under review

சிற்றம்பல நாடிகள்

From Tamil Wiki
Revision as of 20:25, 10 May 2024 by Logamadevi (talk | contribs)
சிற்றம்பல நாடிகள் சமாதி, சித்தர்காடு நன்றி: https://tut-temples.blogspot.com/

சிற்றம்பல நாடிகள் (பழுதைக்கட்டி சிற்றம்பல நாடிகள்) (பொ.யு. 14-ம் நூற்றாண்டு) சைவப் பெரியார். துகளறு போதம் என்னும் சைவ சாத்திர நூலை எழுதியவர்

வாழ்க்கைக் குறிப்பு

சிற்றம்பல நாடிகள் சீர்காழிக்கருகிலுள்ள புள்ளிருக்கும் வேளூரில் 14-ம் நூற்றாண்டில் வேளாளர் குலத்தில் பிறந்தார். தில்லைச் சிற்றம்பலத்தின் மீதிருந்த பெரும் ஈடுபாட்டால் அதை நாடித்துடிப்பாகக் கொண்டிருந்தவர் என்ற பொருளில் ‘சிற்றம்பல நாடிகள்’ என அழைக்கப்பட்டார்.

உமாபதி சிவத்தின் மாணவர் அருணமச்சிவாயரிடம் உபதேசம் பெற்ற 'கங்கை நகர் மெய்கண்டார்' என்பவரை ஞானாசிரியராகக் கொண்டு அவரிடம் கல்வியும், உபதேசமும் பெற்றார்.

சிற்றம்பல நாடியாருக்குப் பல மாணவர்கள் இருந்தனர். அவர்களில் முக்கியமானவர்கள் 63 சீடர்கள்.

தொன்மக்கதை
நாடிகளுடன் சமாதியடைந்த சீடர்களைக் குறிக்கும் லிங்கங்கள் (63)

சிற்றம்பல நாடிகள் தன் சீடர்களுடன் உணவு அருந்தும் வழக்கம் இருந்தது. ஒருநாள் தவசுப்பிள்ளை பசு நெய் எனக்கருதி, தவறுதலாக வேப்பெண்ணையைப் பரிமாறினார். அனைவரும் அதை முகம் சுளிக்காமல் உண்டபோது கண்ணப்பர் என்பவருக்கு மட்டும் கசப்பை நினைத்து குமட்டல் எடுத்தது. அதைக்கண்ட சிற்றம்பல நாடிகள் “அவிச்சுவையறிவான், தவச்சுவை அறியான்” என்று கூற கண்ணப்பர் மனம் வருந்தி வெளியேறினார்.

பல வருடங்களுக்குப்பின் சிற்றம்பல நாடிகள் அரசரை அழைத்து, தம் மாணவராகிய அறுபது அடியார்களுடன் ஒரு சேரச் சித்திரை திருவோண நாளில் சமாதியிலிறங்குவதாக கூறி அனைவருக்கும் சமாதி அமைக்கும்படி கூற, அரசனும் அவ்வாறே செய்தான். குறித்த காலத்தில் மூன்று வெண்பாக்களைப் பாடிவிட்டு சமாதியிலிறங்கினார் நாடிகள். அவ்வாறே மாணவர்களும் இறங்கினர். அப்போது, முன்பு வடக்கு நோக்கிச் சென்ற கண்ணப்பர் அங்கே வந்து

ஆண்டகுரு சிற்றம் பலவா! அடியேற்கா
மீண்டும் எழுந்தருள வேண்டாவோ? – நீண்டமால்
ஆரணனு காணாத ஆனந்த வாரிதியைப்
பூரணமாய் வையாத போது

என்று வருந்தி நிற்க, சமாதி பிளந்து சிற்றம்பல நாடிகள் கண்ணப்பரைத் தன்னுடன் இணைத்துகொண்டார். இது நிகழ்ந்த்தாகக் கூறப்படும் இடம் மயிலாடுதுறையிலிருந்து கும்பகோணம் செல்லும் வழியில் சித்தர்காடு என்ற ஊரில் உள்ளது.

ஆன்மிக/இலக்கிய வாழ்க்கை   

சிற்றம்பல நாடிகளின் நேர்மாணாக்கர் நால்வர். அவர்களுள் தத்துவ நாதர் என்ற மாணவர் உண்மைநெறி விளக்கம் என்ற நூலையும், தத்துவப் பிரகாசர், தத்துவப் பிரகாசம் என்ற நூலையும் எழுதினர். மற்ற இருவரில் சம்பந்த முனிவரும் அவர் வழியில் வந்தவரும் நூல் எழுதியுள்ளனர். ஞானப்பிரகாசரும் அவரது பரம்பரையினரும் நூல் எழுதவில்லை.

இவர் துகளறு போதம், இரங்கல் மூன்று, திருப்புன்முறுவல் முதலிய ஐந்து நூல்களை இயற்றியுள்ளார். திருச்செந்தூர் அகவல் சிற்றம்பல நாடியார் இயற்றியது எனச் சிலர் கருதுவர். துகளறு போதம் இவர் இயற்றிய நூல்களுள் முக்கியமானது. மெய்கண்டசாத்திரம் 14 எனக் கணக்கிட்டுக் காட்டும் ‘உந்திகளிறு’ என்ற வெண்பாவில் இந்நூலின் பெயர் காணப்படவில்லை.

உந்தி களிறு உயர்போதம் சித்தியார்
பிந்திருபா உண்மை பிரகாசம் - வந்தவருட்
பண்புவினா போற்றிகொடி பாசமிலா நெஞ்சுவிடு
உண்மைநெறி சங்கற்பம் முற்று

ஆனால் பல ஏட்டுப்பிரதிகளில், இப்பாடலில் வரும் உண்மைநெறி விளக்கம் என்ற பெயர் இல்லாமல் துகளறு போதத்தைச் சேர்த்து 14 எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இந்நூல் திராவிட மாபாடியம் செய்த சிவஞான சுவாமிகள் போன்ற சிறந்த சாத்திர உரையாசிரியர்களால் எடுத்தாளப்பெற்ற பெருமையுடையது. காப்புச் செய்யுளும், 100  வெண்பாக்களும், இறுதியில் நூற்பொருள் கூறும் இரு பிற்கால வெண்பாக்களும் உடையது. முக்தி நெறிக்குரிய மார்க்கம், தசகாரியம் (பத்து படிகள்) என்பது சைவ சாத்திர மரபு. தச காரியங்களை முப்பது நிலைகளாகச் சில சாத்திரங்கள் கூறும். இவ்வாறு கூறும் முதல் சாத்திரம் துகளறு போதம்.

'சிற்றம்பலநாடி கலித்துறை' சிற்றம்பல நாடிகளின் மாணாக்கர்களால் இயற்றப்பட்ட நூல். இதனைச் சைவ சித்தாந்தக் கருத்துக் கருவூலம் என்பர். இதில் 55 கட்டளைக் கலித்துறைப் பாடல்கள் உள்ளன.   

குருபூஜை

ஒவ்வொரு சித்திரை திருவோணத்தன்றும் சிற்றம்பல நாடிகளின் குருபூஜையும் அவர் சீடர்களுடன் சமாதியடைந்த நிகழ்வும் சித்தர்காடு ஆலயத்தில் கொண்டாடப்படுகின்றன.

நூல்கள்

  • துகளறு போதம்  
  • செல்காலத்து இரங்கல்  
  • நிகழ்காலத்து இரங்கல்
  • வருகாலத்து இரங்கல்
  • திருப்புன்முறுவல்  
இவரைப் பற்றிய நூல்கள்
  • சிற்றம்பல நாடிகள் கலித்துறை.
  • சிற்றம்பல நாடிகள் வெண்பா  
  • சிற்றம்பல நாடிகள் அநுபூதி விளக்கம்
  • சிற்றம்பல நாடிகள் தாலாட்டு

உசாத்துணை


✅Finalised Page