சிகண்டி (நாவல்)

From Tamil Wiki

சிகண்டி மலேசிய தமிழ் எழுத்தாளர் ம.நவீன் எழுதிய நாவல். மலேசிய சூழலுக்கு மட்டுமல்லாமல் பொதுவாக தமிழ் இலக்கியத்தில் எழுதப்பட்ட திருநங்கையர் வாழ்வும், நாம் அதிகம் அறிந்திடாத நிழல் உலகம் பற்றி சித்திரமும் அடங்கிய நாவல் இது. 2021 இறுதியில் யாவரும் பதிப்பகம் வெளியீடாக வந்தது.

File:சிகண்டி.jpg
சிகண்டி நாவல்

பதிப்பு

ம.நவீன் இந்த நாவலை 2021 ஆண்டு முற்பாதியில் எழுதி முடித்தார். கொரோனா பாதிப்பு காரணமாக பல கட்ட அச்சு தடங்கலுக்கு பின் 2021 ஆம் ஆண்டின் இறுதியில் யாவரும் வெளியீடாக இந்த நாவல் வந்தது.

கதைச்சுருக்கம்

இந்நாவலின் மையக்கதாப்பாத்திரம் தீபன் என்னும் இருபது வயதை கடந்த வாலிபன். குடும்ப சூழ்நிலை காரணமாக லுனாஸிலிருந்து தீபன் கோலாலம்பூர் வருகிறான். கோலாலம்பூரில் இருக்கும் காராட் வீதி, சௌவாட் ஆகிய நிழலுலகங்களே இந்நாவலின் களம். கோலாலம்பூர் வந்த தீபனுக்கு இந்த உலகம் அறிமுகமாகிறது. இங்கே அவனுக்கு திருநங்கை பெண்ணான சராவும், நிழலுலகில் வாழும் காசியும் அறிமுகமாகிறார்கள்.

அதுவரை அனுபவம் இல்லாத ஒரு புதிய உலகம் அவனுக்கு பரிட்சியமில்லாத உலகில் அவன் நுழைய அவனுள் உள்ள சிறுவன் அவனை உந்துகிறான். அந்த நிழலுலகின் பிம்பங்களாக தீபனிடம் வன்மத்தை புகுத்த காசியும், ஷாவும் வருகின்றனர். அவனிடம் பணத்தை பறிக்க அமிர்கான் வருகிறான். அதன் மறு எல்லையில் அவனுக்கு அன்பை மட்டுமே வழங்க திருநங்கையான சரா வருகிறாள். சரா திருநங்கை என உணர்ந்த தருணத்தில் தொடங்கி அவர்கள் பாலினத்தின் கடவுளான பகுச்சரா மாதாவை தீபன் எப்படி கண்டடைகிறான் என்ற கேள்வியில் நாவல் முடிகிறது.

கதைமாந்தர்

  • தீபன் - கதைநாயகன்.
  • சரா - திருநங்கை. தீபனின் காதலி
  • ஈபு - திருநங்கை உலகத்தின் அன்னையாக கருதப்படுகிறவர்
  • நிஷாம்மா- சராவின் வளர்ப்பு அம்மா
  • காசி - சௌவாட்டில் தீபனுக்கு அறிமுகம் ஆகும் தீபனின் அண்ணன்
  • ஷாவ் - தீபன், காசி கேங்கின் தலைவர்
  • கண்ணன் - தீபனின் மாமா பையன்

பின்புலம்

சிகண்டி நாவலின் கோலாலம்பூரில் உருவாகி வந்த சௌகிட், பௌகிட் பிட்டாங், பெட்டாலிங் ஸிரீட் என்னும் நிழலுலக இடங்களின் பின்புலத்தில் எழுப்பட்ட நாவல் .

இலக்கிய இடம்

இந்நாவலுக்கு முன்னுரை எழுதிய எழுத்தாளர் ராஜகோபாலன், “ஓர் இலக்கிய வாசகன் இலக்கியத்திலிருந்து பெற்றுக் கொள்ளும் கொடைகளில் முக்கியமானது அவனறியா வாழ்க்கையை வாழ்ந்து பார்க்கும் அனுபவத்தையே. சிகண்டி இதுவரை தமிழ் இலக்கிய வாசகர்கள் அறியாத அல்லது மிகக்குறைவாகவே அறிந்த மலேசியத் திருநங்கையரின் வாழ்க்கையை அணுகி நின்று உடன் வாழும் அனுபவத்தை அதன் வாசகர்களுக்கு அளிக்கும் என்பதில் எனக்கு ஐயமில்லை.

நவீன தமிழ் இலக்கியத்தில் திருநங்கையரின் வாழ்வின் ஒரு பரிமாணத்தை மிக நேரடியாகவும், வெளிப்படையாகவும் பேசிய படைப்பு சு.வேணுகோபாலின் பால்கனிகள். தன்னைப் பெண்ணென பிறருக்கு நிரூபிக்க அத்தனை துயரையும் தாங்கும் அக்கதையின் நாயகி இறுதியில் ஒரு குழந்தையைத் தத்தெடுத்து தாயாகி நிறைவுறும் கணம் நவீனத் தமிழிலக்கியத்தின் உச்சக்காட்சிகளில் ஒன்று. அதன் முழு பரிமாணங்களையும் சிகண்டியில் உணர முடிவதுதான் தமிழ் இலக்கியத்தின் அடுத்த கட்ட பாய்ச்சல் என்பேன்” என்கிறார்.

உசாத்துணை

  • சிகண்டி - ம.நவீன் (யாவரும் வெளியீடு)