first review completed

சிதம்பர மும்மணிக்கோவை

From Tamil Wiki
Revision as of 11:04, 16 August 2023 by Madhusaml (talk | contribs)

சிதம்பர மும்மணிகோவை (பொ.யு. பதினேழாம் நூற்றாண்டு) தில்லை நடராஜ மூர்த்தியைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்ட மும்மணிகோவை என்ற வகைமையில் அமைந்த சிற்றிலக்கியம்.

ஆசிரியர்

சிதம்பர மும்மணிகோவையை இயற்றியவர் குமரகுருபரர். குமரகுருபரர் தருமையாதீனக் குருமகா சந்நிதானத்தின் வேண்டுதலின் பேரில் தில்லையில் இருந்தபோது தான் பெற்ற இறையனுபவத்தை சிதம்பர மும்மணிகோவையில் பாடினார்.

நூல் அமைப்பு

மும்மணிக்கோவையின் இலக்கணத்திற்கேற்ப சிதம்பர மும்மணிகோவையில் 30 பாடல்கள் மும்மணிகளான புஷ்பராகம், கோமேதகம், வைடூரியம் என்ற மூன்று மணிகள் சேர்ந்ததைப்போல் நேரிசை ஆசிரியப்பா, வெண்பா, கட்டளைக் கலித்துறை என்ற முறையில் மாறி மாறி வருமாறு அடுக்கு அந்தாதியாக அமைந்துள்ளன. சிதம்பர மும்மணிப் கோவையிலுள்ள 474-ஆம் பாடல் மாத்திரம் அகத்துறைப்பாடலாக அமைந்தது.

காசிக்குச் செல்வதில் உள்ள துன்பங்களும், அபாயங்களும் சிதம்பரத்திற்குச் சென்று தரிசனம் செய்யும் எளிமையும்

காசியி லிறத்த னோக்கித் தேசம்விட்
டறந்தலைத் தந்த வரும்பொரு டாங்கிப்
....
சிற்றுயிர்க் கிரங்கும் பெரும்பற்றப் புலியூர்
உற்றநின் றிருக்கூத் தொருகா னோக்கிப்
பரகதி பெறுவான் றிருமுன் பெய்தப்

என்ற வரிகளில் உணர்த்தப்படுகின்றன. தில்லைக் கூத்தன் நிகழ்த்தும் ஐவகைத் தொழில்கள்(படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல்) , துறவியர்க்குரிய எட்டு இலக்கணங்கள் (ஊணசையின்மை-உணவின் மீது நாட்டமின்மை, நீர் நசையின்மை -நீரிமேல் ஆசையின்மை, வெப்பம் பொறுத்தல், குளிர் பொறுத்தல், இடம் வரையறுத்தல், ஆசனம் வரையறுத்தல், இடையிட்டு மொழிதல், வாயவாளாமை ), முக்தியளிக்கும் மூன்று தலங்கள் (திருவாரூர், காசி, தில்லை) ஆகியவை கூறப்பட்டுள்ளன. சிதம்பரம் ஒரு தாமரை மலருக்கு ஒப்பிடப்பட்டு விராட புருஷனின் அனாகதம்(இதயம்) என்று சொல்லப்படுகிறது. தில்லைக் கூத்தனுடன் சிதம்பரத்தில் கோவில் கொண்ட கோவிந்தராசப் பெருமாளையும் பாடுகிறார் குமரகுருபரர்.

பதஞ்சலி முனிவர் செய்த தவத்தினால் மகிழ்ந்து சிவபெருமான் புலித்தோல் உடுத்தி, உடுக்கை, அனல், மான், மழு, நாகாபரணம் அணிந்து, வலக்கையால் உடுக்கையை அடித்தும், இடக்கையில் அக்னி ஏந்தியும், ஒருகையால் அபயம் அளித்தும், மறுகையால் பாதத்தைக் காட்டியும் நடனமாடிய கோலம் பாடப்படுகிறது. ஆனந்த நடனம் பிரணவத்தில் வடிவம் என்றும் கூறப்படுகிறது.

பாடல் நடை

நேரிசை வெண்பா

மன்றம் பொகுட்டா மதிலிதழா மாடங்கள்
துன்றும் புயல்கள் சுரும்பராப் - பொன்றங்கும்
நற்புண்ட ரீகமே யொக்கு நடராசன்
பொற்புண்ட ரீக புரம் 3

நேரிசை ஆசிரியப்பா

வலன்உயர் சிறப்பில் புலியூர்க் கிழவ! நின்
பொன்னடிக்கு ஒன்று இது பன்னுவன், கேண்மதி,
என்று நீ உளை, மற்று அன்றே யான் உளேன்;
அன்றுதொட்டு இன்றுகாறு அலமரு பிறப்பிற்கு
வெருவரல் உற்றிலன் அன்றே! ஒருதுயர்
உற்றுழி உற்றுழி உணர்வதை அல்லதை
முற்று நோக்க முதுக்குறைவு இன்மையின்,
முந்நீர் நீந்திப் போந்தவன் பின்னர்ச்
சின்னீர்க் கழிநீத்து அஞ்சான், இன்னும்
எத்துணைச் சனனம் எய்தினும் எய்துக,
அத்த! மற்று அதனுக்கு அஞ்சலன் யானே,
இமையாது விழித்த அமரரில் சிலர், என்
பரிபாகம் இன்மை நோக்கார், கோலத்
திருநடங் கும்பிட்ட ஒருவன் உய்ந்திலனால்,
சுருதியும் உண்மை சொல்லா கொல் என,
வறிதே அஞ்சுவர், அஞ்சாது
சிறியேற்கு அருளுதி செல்கதிச் செலவே.

உசாத்துணை



🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.