சிருஷ்டிகீதம்

From Tamil Wiki

சிருஷ்டி கீதம் (நாஸதீய சூக்தம்) ரிக்வேதத்தில் உள்ள ஒரு பாடல்.ரிக் வேதக் கருத்துக்களின் உச்சதரிசனமாக இது மதிப்பிடப்படுகிறது. பிரம்மம் என்னும் கருதுகோளை கவித்துவத்துடன் முன்வைக்கிறது. ஒரு வரையறையாக அன்றி வியப்பாகவும், பேரனுபவத்தை அடைந்த நிறைவாகவும் வெளிப்படுத்துகிறது. இந்திய வேதாந்த சிந்தனைகளின் தொடக்கப்புள்ளி என்று இதை ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

இடம்

சிருஷ்டிகீதம் ரிக்வேதத்தின் 10 ஆவது மண்டலத்தில் உள்ள 129 ஆவது பாடல் (10:129)

பெயர்

இப்பாடலுக்கு பெயர் பிற்காலத்தில் இதைப் பயில்பவர்களால் அளிக்கப்பட்டது

  • சிருஷ்டிகீதம் : இது பிரம்மம், பிரபஞ்சத்தின் உருவாக்கம் ஆகியவற்றைப் பற்றிப் பாடுவதனால் சிருஷ்டிகீதம் என்று பெயர் பெற்றது
  • நாஸதீய சூக்தம் : (நா+ அஸத்). ’இல்லை இன்மை’ என பொருள். அல்லது ‘இல்லை- பொருளின்மை’ என்று பொருள். அசத் இல்லை என சொல்லும் பாடல் என்னும் பொருளில் இப்பெயர் அமைந்துள்ளது

ஒலி

நாஸதீய சூக்தம் ரிக்வேதத்திலும் யஜூர், சாம வேதங்களிலும் சிறு மாற்றங்களுடன் உள்ளது. பொதுவாக ரிக்வேத வடிவம் திருஷ்டுப் என்னும் சந்தத்தில் அமைந்துள்ளது.

பாடல்

அப்போது அசத் இருக்கவில்லை

சத்தும் இருக்கவில்லை

உலகம் இருக்கவில்லை

அதற்கப்பால்

வானமும் இருக்கவில்லை

ஒளிந்துகிடந்தது என்ன?

எங்கே?

யாருடைய ஆட்சியில்?

அடியற்ற ஆழமுடையதும்

மகத்தானதுமான நீர்வெளியோ?

மரணமிருந்ததோ

மரணமற்ற நிரந்தரமோ?

அப்போது இரவுபகல்கள் இல்லை

ஒன்றேயான அது

தன் அகச்சக்தியினால்

மூச்சுவிட்டது

அதுவன்றி ஏதுமிருக்கவில்லை

இருட்டால் போர்த்தப்பட்ட வெளி

வேறுபடுத்தலின்மையால்

ஏதுமின்மையாக ஆகிய வெளி

அது நீராக இருந்தது

அதன் பிறப்பு

வெறுமையால் மூடப்பட்டிருந்தது!

தன் முடிவற்ற தவத்தால்

அது சத்தாக ஆகியது

அந்த ஒருமையில்

முதலில் இச்சை பிறந்தது

பின்னர் பீஜம் பிறந்தது

அவ்வாறாக அசத் உருவாயிற்று!

ரிஷிகள்

தங்கள் இதயங்களை சோதித்து

அசத்தில் சத்தைக் கண்டடைந்தனர்

அதன் கதிர்கள்

இருளில் பரந்தன

ஆனால் ஒருமையான அது

மேலே உள்ளதா?

அல்லது கீழே உள்ளதா?

அங்கு படைப்புசக்தி உண்டா?

அதன் மகிமைகள் என்ன?

அது முன்னால் உள்ளதா?

அல்லது பின்னால் உள்ளதா?

திட்டவட்டமாக யாரறிவார்?

அதன் மூலகாரணம் என்ன?

தேவர்களோ

சிருஷ்டிக்குப் பின்னர் வந்தவர்கள்!

அப்படியானால் அது எப்படிப்பிறந்தது?

யாருக்குத்தெரியும் அது?

அதை யார் உண்டுபண்ணினார்கள்

அல்லது உண்டுபண்ணவில்லை?

ஆகாய வடிவான அதுவே அறியும்

அல்லது

அதுவும் அறியாது!

மூலம்

சம்ஸ்கிருதம்

नासदासीन्नो सदासीत्तदानीं नासीद्रजो नो व्योमा परो यत् |

किमावरीवः कुह कस्य शर्मन्नम्भः किमासीद्गहनं गभीरम् ॥ १॥

न मृत्युरासीदमृतं न तर्हि न रात्र्या अह्न आसीत्प्रकेतः |

आनीदवातं स्वधया तदेकं तस्माद्धान्यन्न परः किञ्चनास ॥२॥

तम आसीत्तमसा गूहळमग्रे प्रकेतं सलिलं सर्वाऽइदम् |

तुच्छ्येनाभ्वपिहितं यदासीत्तपसस्तन्महिनाजायतैकम् ॥३॥

कामस्तदग्रे समवर्तताधि मनसो रेतः प्रथमं यदासीत् |

सतो बन्धुमसति निरविन्दन्हृदि प्रतीष्या कवयो मनीषा ॥४॥

तिरश्चीनो विततो रश्मिरेषामधः स्विदासीदुपरि स्विदासीत् |

रेतोधा आसन्महिमान आसन्त्स्वधा अवस्तात्प्रयतिः परस्तात् ॥५॥

को अद्धा वेद क इह प्र वोचत्कुत आजाता कुत इयं विसृष्टिः |

अर्वाग्देवा अस्य विसर्जनेनाथा को वेद यत आबभूव ॥६॥

इयं विसृष्टिर्यत आबभूव यदि वा दधे यदि वा न |

यो अस्याध्यक्षः परमे व्योमन्त्सो अङ्ग वेद यदि वा न वेद ॥७॥

ஒலிவடிவங்கள்

விளக்கங்கள்

படைப்புக் கொள்கை

சிருஷ்டிகீதம் பிற மதநூல்களில் உள்ளதுபோன்று பிரபஞ்சம் எப்படி உருவானது அல்லது உருவாக்கப்பட்டது, இறைசக்தியின் இடம் என்ன ஆகிய வினாக்களுக்கான விளக்கங்களை அளிப்பது அல்ல. அது ஒரு கவித்துவ வெளிப்பாடு. இப்பிரபஞ்சத்தின் உள்ளுறையாக ஓர் அறியமுடியாத முழுமை உள்ளது என்ற வியப்பு மட்டுமே அதில் வெளிப்படுகிறது. வேதங்களுக்கு உரை எழுதிய சாயனர் சிருஷ்டிகீதம் தொன்மையான இந்து மெய்யியல் மரபின் பிரபஞ்ச உருவாக்கம் சார்ந்த கொள்கை என மதிப்பிடுகிறார். (1)

வேதாந்தம்

சிருஷ்டிகீதம் முன்வைக்கும் அடிப்படையான தரிசனம் பிரம்மத்தைப் பற்றியது என்று வேதாந்த மரபு கருதுகிறது. பிரம்மம் அறியமுடியாதது, எல்லாவகையான விளக்கங்களுக்கும் அப்பாற்பட்ட ஒரு பெருந்திகைப்பாக மட்டுமே உணரத்தக்கது என்று இப்பாடல் கூறுகிறது. அதை ஒரு முதல்முழுமையாகவும் ஒருமையாகவும் உணர்கிறது. இந்தப்பாடலில் இருந்தே வேதாந்தம் தொடக்கம் கொண்டது என்று டாக்டர் சர்வப்பள்ளி ராதாகிருஷ்ணன் போன்ற ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.(2)

ஐயவாதப் பார்வை

இந்தப்பாடலில் ஐயவாதம் சார்ந்த பார்வை (Skepticism) வெளிப்படுவதாக எம்.என். ராய் போன்ற இடதுசாரி ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர் (3) அறியமுடியாமைவாதம் (Agnosticism) வெளிப்படுவதாகவும் கே. தாமோதரன் அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். (4)

இறைமறுப்புப் பார்வை

கார்ல் சகன் போன்ற நவீன இயற்பியல் அறிஞர்கள் இந்தப்பாடலில் தொன்மையான இறைமறுப்பு நோக்கு வெளிப்படுவதாக கருதுகிறார்கள் (5)

மதிப்பீடுகள்

  • கே. தாமோதரன் ‘இந்த மிக அழகிய பாடல் தொடக்ககால ஆரியர்களின் ஆன்மிகத்தேடலின் மகத்தான உதாரணம்’ என்று குறிப்பிடுகிறார்.
  • இந்தியவியல் ஆய்வாளரான குஞ்ஞன்ராஜா “இங்கே நாம் பொருளில் இருந்து வேறுபட்ட தன்னிலை எதையும் காணவில்லை.நாம் இங்கே காண்பது நம் நிரூபணவாத பார்வையில் பொருளாகவும் செயலாகவும் பிரிந்தியங்கும் முடிவின்மை, முழுமுதல் உண்மை ஒன்று முடிவின்மையில் அமைந்திருக்கும் வாழ்க்கைக்கொள்கை. இதில் இறையின்மைவாதம் மிகத் தெளிவாக உள்ளது, இது இந்த உலக இயக்கத்திற்கு வெளியே ஒரு தெய்வம் தேவையில்லை என்னும் சாங்கிய மரபின் இறையின்மை வாதம். பிரபஞ்சப் பரிணாமம் ஒரு முடிவின்மையில் இருந்து உருவாகிறது, அந்த முடிவின்மை தன்னுள் வாழ்க்கையின் எல்லா விசைகளையும் கொண்டிருக்கிறது” (6)
  • சிருஷ்டிகீதத்தின் மொழியாக்கத்தை விவேகானந்தர் செய்திருக்கிறார் (7) பிரபஞ்ச உருவாக்கம் பற்றிய நவீன அறிவியல் கருதுகோள்களை விட கூர்மையான கருதுகோள் சிருஷ்டிகீதத்தில் உள்ளது என்று கருதினார். பிராணன் (ஆற்றல்) ஆகாசம் (பிரபஞ்சம்) இரண்டும் ஒன்றிலிருந்து வந்தவை என்று நாசதீயசூக்தம் கூறுகிறது என்று அவர் நினைத்தார் (8)
  • ஆனந்த குமாரசுவாமி இந்து மரபு தொடக்கத்தில் தனித்தனி தேவர்களை வழிபட்டு காலப்போக்கில் அவை ஒரே தெய்வமே என கண்டுகொண்டது என்னும் கருத்து பிழையானது என்றும், மிகத்தொல்காலத்தில் வேதங்களின் மையத்தரிசனமாகவே ஒருமையை கண்டடைந்துவிட்டது என்றும், பிற்காலத்தில் அதை பன்மையாக விரித்துக்கொண்டது என்றும் கருதுகிறார் (9)
  • சர்வப்பள்ளி ராதாகிருஷ்ணன் “இந்த பாடலில் நாம் படைப்பு குறித்த மிக வளர்ச்சியடைந்த கொள்கையை காண்கிறோம். முதன்மையாக இதில் இருத்தல் இன்மை என்னும் இருமை இல்லை” என்று குறிப்பிடுகிறார் . இதுவே பிற்காலத்தைய வேதாந்த கருத்துக்களின் ஊற்றுப்புள்ளி என கருதும் ராதாகிருஷ்ணன் “இதன் கடைசி வரி யாரறிவார் என்பது படைப்பின் மர்மத்தைச் சுட்டுகிறது, அதுதான் பிற்கால மாயை என்னும் கருதுகோளின் தொடக்கம்” என்கிறார்

உசாத்துணை

குறிப்புகள்

  1. Rig-veda : Text with Sayana's commentary and a literal prose English translation Sāyaṇa, Manmatha Nath Dutt
  2. Indian philosophy, Volume 1 by Radhakrishnan, S. (Sarvepalli)
  3. Materialism- M.N.Roy Internet Archives
  4. Indian Thought, K Damodaran, archive.org
  5. Cosmos: A Personal Voyage (1980-1981) Carl Sagan, Ann Druyan,Steven Soter
  6. Poet Philosophers Of The Rgveda- DR C. KUNHAN RAJA . Internet Archives
  7. விவேகானந்தரின் மொழியாக்கம், சிருஷ்டிகீதம்
  8. Swami Vivekananda: Bridging the Cartesian Divide of Science and Religion Swami Samarpanananda
  9. New Approach To The Vedas by Coomaraswamy, Ananda K. Internet Archives