under review

சிறுபஞ்சமூலம்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
Line 1: Line 1:


சிறுபஞ்சமூலம், சங்கம் மருவிய கால தொகுப்பான [[பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்|பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில்]] ஒன்றாகும். சிறுபஞ்சமூலம் நூலை இயற்றியவர் [[காரியாசான்]].
சிறுபஞ்சமூலம், சங்கம் மருவிய கால தொகுப்பான [[பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்|பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில்]] ஒன்றாகும். சிறுபஞ்சமூலம் நூலை இயற்றியவர் [[காரியாசான்]].
Line 133: Line 132:
* சிறுபஞ்சமூலம், தமிழ் இணையக் கல்விக்கழகம் https://www.tamilvu.org/courses/degree/c012/c0121/html/c012132.htm</nowiki>
* சிறுபஞ்சமூலம், தமிழ் இணையக் கல்விக்கழகம் https://www.tamilvu.org/courses/degree/c012/c0121/html/c012132.htm</nowiki>
*
*
{{Ready for Review}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
{{Ready for review}}

Revision as of 12:53, 7 July 2022

சிறுபஞ்சமூலம், சங்கம் மருவிய கால தொகுப்பான பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றாகும். சிறுபஞ்சமூலம் நூலை இயற்றியவர் காரியாசான்.

பெயர்க்காரணம்

பஞ்ச என்ற சொல் ஐந்து என்ற எண்ணைக் குறிக்கும். மூலம் என்றால் வேர் என்று பொருள். மருத்துவ நூலில் கூறப்படும் ஐந்து வேர்கள் கண்டங்கத்தரி வேர், சிறு வழுதுணை வேர், சிறுமல்லி வேர், நெருஞ்சி வேர், மற்றும் பெருமல்லி வேர் ஆகியனவாகும். இந்த ஐந்து வேர்களும் மக்களின் உடல் நோயைத் தீர்க்க வல்லன. இது போல் ஒவ்வொரு பாடலிலும் கூறப்படும் ஐந்து பொருள்களும் மக்களின் பிறவி நோயைத் தீர்க்க வல்ல சிறந்த அற நெறிகள் என்பதனால் இப்பெயர் சூட்டப்பட்டுள்ளது. நூலின் பெயர்க் காரணத்தை ஆசிரியர்,

ஒத்த ஒழுக்கம் கொலைபொய் புலால்களவொடு

ஒத்த இவையலவோர் நாலிட்டு - ஒத்த

உறுபஞ்ச மூலந்தீர் மாரிபோல் கூறீர்

சிறுபஞ்ச மூலம் சிறந்து

(சிறுபஞ் - 1)

என்று முதல் பாடலில் கூறுகிறார்.

பொருள்;

கொலை, பொய், புலால், களவு ஆகியவற்றுக்கு மாறான கொலை செய்யாமை, பொய் கூறாமை, புலால் உண்ணாமை, களவு செய்யாமை ஆகிய நான்குடன் ஒழுக்கம் என்பதையும் இணைத்து, ஐந்தின் கூட்டாகச் சிறுபஞ்சமூலம் என்னும் இந்நூல் அமைந்துள்ளது. பஞ்சத்தைப் போக்கும் மழைபோல. இந்நூல் மக்களின் அறியாமையைப் போக்கும். மக்கள் மனத்தில் பதியுமாறு இதனை எடுத்துச் சொல்லுங்கள்.

ஆசிரியர் குறிப்பு

சிறுபஞ்ச மூலம் நூலின் ஆசிரியர் காரியாசான். காரி என்பது இவரது இயற்பெயர். ஆசான் என்பது தொழிலின் அடிப்படையில் வந்த பெயரெனக் கொள்ளலாம்.  ‘மழைக்கை மாக்காரி யாசான்’ என்ற தொடர் நூலாசிரியர் கொடை வள்ளல் என்பதைப் புலப்படுத்துகிறது. இவரது காலம் நான்காம் நூற்றாண்டு. கொல்லாமையை வலியுறுத்திக் கூறுவதால்  (சிறுபஞ். 51) இவர் சமண சமயத்தில் ஈடுபாடுடையவர் என்று கொள்ளலாம்.

நூல் அமைப்பு

சிறுபஞ்ச மூலத்தில் பாயிரச் செய்யுள் உட்பட 100 செய்யுள்கள் உள்ளன. பாடல்கள் நேரிசை வெண்பாவால் ஆனவை. முன்பு கூறியது போல் ஐவகை வேர்களும் நோயை நீக்குகின்றன. அதைப் போல் சிறுபஞ்ச மூலம் நூலின் ஒவ்வொரு பாடலிலும் கூறப்படும் ஐந்து கருத்துகளும் மக்களை நல்வழிப்படுத்தும் அறநெறிகளாகும். அவற்றைக் கடைப்பிடித்து ஒழுகுமாறு ஆசிரியர் வலியுறுத்துகிறார். இந்த அறக்கருத்துகளே நூலில் பாடுபொருளாக விளங்குகின்றன. பல பாடல்கள் ‘மகடூஉ முன்னிலை’யாக அமைந்துள்ளன. ‘மகடூஉ முன்னிலை’ என்பது. ஒரு பெண்ணை நோக்கிக் கூறுவது போல, பாடலை அமைப்பது. உதாரணமாக "கண்டல் அவிர்பூங் கதுப்பினாய்" (சிறுபஞ். 14) தாழைமலர் கூந்தலையுடையவளே! என்பது இதன் பொருள். பாடல்கள் 48, 54, 89, 92 ஆகியவற்றிலும் இது போன்ற விளிகளைக் (அழைப்புகள்) காணலாம்.

நெறிமுறைகள்

சிறுபஞ்ச மூலம் நூல் பல்வேறு நெறிமுறைகளைக் காட்டுகிறது. அவற்றில் சில;

  • அறமும் அறச்செயல்களின் சிறப்பும் இந்நூலில் பேசப்படுகின்றன. வாழ்வில் பின்பற்ற வேண்டிய அறங்களை ஐந்து வகையாகப் பகுத்துள்ளதுடன், அறிவுடையார் செயல்கள், அறிவற்றோர் செயல்கள் ஆகியவை பகுத்துரைக்கப்பட்டுள்ளன.
  • எது அழகு என்பது சுட்டப்படுகிறது. ஆசிரியரும் மாணாக்கரும் எப்படி இருக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது. இவ்வுலகில் ஒரு நோயும் இன்றி வாழ்பவர் யார், எண்பதாண்டுகளுக்கு மேலும் வாழ்பவர் யார் என்பது பற்றியும் குறிப்பிடுகிறது.
  • மக்கட்பிறவியும், அப்பிறவிப்பயனும் பற்றிக் கூறப்படுகிறது. யாருக்கு மீண்டும் பிறவி இல்லை என்பதை இரண்டு பாடல்கள் எடுத்துக் கூறுகின்றன.
  • அரசர், அமைச்சர், தலைவன், உழவர் ஆகியோர் இயல்புகள் வரையறுக்கப்படுகின்றன.
  • பொது நல உணர்வுடையவன் சுவர்க்கம் புகுவான் என்ற கருத்தமைந்த பாடலும் உண்டு. குளத்தைத் தோண்டல், மரக்கிளைகளை வெட்டி நடல், பாதைகளை அமைத்தல், மேடான நிலங்களை உள் தோண்டல், உழுகின்ற வயலாக்குதல், வளம்படத் தோண்டி கிணற்றை உண்டாக்குதல் ஆகிய ஐந்தும் மிகுதியாகச் செய்தவனே சுவர்க்கம் புகுவான் என்கிறது இந்நூல் (சிறுபஞ்-66).
  • நன்மை தருவன, தீமை தருவன, நகைப்புக்கு உரியன என்ற வாழ்வியல் உண்மைகளை எடுத்துக்காட்டுகிறது.
  • குழந்தை நலன் காத்தல் நோயற்ற நல்ல சமுதாயத்தை உருவாக்குவதற்குரிய முறையினை விரிவாகப் பேசுகிறது சிறுபஞ்ச மூலம். ஈன்ற தாய் தன் குழந்தையை வளர்த்தல், தான் கொண்ட சூலை அழியாது காத்தல், வளர்ப்பார் இல்லாத குழவியை வளர்த்தல், சூல் ஏற்ற கன்னியையும் மிகவும் வருந்தியவனையும் தன் வீட்டில் வைத்துப் போற்றுதல் இவை பெரிய அறங்களாகும் என்கிறது.
  • உலகில் பிறப்பற்று வாழ்பவர் யார் என்று காட்டுகிறது சிறுபஞ்ச மூலம். கள் உண்ணாமலும், சூதாடாமலும் கயவருடன் நட்புக் கொள்ளாமலும், பிறர் மனம் வருந்த வன்சொல் கூறாமலும் , ஊன் உண்ணாமலும் இருப்பவர் மீண்டும் பிறத்தல் இல்லை.  (சிறுபஞ்-21)
  • மனைவியோடு கூடி வாழும் இல்வாழ்க்கை, துறவறத்திலும் நன்றாகும். நல்ல துறவறத்தார்க்கு உணவை ஆக்கியிட்டுத் தாமும் உண்ணும் சிறப்புடையவர்கள் இல்லறத்தார். இல்வாழ்க்கையைச் செம்மையாக நடத்தினால் அதுவே துறவற வாழ்க்கைக்கு ஒப்பாகும் என்கிறது  சிறுபஞ்சமூலம் (92)
  • பிறர் செய்த பிழையைப் பொறுத்தல் நன்று. பிறர் செய்த தீங்கை எண்ணிக் கொண்டிருத்தல் நன்றன்று. பிறர் பகை கெடவாழ்தல் நன்று (சிறுபஞ்-16).
  • நற்குணம் உடையவரைச் சேருங்கள். பிறர் பொருளைக் கவர நினைக்காதீர்கள். தீக்குணம் உடையவரை ஒழியுங்கள். தீய சொற்களைப் பேசாதீர்கள். இயமன் வருவது உறுதி என்ற உறுதியான நெறிகளை இந்நூல் உரைக்கிறது(சிறுபஞ்.26).

உதாரண பாடல்கள்

இரவலர்க்கு ஈதல்

வெந்தீக்காண் வெண்ணெய் மெழுகுநீர்சேர் மண்உப்பு அந்த மகற்சார்ந்த தந்தையென்று - ஐந்தினுள்

ஒன்றுபோல் உள்நெகிழ்ந்து ஈயிற் சிறிதெனினும்

குன்றுபோல் கூடும் பயன்

(சிறுபஞ்-65)

பொருள்;

நெருப்பைக் கண்ட வெண்ணெய், மெழுகு, நீர் சேர்ந்த மண், உப்பு, தன் அழகிய மகனைத் தழுவிய தந்தை என்று சொல்லப்பட்ட ஐந்தனுள் ஒன்றுபோல் இரவலரைக் கண்டால் உள்ளம் நெகிழ்ந்து ஈயவேண்டும். அவ்வாறு ஈயும் பொருள் சிறிதாயினும் அதனால் வரும் பயன் குன்று போலப் பெரிதாய்க் கூடும்.

நோயின்றி வாழ்வார்

சிக்கர் சிதடர் சிதலைபோல் வாயுடையார் துக்கர் துருநாமர் தூக்குங்கால்- தொக்க

வருநோய்கள் முன்னாளில் தீர்த்தாரே இந்நாள்

ஒருநோயும் இன்றிவாழ் வார்

(சிறுபஞ்-76)

பொருள்;

மிகக் கொடிய தலைநோய் உற்றார், பித்தேறியவர், வாய்ப்புற்று உடையவர், சயநோய் உடையவர், மூலநோய் கண்டவர் ஆகியோர் நோய்களை முன்னாளில்  துடைத்த அருளாளரே ஒரு நோயும் இன்றி வாழ்கின்றனர்

நீடு வாழ்வார்

பஞ்சப் பொழுதகத்தே பாத்துண்பான் காவாதான் அஞ்சா துடைபடையுட் போந்தெறிவான் - எஞ்சாதே

உண்பதுமுன் ஈவான் குழவி பலிகொடுப்பான்

எண்பதின் மேலும்வாழ் வான்

(சிறுபஞ்-79)

பொருள்;

பஞ்ச காலத்திலும் பகுத்து உண்பவர். மற்றவர்க்குக் கொடுத்து உண்பவர், படையுடைந்த காலத்து அஞ்சாது புகுந்து பலரையும் காக்கின்றவன், எந்நாளும் மற்றவர்க்குக் கொடுத்த பின்னரே உண்கின்றவன், பசித்த குழந்தைகளுக்குச் சோறளிப்பவன் ஆகியோர் எண்பது ஆண்டுகளுக்கு மேலும் வாழ்வார்.

வயதும் அறிவும்

பூவாது காய்க்கும் மரமுள நன்றறிவார் மூவாது மூத்தவர் நூல்வல்லார் - தாவா

விதையாமை நாறுவ வித்துள மேதைக்கு

உரையாமை செல்லும் உணர்வு

(சிறுபஞ் - 22)

பொருள்;

பூவாது காய்க்கும் மரம்போல ஆண்டுகளால் மூவாதாரும் அறிவினால் மூத்தாராவார். நூல் வல்லாரும் அங்ஙனமே, பாத்திகட்டி விதைக்காமலே முளைக்கிற விதைபோல பிறர் அறிவிக்காமலே அறிவுடையாருக்கு அறிவு தோன்றும்.

வசையே எமன்

சிலம்பிற்குத் தன்சினை கூற்றம் நீள்கோடு விலங்கிற்குக் கூற்றம் மயிர்தான் - வலம்படா

மாவிற்குக் கூற்றமாம் ஞெண்டிற்குத் தன் பார்ப்பு

நாவிற்கு நன்றல் வசை

(சிறுபஞ் - 11)

பொருள்;

சிலந்திப் பூச்சிக்கு அதன் முட்டை எமன். மிருகங்களுக்கு அவற்றின் நீண்ட கொம்புகள் எமன். கவரிமானுக்கு அதன் மயிர் எமன். நண்டுக்கு அதன் குஞ்சு எமன். ஒருவன் நாவில் தோன்றும் வசைமொழியே அவனுக்கு எமன்.

எது செய்யவேண்டும்

உடம்பொழிய வேண்டின் உயர்தவம் ஆற்றீண்டு இடம்பொழிய வேண்டுமேல் ஈகை - மடம்பொழிய

வேண்டின் அறிமடம் வேண்டேல் பிறர்மனை

யீண்டின் இயையுந் திரு

(சிறுபஞ்-6).

பொருள்;

பிறவி நீங்கத் தவம் செய்க. புகழ் வேண்டும் எனில் ஈதலைச் செய்க. இரக்கம் வேண்டுமெனில் பிறர் மனை விரும்பாமை வேண்டும். தினம் சிறிதேனும் பொருள் சேர்த்தால் செல்வம் பெருகும்

எல்லாச் செயலும் யார்க்கும் எளிதன்று

வான்குருவிக் கூடரக்கு வாலுலண்டு கோற்றருதல் தேன்புரிந் தியார்க்குஞ் செயலாகா - தாம்புரீஇ

வல்லவர் வாய்ப்பன வென்னார் ஓரோவொருவர்க்கு

ஒல்காதோ ரொன்று படும்

(சிறுபஞ்-27)

பொருள்;

வலிய தூக்கணாங் குருவி செய்யும் கூடும், பேரெறும்புகளால் செய்யப்படும் அரக்கும், தூய உலண்டு (ஒருவகைப் புழு) என்னும் புழுக்களால் நூற்கப்பட்ட நூலும், கோல் புழுவால் செய்யப்பட்ட கோல் கூடும், தேனீக்களால் திரட்டப்பட்ட தேன் பொதியும் மற்றவர்களாலே செய்ய முடியாது. அவற்றாலேயே எளிதாக உருவாக்க முடியும். கற்றவர் அவற்றைத் தம்மால் செய்ய முடியும் என்று செய்ய முற்படமாட்டார்கள்.

உசாத்துணை

  • பதிணெண்கீழ்கணக்கு நூல்கள், மூலமும் உரையும், சாரதா பதிப்பகம்
  • சிறுபஞ்சமூலம், தமிழ் இணையக் கல்விக்கழகம் https://www.tamilvu.org/courses/degree/c012/c0121/html/c012132.htm</nowiki>



Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.