் இடமளித்தது.

சுபமங்களாவில் மொழி பெயர்ப்புக் கவிதைகள் உட்பட 280 கவிதைகள் இவ்விதழில் வெளியாகியுள்ளன.  கவிதை, கதை, திரைப்படம், நாடகம், ஓவியம், நடனம், அரசியல், சுற்றுச்சூழலியல் போன்ற துறைகள் சார்ந்த 300-க்கும் மேற்பட்ட விமர்சனக் கட்டுரைகளும் வெளியாகியுள்ளன.

சுபமங்களா சிறுகதைகள்

சுபமங்களாவின் சிறுகதைகள் குறிப்பிடத்தகுந்தன. சுபமங்களாவில் மொழிபெயர்ப்புச் சிறுகதைகள் உட்பட 200-க்கும் மேற்பட்ட சிறுகதைகள் வெளியாகியுள்ளன. பல இளம் எழுத்தாளர்களின் சிறுகதைகள் சுபமங்களாவில் இடம் பெற்றன. மூத்த எழுத்தாளர்களின் படைப்புகளும் தொடர்ந்து வெளியாகின.

சுபமங்களாவில் வெளியான சிறுகதைகள் இலக்கிய அமைப்பால் கவனிக்கப்பட்டன. கதா, இலக்கியச் சிந்தனை முதலிய அமைப்புகள் சுபமங்களாவில் வெளியான சிறுகதைகளுக்குப் பரிசளித்துச் சிறப்பித்தன. நீண்ட காலமாக எழுதி வரும் எழுத்தாளர்களுக்கு மட்டுமல்லாமல், புத்திலக்கியம் படைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் எழுத்துலகில் இயங்கிய எழுத்தாளர்களுக்கும் சுபமங்களா இடமளித்தது. ஜெயமோகன், எஸ். ராமகிருஷ்ணன் இருவரது குறிப்பிடத்தகுந்த, நவீன இலக்கியச் சிறுகதைகள் சுபமங்களாவில் வெளிவந்தன. ஜெயமோகனின் ஜகன் மித்யை, ரதம், மூன்று சரித்திரச் சிறுகதைகள் சுபமங்களாவில் வெளியானவையே. எஸ். ராமகிருஷ்ணனின் தாவரங்களின் உரையாடல், காலாட்படை பற்றிய குற்றப் பத்திரம் போன்ற சிறுகதைகள் சுபமங்களாவில் வெளியாகின  சோ. தர்மன் என்னும் படைப்பாளி பரவலாக வாசக கவனம் பெற்றது சுபமங்களா மூலம் தான்.

சுபமங்களாவில் தான் சிறுகதை எழுதியது குறித்து ஜெயமோகன், “ரப்பர் அப்போது வெளியாகி மிகப்பரவலாக வாசிக்கப்பட்டிருந்தது. ரப்பரை வெளியிட்ட அகிலன் கண்ணன் [தமிழ் புத்தகாலயம்] எனக்கு ஃபோன் செய்து சுபமங்களாவுக்கு நான் எழுதவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். கோமல் சுவாமிநாதனுக்கு ஒரு கதையை அனுப்பும்படி விலாசம் அனுப்பினார். எனக்கு கோமலை அப்போது அறிமுகமில்லை. அவர் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் பொறுப்பில் இருந்தார். தண்ணீர் தண்ணீர் சினிமாவுக்குப்பின் புகழுடன் திகழ்ந்தார். ஆனால் சுபமங்களா என்னும் பெயர் குழப்பம் அளித்தது. இடதுசாரிகளின் இதழ் என்றால் அப்படிப்பட்ட பெயர் இருக்க வாய்ப்பில்லை

கோமலை கவரும் கதை என்றால் அது ஒரு வறுமைச்சித்தரிப்பாகவே இருக்கமுடியும் என தோன்றியது. அதை மிக எளிதாக என்னால் எழுத முடியும். அகிலன் கண்ணன் என்னிடம் அது ஒரு நடுவாந்தர இதழ் என்றும், அதற்கேற்ப எழுதலாமே என்றும் சொன்னார். ஆகவே ஒரு வீம்பு வந்தது. ஜகன்மித்யை கதையை எழுதி அனுப்பினேன். அது அன்றைய சிறுகதை வகைமை எதற்குள்ளும் அடங்குவதல்ல.

சிலநாட்களுக்குப்பின் கோமல் என்னை ஃபோனில் அழைத்து அறிமுகம் செய்துகொண்டார். கதையைப் பாராட்டி அதைப்போல எழுதி அனுப்பும்படிச் சொன்னார். சுபமங்களாவை நான் ஆர்வத்துடன் பற்றிக்கொண்டேன். அதில் பல பெயர்களில் தொடர்ந்து எழுதினேன். கதைகள் மட்டும் என்பெயரில். மூன்றுசரித்திரக் கதைகள், ரதம், மண், வெள்ளம என பலகதைகள் அதில் வெளிவந்தன. எனக்கு முன் எழுதிய சிற்றிதழ் எழுத்தாளர்கள் எவருக்கும் இல்லாத தனி அடையாளத்தை எனக்கு சுபமங்களா உருவாக்கியளித்தது.” [1] என்கிறார்.

சுபமங்களா நேர்காணல்கள்

அரசியல், சமூகம், இசை, இலக்கியம், மொழிபெயர்ப்பு என பல்துறையைச் சார்ந்தவர்களின் 79 நேர்காணல்கள் சுபமங்களாவில் இடம் பெற்றுள்ளன. எழுத்தாளர்கள், கவிஞர்கள், ஓவியர்கள், மொழிபெயர்ப்பாளர்கள், சினிமா வசன ஆசிரியர், நடனத்துறை சார்ந்தவர்கள் என்று பலரது நேர்காணல்களை சுபமங்களா வெளியிட்டது. மற்ற நேர்காணல்களைப் போல் அல்லாமல் அந்தந்தத் துறை சார்ந்தவர்களின் அறிவுப்பூர்வமான விளக்கங்கள், அனுபவப் பகிர்தல்கள், வெளிப்படையான கருத்துக்கள் கொண்டதாக அவை அமைந்திருந்தன. பரவலான வாசக வரவேற்பையும் அவை பெற்றன.


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.