சிங்காரவேலர்

From Tamil Wiki
Revision as of 13:59, 24 May 2022 by Navingssv (talk | contribs) (Created page with "சிங்காரவேலர் (பிப்ரவரி 18, 1860 - 1946) எழுத்தாளர், விடுதலைப் போராட்ட வீரர், பொதுவுடைமைச் சிந்தனையாளர். == பிறப்பு, கல்வி == சிங்காரவேலர் சென்னை மைலாப்பூரில் பிப்ரவரி 18, 1860 அன்று வெங்கடாசலம...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

சிங்காரவேலர் (பிப்ரவரி 18, 1860 - 1946) எழுத்தாளர், விடுதலைப் போராட்ட வீரர், பொதுவுடைமைச் சிந்தனையாளர்.

பிறப்பு, கல்வி

சிங்காரவேலர் சென்னை மைலாப்பூரில் பிப்ரவரி 18, 1860 அன்று வெங்கடாசலம் செட்டியார், வள்ளியம்மையார் இணையருக்கு மூன்றாம் மகனாகப் பிறந்தார். சிங்காரவேலரின் குடும்பம் சைவ சமயத்தவர்கள்.

சிங்காரவேலர் தன் ஆரம்பப் பள்ளியை திண்ணைப் பள்ளிக் கூடத்திலும், பின் இந்து உயர்நிலைப் பள்ளியிலும் பயின்றார். 1881 ஆம் ஆண்டு மெட்ரிக்குலேசன் தேர்வில் தேர்ச்சி பெற்றார். 1884-ல் எஃப்.ஏ. தேர்வில் சென்னை கிறிஸ்துவக் கல்லூரியில் தேர்ச்சிப் பெற்றார். சிங்காரவேலரின் குடும்பம் பர்மாவிலிருந்து அரிசியையும், தேக்கு மரத்தையும், கடல் வழியாகக் கொண்டு வந்து தமிழகத்தில் வணிகம் செய்தனர். சிங்காரவேலரும் குடும்ப வணிகத்தில் ஈடுபட்டதால் அவரது கல்வி பாதியிலேயே நின்றது.

பின்னர் மாநிலக் கல்லூரியில் சேர்ந்து இளங்கலைப் பட்டத்தையும் (பி.ஏ), சட்டக்கல்லூரியில் பி.எல் பட்டத்தையும் பெற்றார்.

தனி வாழ்க்கை

நவம்பர், 1907 சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கறிஞராகப் பதிவு செய்தார். இவர் அலுவலகம் பாரிஸ் கார்னர் சுபாஷ் சந்ஹ்டிரபோஸ் சாலையில் இருந்த ஜேக்கப் அண்டு கம்பெனியின் முதல் மாடியில் இருந்தது. 1889 ஆம் ஆண்டு அங்கமையைக் காதல் திருமணம் செய்துக் கொண்டார்.

பொது வாழ்க்கை

பௌத்தம்

சிங்காரவேலரின் குடும்ப சைவ சமயத்தைப் பின்பற்றிய போதும் இவர் பௌத்தம் மேல் ஈடுபாடுக் கொண்டார். சிங்காரவேலர் தன் இல்லத்திலேயே ’மகாபோதி சங்கம்’ என்ற பெயரில் சங்கம் ஒன்றை அமைத்து ஒவ்வொரு திங்கள்கிழமையும் பௌத்த கொள்கைகளைப் பற்றி கூட்டத்தை ஒருங்கிணைத்தார். அதில் அயோத்திதாஸ பண்டிதர், இலட்சுமி நரசு நாயுடு (பச்சையப்பன் கல்லூரித் தத்துவப் பேராசிரியர்) போன்றோர் உரையாற்றினர். இந்நிகழ்வுகளை திரு.வி.க தன் ‘வாழ்க்கைக் குறிப்புகள்’ நூலில் குறிப்பிட்டுள்ளார்.

1899 புத்தரின் நினைவு ஆண்டை தன் இல்லத்தில் கொண்டாடினார். 1902-ல் லண்டனில் நடந்த உலக பௌத்தமத மாநாட்டில் பங்கேற்றார். பௌத்த மதம் கூறும் சமத்துவ நோக்கு சிங்காரவேலரைக் கவர்ந்ததால் அதன் விளைவாக மார்க்சிய சிந்தனையும் அவரை ஈர்த்தது.

மார்க்சியம்

1900 ஆம் ஆண்டு முதல் மார்க்சிய நூல்கள் அவருக்கு அறிமுகமாயின. 1917 இல் நடந்த சோவியத் புரட்சி மார்க்சியம் மீது அவரது ஈர்ப்பை மேலும் தூண்டின. பிரிட்டிஷ் ஆட்சியில் பொதுவுடைமை நூல்கள் தடை செய்யப்பட்டிருந்தன. புதுச்சேரியின் உள்ள தன் உறவினர்களின் உதவியால் வெளிநாட்டிலிருந்து கப்பல் வழியாக நூல்களை சென்னை கொண்டு வந்தார்.

1922-ல் கயாவில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் ‘Dear Comrades, உலக கம்யூனிஸ்டுகள் சார்பாக நான் இங்கு வந்துள்ளேன்.’ எனத் தொடங்கி பொருள் உற்பத்தியில் ஈடுபடும் தொழிலாளர்களைத் திரட்டுவது பற்றி பேசினார். அவ்வுரையில் பூரண விடுதலைக் குறித்த தீர்மானத்தை முன்வைத்தார். 1920 முதல் மார்க்சியரான எம்.என். ராய்யுடன் கடிதத் தொடர்பில் இருந்தார்.