சுந்தரபுத்தன்

From Tamil Wiki
Revision as of 23:40, 25 January 2024 by Kaliprasadh (talk | contribs)

சுந்தரபுத்தன் ஊடகவியலாளர் மற்றும் எழுத்தாளர். தன்னனுபவங்கள் கொண்ட கதைகள் மற்றும் ரசனைக் கட்டுரைகள் எழுதியுள்ளார். ஓவியக்கலை சார்ந்த அழகியல் கட்டுரைகள் எழுதியுள்ளார். ஓவியர்களுடனான உரையாடல்களைத் தொகுத்துள்ளார்

சுந்தரபுத்தன்

பிறப்பு, கல்வி

சுந்தரபுத்தன், திருவாரூர் மாவட்டத்தில் கூத்தாநல்லூர் நகருக்கு அருகே உள்ள கண்கொடுத்தவனிதம் என்னும் கிராமத்தில் 1972 ம் ஆண்டு ஜூன் 16 ஆம் தேதி திரு. சு. நடராசன் - திருமதி தமிழரசி இணையருக்கு மகனாய்ப் பிறந்தார்.

கண்கொடுத்தவனிதம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரையிலும், ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை ஊரிலுள்ள அரசினர் உயர்நிலைப்பள்ளியிலும், பன்னிரெண்டாம் வகுப்பை வரை கொரடாச்சேரி அரசினர் மேல்நிலைப்பள்ளியிலும் பயின்றார். பின்னர் பூண்டி புஷ்பம் கல்லூரியில் தனது முதுகலை கல்வியை நிறைவு செய்தார்.

இவை தவிர, அண்ணாமலை பல்கலை தொலைநிலைக் கல்வியில் மக்கள்தொடர்பியலில் பட்டயப் படிப்பும் மதுரை காமராசர் பல்கலையில் தொலைநிலைக் கல்வியில் முதுகலை இதழியலும் நிறைவு செய்துள்ளார்.

தனிவாழ்க்கை

சுந்தரபுத்தனுக்கு 2002ம் ஆண்டு ஜூன் 2 ம் தேதி திருமணமானது. மனைவி பெயர் சாந்தி. ஒரே மகள். பெயர் சங்கமி

சுந்தரபுத்தனின் தந்தையாரான திரு. நடராசன் சு.ஒளிச்செங்கோ என்கிற பெயரால் பரவலாக அறியப்படுகிறவர். திராவிடர் கழகத்தில் தீவிரமாகச் செயல்பட்ட இவர் தந்தை பெரியார், சி. பா. ஆதித்தனாருடன் நேரடி அறிமுகம் கொண்டிருந்தவர்.

சுந்தரபுத்தன் தனது கல்வியை முடித்தபின் சென்னைக்கு இடம் பெயர்ந்தார். பல்வேற் ஊடகங்களில் பணியாற்றியர் தற்போது தற்போது சென்னையில் OH DIGITAL MEDIA LLP நிறுவனத்தில் நிர்வாக ஆசிரியர் பொறுப்பில் இருக்கிறார்

இலக்கிய வாழ்க்கை

சுந்தரபுத்தனின் முதல் படைப்பான ’கற்பனைக் கடிதங்கள்’ 1997 ம் ஆண்டு வெளியானது. தொடர்ச்சியாக, ‘தமிழ் அரசி’ பத்திரிக்கையில் வெளியாகி அதே ஆண்டு புத்தக வடிவமும் பெற்றது. அதைத் தொடர்ந்து, தன்னுடைய சொந்த கிராமத்து மனிதர்கள் சார்ந்தும், மறந்து போன கிராமத்து அடையாளன்ங்கள் சார்ந்தும் இரு புத்தகங்கள் எழுதினார். ’அக்கா குருவி கதை’ என்கிற தலைப்பில் சிறுவர்களுக்காக கதைகள் எழுதியுள்ளார். இவரது ரசனைக் கட்டுரைகள் தொகுக்கப்பட்டு மூன்று தொகுப்புகளாக வெளியாகியுள்ளன.

’பெருந்தலைவர்’ என்கிற தலைப்பில் காமராஜர் குறித்து எழுதிய தொகுப்பு நூலும், ’கடவுள் மறுப்பின் தொடக்கப் புள்ளி’ என்கிற தலைப்பில் பெரியாரின் கடவுள் மறுப்பு வாசகங்கள் பற்றிய தொகுப்பு நூலும் வெளியாகியுள்ளன.

சுந்தரபுத்தனுக்கு தஞ்சை சரஸ்வதி மஹால் நூலக வாசிப்பின் வழியாக நவீன ஒவியங்கள் குறித்து ஆர்வம் உருவானது. அதன் தொடர்ச்சியாக இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக, ஓவியக் கண்காட்சியில் பர்வையாளராகப் பங்கு பெற்றும் ஓவியர்களுடன் உரையாடியும் அவர்களின் வர்ணக்கலவை மற்றும் அழகியல் குறித்துப் பதிவு செய்தார். அவை 52 வாரங்கள் தொடராக புதிய பார்வை இதழில் வெளியாயின்ன. பின்னர் புத்தக வடிவம் பெற்றன. அவ்வாறே சிற்பக்கலைகள் குறித்தும் தொடர்ச்சியாக எழுதி வருகிறார். ஸ்தபதிகளுடனான உரையாடல்களை தொகுத்துள்ளார். கவிதைகள் குறித்தும் கவிஞர்கள் மற்றும் இலக்கிய விமர்சகர்களுடனான இவரது உரையாடல்களும் தொகுக்கப் பட்டுள்ளன.

ரஷ்ய இலக்கியத்தினையும், அதன் படைப்பாளிகளையும் தன்னுடைய எழுத்துக்கான அடிப்படை காரணிகளாக சுந்தரபுத்தன் குறிப்பிடுகிறார். ஜெயகாந்தன், தஞ்சை ப்ரகாஷ், கி. ராஜ நாராயணன், பிரபஞ்சன் ஆகியோர், தான் எழுதுவதற்கான ஊக்கத்தைத் தந்திருக்கிறார்கள் என்று குறிப்பிடுகிறார்

விருதுகள்

சுந்தரபுத்தன் ‘இலக்கிய வீதி இனியவன்’ வழங்கும் சிறந்த எழுத்தாளருக்கான அன்னம் விருதினை 2015 ம் பெற்றார்

இலக்கிய இடம்

சுந்தரபுத்தன் எழுதிய பழைய தஞ்சாவூர் மாவட்டத்தைச் சார்ந்த விவசாய நிலம் மற்றும் மக்கள் சார்ந்தும் மேலும் அந்த நிலத்தில் வீச்சுடன் எழுந்து வந்த திராவிட இயக்கம் சார்ந்தும் எழுதிய நினைவேக்கம் கொண்ட ரசனைக் கட்டுரைகள் அதன் அழகியலுக்காக தொடர்ந்து வாசிக்கப் படுபவையாக உள்ளன.

நவீன இலக்கியத்தில் தன்னுடைய ஓவியம் மற்றும் சிற்பம் சார்ந்த புத்தகங்களுக்காக இவர் தொடர்ச்சியாக வாசிக்கப் படுகிறார். ”சுந்தரபுத்தன் நுண்கலைகளின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவர். ஓவியம் சார்ந்த பயணங்கள் மேற்கொண்டும் அதன் முக்கியத்துவம் குறித்தும் வெகுஜன ஊடகங்களில் எந்த அங்கீகாரமும் எதிர்பார்க்காமல் தொடர்ச்சியாக பதிவு செய்தது பாராட்டத்தக்கது” என்று அவர் புத்தகங்கள் குறித்து எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் குறிப்பிடுகிறார். சுந்தரபுத்தனின் “வண்ணங்களின் வாழ்க்கை” நூலை நவீன ஓவியங்கள் குறித்த சிறந்த நூல்களில் ஒன்றாகவும் குறிப்பிட்டுள்ளார்.

நூல் பட்டியல்

கட்டுரை நூல்கள்
  • கற்பனைக் கடிதங்கள் (கற்பனையாக எழுதப்பட்ட கடிதங்களின் தொகுப்பு)
  • ஒரு கிராமமும் சில மனிதர்களும் (சொந்த கிராமத்து மனிதர்கள் பற்றிய குறிப்புகள்)
  • நவீன தூரிகை ( ஓவியங்கள் குறித்த கட்டுரைகள் )
  • கிராமத்து ஆட்டோகிராப்  (மறந்துபோன கிராமிய அடையாளங்கள்)
  • மஞ்சள் பூக்கள் நிறைந்த தெரு
  • யானை பார்த்த சிறுவன்
  • அழகின் வரைபடங்கள்
சிறார் நூல்கள்
  • அக்கா குருவி ( கதைத் தொகுப்பு )
தொகுப்பு நூல்கள்
  • பெருந்தலைவர் ( காமராஜர் பற்றிய தொகுப்பு நூல்)
  • கடவுள் மறுப்பின் தொடக்கப் புள்ளி ( பெரியாரின் கடவுள் மறுப்பு வாசகங்கள் பற்றிய தொகுப்பு நூல்)
  • வண்ணங்களின் வாழ்க்கை (நவீன ஓவியர்கள் - சிற்பிகளின் பேட்டித் தொகுப்பு)
  • கவிதை ஓவியம் சிற்பம் சினிமா (கலை விமர்சகர் இந்திரனின் படைப்புகளின் தொகுப்பு)

உசாத்துணை