சி. கன்னையா

From Tamil Wiki
Revision as of 19:43, 9 July 2022 by Ramya (talk | contribs) (Created page with "சி. கன்னையா (20ஆம் நூற்றாண்டு) தமிழக நாடக முன்னோடிகளில் ஒருவர். ஸ்ரீ கிருஷ்ண விநோத சபா என்னும் நாடகக் குழுவைத் தொடங்கி நாடக அரங்காற்றுகை செய்தார். காட்சிகளை பொறுத்து தமிழ் நாடக ம...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

சி. கன்னையா (20ஆம் நூற்றாண்டு) தமிழக நாடக முன்னோடிகளில் ஒருவர். ஸ்ரீ கிருஷ்ண விநோத சபா என்னும் நாடகக் குழுவைத் தொடங்கி நாடக அரங்காற்றுகை செய்தார். காட்சிகளை பொறுத்து தமிழ் நாடக மேடைக்கு சி.கன்னையா முன்னோடியாகத் திகழ்ந்தார்.

கலை வாழ்க்கை

ஸ்ரீ கிருஷ்ண விநோத சபா என்ற நாடகக் குழுவை ஆரம்பித்தார். இவருடைய நாடகக் குழுவில் 200 பேர் இருந்துள்ளனர். 10 வண்டி லாரி பெறுமானமுள்ள காட்சி அமைப்புக்களுக்கான பொருட்கள் வைத்திருந்தார். 1915ஆம் ஆண்டிலேயே கும்பகோணத்தில் காலை 10மணிக் காட்சியாக நாடகம் நடத்திய பெருமை கன்னையா அவர்களுக்கு உண்டு. காட்சிச் சிறப்பிற்காக தனிக்கவனம் செலுத்தினார். முன்பதிவு முறையை ஏற்பாடு செய்தார்.

இவரது தசாவதாரம் நாடகம் 1008 நாட்கள் நடத்தப்பட்டது. இவரது நாடகம் சென்னையில் நடக்கும்போது 700 கி.மீ. தொலைவில் உள்ள திருநெல்வேலி வரை விளம்பரம் செய்யப்பட்டது. நாடகத்தில் காட்சிகளை அமைப்பதில் முன்னோடியாய் திகழ்ந்தார். இவரைப் பார்த்து, "மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி", "பால மீன ரஞ்சனி சங்கீத சபை", "ஸ்ரீபால ஷண்முகானந்த சபா" முதலிய நாடக சபைகளும் காட்சியமைப்பில் தங்களது கவனத்தைச் செலுத்தின. ரங்கூன், யாழ்ப்பாணம் என பல நாடுகளுக்கும் சென்று நாடகங்களை நடத்தினார். சி. கன்னையா மேடை அமைப்பிலும், காட்சி அமைப்பிலும் பல சீர்திருத்தங்களையும் சிறப்புகளையும் செய்தார்.

இவரது நாடகக் காட்சிகளில், மேடையிலேயே குதிரை, யானை, தேர், காளை முதலானவற்றைக் கொண்டு வந்துவிடுவார். அரசவைக் காட்சிகளில் இரண்டு தூதர்கள் நிற்க, அவர்களுக்குப் பின்னால், நிறைய வெட்டுருக்கள் (கட்அவுட்) வைத்து ஐம்பது பேர் நிற்பது போலக் காட்டிவிடுவார். அரிச்சந்திரா நாடகத்தில் மயானக் காட்சியில், பிணம்போல் உருவம் செய்து அதற்கு இறுதிச் சடங்குகள் செய்வதைக் காட்டினார். இவரது குழுவில் நாற்பது அரங்கக் கலைஞர்கள் பணியாற்றினார்கள். பத்து லாரி அளவிற்கு அரங்கப் பொருட்களை வைத்திருந்தார்.

கன்னையாவின் தமிழ்நாடகப் போக்குகள்
  • நீளம், அகலம், உயரம் என்னும் முப்பரிமாணம் கொண்ட காட்சி அமைப்புகளுடன் நாடக மேடை அமைத்தது.
  • நிஜ குதிரை, தேர், யானை போன்றவற்றை மேடைக்கே கொண்டு வந்தார்.
  • புதுப்புது உடைகள், ஒளி அமைப்பில் எண்ணெய் விளக்குடன் கேஸ் விளக்குகளையும் பயன்படுத்தியது.
  • விரிவாக விளம்பரங்கள் செய்தல்
  • ஒலிபெருக்கி இல்லாத காலத்தில் முன் மேடையில் வரிசையாகப் பானைகளைக் கட்டி எதிரொலி கேட்கும் வண்ணம் செய்யும் உத்தி எனப் பல புதிய வழிமுறைகளைச் செய்தார்.
  • அந்தந்த நாடகக் காட்சிகளுக்கேற்றவாறு பின் திரைகள் அமைத்தார்.
  • பாத்திரங்களுக்கெ ஏற்றவாறு உடைகளை அமைத்தார்.

அரங்கேற்றிய நாடகங்கள்

  • சம்பூரண ராமாயணம்
  • அரிச்சந்திரா
  • தசாவதாரம்
  • கிருஷ்ணலீலா
  • ஆண்டாள் திருக்கல்யாணம்
  • துருவன்
  • சக்குபாய்
  • பக்த குசலோ
  • சாகுந்தலா
  • பகவத்கீதை

உசாத்துணை