சித்திரக்கவிகள்

From Tamil Wiki
Revision as of 21:26, 28 June 2022 by ASN (talk | contribs) (para created)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

தமிழின் 96 வகைச் சிற்றிலக்கியங்களுள் ஒன்று 'சித்திரக் கவி.' “மிறைக்கவி” என்றும் இது அழைக்கப்படுகிறது. ஞானசம்பந்தர், பகழிக் கூத்தர், பாம்பன் சுவாமிகள், பிச்சு ஐயங்கார் போன்ற பலரது பாடல்கள் ‘சித்திரக்கவி’ வடிவில் அமைந்துள்ளன. திருஞானசம்பந்தர் இயற்றிய '‘திருவெழுக்கூற்றிருக்கை’ என்பதே தமிழின் முதல் சித்திரக்கவியாகக் கருதப்படுகிறது. இவ்வகைச் சித்திரக்கவிகளை இயற்றுவதற்கு செய்யுள் பாடுமறிவு மட்டுமல்லாமல், துல்லியமான இலக்கண அறிவும், கணித அறிவும் தேவை.

சித்திரக்கவி இலக்கணம்

ஒரே எழுத்து திரும்பத் திரும்ப எத்தனை முறை வரவேண்டும், அது எந்த வகையில் பொருள் கொள்ளப்பட வேண்டும், எத்தனை எழுத்துக்கள் ஒரு பாடலில் இருக்க வேண்டும், மாலை மாற்றாக அந்தச் செய்யுள் வரும்போது எழுத்துக்களை எந்தெந்த வகையில் அமைக்க வேண்டும் என்பதற்கெல்லாம் விதிமுறைகள் உள்ளன. சித்திரக்கவிகளை எப்படி அமைப்பது, அதனை எப்படிப் பாடுவது என்பதற்கான விளக்கங்கள் “தண்டியலங்காரம்”, ‘மாறனலங்காரம்”, “குவலயானந்தம்” போன்ற நூல்களில் காணப்படுகின்றன.

சித்திரக்கவியின் வகைகள்

சித்திரக்கவியின் வகைகள் பற்றி,

“மாலை மாற்றே சக்கரஞ் சுழிகுள

மேகமாத மெழுகூற் றிருக்கை

காதை கரப்பே கரந்துறைப் பாட்டே

தூசங் கௌலே வாவன் ஞாற்றே

பாத மயக்கே பாவின் புணர்ப்பே

கூட சதுக்கங் கோமூத் திரியே

யோரெழத் தினத்தா னுயர்ந்த பாட்டே

யொற்றுப் பெயர்த்த வொருபொருட் பாட்டே

சித்திரப் பாவே விசித்திரப் பாவே

விற்ப நடையே வினாவுத் தரமே

சருப்பதோ பத்திரஞ் சார்ந்த வெழுத்தே

வருக்கமு மற்றும் வடநூற் கடலு

ளொருக்குடன் வைத்த வுதாரண நோக்கி

விரித்து நிறைத்து மிறைக்கவிப் பாட்டுத்

தெரித்துப் பாடுவது சித்திர கவியே.”

- என்று “சித்திரக் கவிகள்” பற்றி மிக விரிவான விளக்கத்தைத் தருகிறது பிங்கல முனிவர் எழுதிய ‘பிங்கல நிகண்டு.

ஏக பாத மெழுகூற் றிருக்கை

காதை கரப்புங் கரந்துறைச் செய்யுள்

கூட சதுக்கங் கோமூத் திரிமுதல்

தெரிந்து பாடுவோன் சித்திரக் கவியே

- என்கிறது இலக்கண நூலான முத்து வீரியம் (பாடல் - 1019)

சித்திரக் கவி - பெயர் விளக்கம்

சித்திரம் என்பதற்கு ஓவியம், சிறப்பு, அழகு, அலங்காரம், அதிசயம் என்னும் பல பொருள்களைத் தமிழ்ப் பேரகராதி குறிப்பிடுகிறது. இவை அனைத்தையும் தன்னகத்தே கொண்டதாக அமைவதே சித்திரக்கவி.

சித்திரக் கவி - பிரிவுகள்

சித்திரக் கவியில் இரண்டு பிரிவுகள் உள்ளன.

1. சொற் சித்திரம்

2. வடிவச் சித்திரம்

சொற் சித்திரம்

சொல் விளையாட்டுக்களாய் அமைவது சொற் சித்திரக் கவி ஆகும்.

ககரம், சகரம், தகரம், என ஒரே வர்க்கமாக அமையும் செய்யுள், உதடு ஒட்டாமல் பாடப்படும் செய்யுள், உதடு குவிந்து பாடப்படும் செய்யுள், வல்லினம், மெல்லினம், இடையினம் ஆகியவற்றுள் ஏதேனும் ஒன்றை மட்டுமே கொண்டதாக அமையும் செய்யுள் போன்றவை சொற் சித்திரக்கவிகளுக்கு உதாரணங்களாகும்.

வர்க்கப்பாட்டு (தகரம்)

தத்தித்தா தூதுதி தாதூதித் தத்துதி

துத்தித் துதைதி துதைதத்தா தூதுதி

தித்தித்த தித்தித்த தாதெது தித்தித்த

தெத்தாதோ தித்தித்த தாது.

ஓரினப் பாட்டு (வல்லினம்)

தெறுக தெறுக தெறுபகை தெற்றால்

பெறுக பெறுக பிறப்பு

இதழ் ஒட்டாதது

சீரார் செகத்தில் திகழ்சார சரத்தைத்

தேரார் கரத்தாற் செய்தளித் தாண்ட

தண்ணளித் தடங்கடற் றனியிணை யடி தனை

எண்ணி ஏத்தி இறைஞ்சினன் சித்திரஞ்

சேரணி இலக்கணம் செழித்திட யானே

இதழ் குவிவது

பம்மும்பம் மும்பம் முமம்மம் மமைமாமை

பம்முமம்ம மும்மேமம் பாம் (மாறனலங்காரம் - 772)

 வடிவம்

ரதம், பாம்பு, மயில், சேவல், வேல், லிங்கம் போன்ற ஓவியங்களில் செய்யுட்களைப் பொருத்திப் பாடப்படுவதை வடைவச் சித்திரக்கவிகளுக்கு உதாரணமாகக் கொள்ளலாம். செய்யுட்களை இவ்வகைச் சித்திரங்களில் பொருத்த ஒவ்வொரு வகைச் சித்திரங்களுக்கும் தனித் தனி விதிமுறைகள் உள்ளன. உதாரணமாகச் சொன்னால் ஒரே  எழுத்து செய்யுளின் வேறு வேறு இடங்களில் திரும்பத் திரும்ப வரக்கூடும். செய்யுளின் மொத்த எழுத்துக்களின் எண்ணிக்கை, சித்திரத்தில் அவை பொருந்தும் வகை என்பனாவற்றையெல்லாம் அடிப்படையாக வைத்து செய்யுளை இயற்ற வேண்டும். இல்லாவிட்டால் செய்யுள் சித்திரத்தில் பொருத்தமாக அமையாது.

சித்திரக்கவி இலக்கண நூல்கள்

சித்திரக் கவி பற்றி இலக்கணம் பற்றித் தமிழில் பல நூல்கள் உள்ளன. அவற்றில் முதல் நூலாகத் திவாகர நிகண்டு கருதப்படுகிறது. பிங்கல நிகண்டு, சூடாமணி நிகண்டு போன்றவற்றிலும் சித்திரக் கவி வகைகளும், அதற்கான வழிமுறைகளும் கூறப்பட்டுள்ளன.

யாப்பருங்கலம், வீரசோழியம், தண்டியலங்காரம், மாறனலங்காரம், இலக்கண விளக்கம், முத்துவீரியம், சுவாமிநாதம், குவலயானந்தம் போன்ற இலக்கண நூல்களில் சித்திரக் கவியின் வகைகள், அவை பாடப்பட வேண்டிய முறைகள் பற்றி விரிவாக விளக்கியுள்ளன.

தமிழின் முன்னோடி சித்திரக் கவிஞர்கள்

திருஞானசம்பந்தர்

திருமங்கை ஆழ்வார்

பகழிக்கூத்தர்

அருணகிரிநாதர்

பிச்சு ஐயங்கார்

வி.கோ. சூரிய நாராயண சாஸ்திரியார்

பாம்பன் சுவாமிகள்

வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்

அரசஞ்சண்முகனார்

ஆ.ப. சுவாமிநாத சர்மா

புலவர் பி.வி. அப்துல்கபூர்

இக்குவனம் (சிங்கப்பூர்)

சித்திரக்கவி நூல்கள்